search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர்களை ஏமாற்றும் மர்ம கும்பல்: அதிக சம்பளம் தருவதாக கூறி ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.19 லட்சம் மோசடி
    X

    இளைஞர்களை ஏமாற்றும் மர்ம கும்பல்: அதிக சம்பளம் தருவதாக கூறி ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.19 லட்சம் மோசடி

    • கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
    • இளைஞர்களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அம்மன் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கலையரசன் (வயது29). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனில் வாஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதி நேர வேலையில் சிறிய முதலீடு செய்தால், அதிக சம்பளமும், அதிக கமிஷன் தொகையும் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை நம்பிய கலையரசன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டபோது, எதிர் முனையில் பேசிய மர்ம நபர்கள் குறிப்பிட்ட தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே அவர்கள் கூறிய வங்கி கணக்கில் கலையரசன் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபர்கள் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது மர்ம நபரின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர். இதுகுறித்து கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று ஓசூர் பத்தலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (39). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கும் முன்பு அதிக சம்பளத்தில் பகுதி நேர வேலை தருவதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதனை நம்பிய அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு அவர் அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து படித்த இளைஞர்களை குறிவைத்து இதேபோன்று ஆன்லைன் மூலம் பணமோசடியில் ஈடுபடும் மர்ம கும்பலை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், ஆன்லைன் மூலம் மோசடி நடைபெறுவதை தவிர்க்க இளைஞர்களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×