என் மலர்
நீங்கள் தேடியது "விண்ணப்பங்களை தேர்வு செய்வதற்கான பயிற்சி"
- தகுதியான விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்க 10 ஒன்றியங்களிலிருந்து 40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி இன்று வழங்கப்பட்டது.
- விண்ணப்ப படிவங்கள் நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்வதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதாந்தோறும் ரூ.1000 செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு தகுதியான விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்க 10 ஒன்றியங்களிலிருந்து 40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி இன்று வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில், தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்வது குறித்தும், விண்ணப்பங்கள் பதிவு செய்வது குறித்தும், தகுதியான நபர்கள் என்னென்ன விவரங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் அந்தந்த ஒன்றியங்களில் முகாமில் விண்ணப்பங்களை இணைய வழியில் ஏற்ற உள்ள தன்னார்வர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர். இதனால் 1978 தன்னார்வலர்கள் பயிற்சி பெற உள்ளனர். விண்ணப்ப படிவங்கள் நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
மேலும், முகாமிற்கு பயனாளர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் வர வேண்டும் என்பதற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. பயனாளர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர் ஜான் பம்ஸ், மின் ஆளுமை திட்ட மேலாளர் வினோத் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.






