என் மலர்
கரூர்
- குளித்தலை அருகே பைக் மாயமானதாக போலீசில் புகார் கொடுக்கபட்டது
- இதுகுறித்து புகாரின்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர்:
குளித்தலை அடுத்த,கொசூர் பஞ்., குப்பமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 33). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பின்னர் இதுகுறித்து புகாரின்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கரூர் ஜெய்ராம்ஸ் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கபட்டது
- சிறப்பு அழைப்பாளராக கோவை ஈஷா யோகா மைய பயிற்சியாளர் சிவசங்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கினார்.
கரூர்,
கரூர், காக்காவாடி ஆட்டாம்பரப்பில் உள்ள ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 2023-24-ம் கல்வியாண்டிற்கான முதலா மாண்டு மாணவர்களின் வகுப்பு தொடக்கவிழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் பொறியாளர் ஆர். ராமசாமி தலைமை தாங்கி பேசுகையில், தற்போதைய கல்வி கற்கும் சூழ்நிலையை எடுத்து கூறி கல்லூரியில் உள்ள எண்ணற்ற வசதிகளை நன்கு பயன்படுத்தி வாழ்வில் மேன்மை அடைய வேண் டும் என்றார்.
கல்லூரி முதல்வர் ஜே.ஸ்டீபன் ராஜா சிறப் புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக இன்கிளைன் டிரைனர் நிறுவனத்தின் சி.இ.ஓ. யுவராஜ் கண்ணன் கலந்து கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தி இன்றைய சமுதாய சூழ் நிலைகளையும், மாணவர்கள் கல்வி திறன் மேம்பாட்டை எவ்வாறு மேம்படுத்துவது என்று எடுத்து கூறினார். இதில், பேராசிரியர்கள், அனைத்து முதலாமாண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஜெய்ராம்ஸ் கலை-அறிவியல் கல்லூரியில் முன்னதாக உலகயோகா தினத்தை முன்னிட்டு ஜெய் கலை- லூரி, கோவை ஈஷா யோகா மையமும் இணைந்து உலக யோகா தின விழாவை கொண்டாடியது. இதற்குகல் லூரி தாளாளர் பொறியாளர் ஆர்.ராமசாமி தலைமை தாங்கினார். முதல்வர் ஜே.ஸ்டீபன் 'ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கோவை ஈஷா யோகா மைய பயிற்சியாளர் சிவசங்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கினார். இதில் கல்லூரி யின் அமைப்புகளான என். சி.சி., என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர். சி.மற்றும் பசுமை மன்றம் ஆகியவற்றை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டணர்.
- குளித்தலை அருகே மகள் மாயமானதால் தாய் போலீசில் புகார் கொடுத்தார்
- போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., தெற்கு வேதாச்சலம்புரத்தை சேர்ந்தவர் ஹஜிரா பேகம். இவரது மகள் ஷகானா பானு (வயது 19). ஹஜிரா பேகம், இவருடைய கணவர் சாகுல் அமீது இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக புதுக்கோட்டை மாவட்டம் கடியாக்குறிச்சிக்கு சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் தனது மகளை காணவில்லை என தாய் ஹஜிரா பேகம் கொடுத்த புகார்படி தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குளித்தலை அருகே தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது செய்யபட்டனர்
- காயமடைந்த இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சின்னையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 21). சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 18-ந் தேதி தனக்கு சொந்தமான ஆட்டோவில் இரும்பூதிப்பட்டி-பாப்பக்காபட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த சிவா (36), டிரைவர் சவுந்தரபாண்டியன் (47), கருணாநிதி (60), கோபி (32), மணிகண்டன் (29) ஆகிய 5 பேரும் நந்தகுமாரை வழி மறித்து தாக்க முயற்சித்தனர்.
இவர்களிடமிருந்து தப்பித்து நந்தகுமார் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து வீட்டுக்கு வந்த 5 பேரும் வீட்டு ஓடுகளை சேதப்படுத்தி டிரைவர் நந்தகுமாரையும், அவருடை தாயையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். பின்னர் நந்தகுமார் குளித்தலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் நந்தகுமாரை தாக்கிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் சிவா, சவுந்தரபாண்டியன், கருணாநிதி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- குளித்தலை கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது
- எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், கடம்பவனேஸ்வரர் ஆகிய கோவிலில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பூரணம் குணம் பெற வேண்டி 108 பெண்கள் குத்துவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில், முன்னால் நகர் மன்ற தலைவரும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பல்லவிராஜா, கரூர் மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன், கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், குளித்தலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சூரியனூர் சந்திரன், கரூர் மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் வாலாந்தூர் பழனிச்சாமி, குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, இரணியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா சரவணன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன், அரசு வழக்கறிஞர் சாகுல் அமீது, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, நகர துணை செயலாளர் கே எம் செந்தில்குமார், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கரூர் வள்ளுவர் அறிவியல்-மேலாண்மை கல்லூரியில் யோகா தின விழா கொண்டாட்டபட்டது
- நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 482 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியும் ஈஷா யோகா அறக்கட்டளையுடன் இணைந்து நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான யோகா என்னும் தலைப்பில் சிறப்ப கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் இருளப்பன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் ஹேமலதா செங்குட்டுவன் தலைமை தாங்கி, யோகாசனம் செய்வதன் மூலம் மனதை தெளிவுபடுத்துவது மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கரூர் ஈஷா அறக்கட்டளையின் மாஷீமா பங்கேற்று மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானம் கற்றுக் கொடுத்து யோகாவின் நன்மைகள் மற்றும் மன அழுத்தத்தைப் போக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும். மக்களிடையே ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், யோகாவின் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு கற்பித்தார். ஒருவரின் வாழ்க்கையிலும், வெற்றியிலும் யோகா எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் அவர் விவரித்தார்.
தனது யோகா பற்றிய அறிவை காணொளி காட்சி மூலமாகவும், மாணவர்களால் செய்யப்பட் யோகாசனங்கள் மூலமாகவும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வின் இறுதியில் சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு தினசரி யோகா மற்றும் தியானத்திற்கான சில குறிப்புகளை வழங்கினார். இது படிப்பில் கவனம் செலுத்த உதவும் என்றும் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 482 மாணவர்கள் கலந்து கொண்டனர். நவநாகரீக ஆடை வடிவமைப்பு துறைத்தலைவர் தலைவர் நதியா நன்றி கூறினார்.
- கரூர் மாவட்டத்தில் குவாரி, கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக மனு அளித்தனர்
- கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழில் சார்ந்த தனியார் கல்குவாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை செயல் பட்டு வருகின்றன.
கரூர்,
கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கா.பரமத்தி வட்டார குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழில் சார்ந்த தனியார் கல்குவாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை செயல் பட்டு வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் குவாரித்தொழில் செய்பவர்கள் முறையாக அரசு அனுமதி பெற்று உரிய வருவாயை முறையாக செலுத்தி வருகின்றனர். எங்களுடைய வரி வருவாய் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்வு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக தொழிலை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் இருந்து வருகிறது. இந்த நிலையில் குவாரி மற்றும் கிரசர் தொழிலில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான புகார்களை அழைத்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் நடவடிக்கைகள் காரணமாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளி மாவட்ட அதிகாரிகளை கொண்டு ஆய்வில் ஈடுபட்டு அபராதம் விதித்து தொழிலை முடக்கும் எண்ணத்தோடு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, குவாரி மற்றும் கிரசர் தொழிலை இன்று முதல் நிறுத்தி வைப்பதாக, கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் ஏக மனதாக முடிவு எடுத்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
- கரூரில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை மனு அளித்தார்
- நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்
கரூர்,
முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபு சங்கரை சந்தித்து, மனு அளித்தார். அப்போது, அமராவதி அணையில் 64 அடி உயரம் தண்ணீர் இருக்கிறது. குடிநீர் தேவைக்காக கடைமடை வரை தண்ணீரை திறக்க வேண்டும், 60 அடி தண்ணீர் இருந்தாலே திறக்கலாம் என விதி இருக்கிறது. தற்போது 64 அடி தண்ணீர் இருப்பு இருப்பதால், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும்.
அமராவதி ஆற்றின் துணை ஆறான குடகனாற்றில் வரும் கழிவு நீரில் 3,500 டி.டி.எஸ். உப்புத் தன்மை கலந்து வருவதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவு நீரை ஆற்றில் கலக்கும் நிறுவனத்தை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கரூரிலிருந்து கோவை மற்றும் ஈரோடு சாலைகள் பிரியும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வித்தியாசமான முறையில் ஸ்பீடு பிரேக் போடப்பட்டுள்ளது. அதில் வயதானவர்கள், பெண்கள் ஏறி இறங்கும் போது விபத்து ஏற்படுகிறது.
அதை அப்புறப்படுத்தி விட்டு தேசிய நெடுஞ்சாலையின் விதிகளுக்கு உட்பட்டு வேகத்தடை அமைக்க வேண்டும். தன்னுடைய டிரஸ்ட் சார்பில் வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் 3 முறை அதில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றுவது, தாரை ஊற்றி மரங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவற்றை தடுக்க வேண்டும். ஆண்டாங்கோவில் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி குப்பை கிடங்கில் மாதம் 10 ஆயிரம் செலுத்தி குப்பை கிடங்கில் கொட்டி வருகிறோம். அதனை கொட்ட அனுமதிக்காததால் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு, எரியூட்டும் நிலை உள்ளது. இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு மனு அளித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும், கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், பொது கூட்டம் நடத்த கேட்ட இடத்திக் அனுமதி தருவது இல்லை. நாம் கேட்கும் இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் நடத்தச் சொல்லி அலைக்கழிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றே போராட்டங்கள் நடத்தக் கூடிய சூழ்நிலை உள்ளது என்றார். இந்நிகழ்வின் போது மாவட்ட அவைத் தலைவர் திருவிகா, ஆலம் தங்கராஜ், கரூர் மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் சேரன் பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
- கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 94 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கரூர்,
கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுபானங்கள் கூடுதல் விலை விற்பனை தொடர்பாக துணை ஆட்சியர் தலைமையில் கிடங்கு மேலாளர், தாசில்தார், உதவி மேலாளர் உட்பட அதிகாரிகள் அடங்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டு கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 94 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மது விற்பனையாகும் கடைகளுக்கு பணியிடமாற்றம் செய்ய கோவை முதுநிலை மண்டல மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் கூடுதல் விலை விற்பனை செய்த 15 கடைப்பணியாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 800-ம், இந்த மாதத்தில் கூடுதல் விலை விற்பனை செய்த 17 கடைப்பணியாளர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 800-ம் அபராதமாக பெறப்பட்டு அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டது. இவ்வாறு அதில்
- தோகைமலை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது
- குளித்தலை கீதம் வெளியிட்டும் விஜய் ரசிகர்கள் அசத்தினர்
கரூர்,
நடிகர் விஜயின் 49-வது பிறந்த நாளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி கரூர் மாவட்டம் தோகைமலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் குளித்தலை ஒன்றிய தலைவர் சதாசிவம் தலைமையில், தோகைமலை ஒன்றிய தலைவர் சுரேந்தர் மற்றும் நிர்வாகிகள் சந்தோஷ், வடிவேல், பாஸ்கர், பொன்னர், அருண், ரமேஷ் மற்றும் பொன்னடி ஆகியோர் ஏற்பாட்டில் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 2 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர். பின்னர் குளித்தலை கீதம் வெளியிட்டும் விஜய் ரசிகர்கள் அசத்தினர். இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய நிர்வாகிகள் நிரோஷ் குமார், வினோத், தளபதி தியாகு மற்றும் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மெஸ் கார்த்தியின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் ஆகும்.
- மெஸ் கார்த்தி தொழில் காரணமாக கரூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கரூர்:
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர்.
தொடர்ந்து 8 நாட்கள் நடந்த இந்த சோதனை கடந்த 3-ந்தேதி நிறைவடைந்தது. முன்னதாக தொடக்க நாளில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை பெண் அதிகாரி உள்ளிட்டவர்கள் முற்றுகையிடப்பட்டு, காரும் உடைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து உள்ளூர் போலீசாரை தவிர்த்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்ட து. இதில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்பட்டது. இதையடுத்து அடுத்தகட்டமாக கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு, சகோதரர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சரின் சகோதரர் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். தங்களது அனுமதியில்லாமல் திறக்க கூடாது என்றும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. இதற்கிடையே அவரது தம்பிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் கரூரில் இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூர் ஈரோடு சாலையில் சக்தி மெஸ் நடத்தி வரும் பங்குதாரர்கள் ரமேஷ், மெஸ் கார்த்திக். இவர்களது வீடு ஈரோடு ரோடு கோதை நகர் அன்னை அப்பார்ட்மெண்ட்டில் உள்ளது. இங்கு இன்று 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது. கடந்த மாதம் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையின்போது இவர்களது மெஸ்சிலும், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீடுகளின் இரண்டு அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.
இப்போது அந்த வீடுகளில் சீலை அகற்றி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் மெஸ் கார்த்தி தி.மு.க.வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
மெஸ் கார்த்தியின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் ஆகும். இவர் தொழில் காரணமாக கரூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கரூரில் மீண்டும், மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருவது தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
- கிருஷ்ணராயபுரம் அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- சத்துணவுத்திட்டத்தில் சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர்,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், பாலராஜபுரம், மாயனூர் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். சின்னம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.70 லட்சம் மதிப்பிலான புதிய 2 வகுப்பறை கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதையும், அதேப்பள்ளியில் சத்துணவுத்திட்டத்தில் சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பாலாராஜபுரம், நத்தமேடு பகுதியில் பாரத பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான தனி நபருக்கு வீடு கட்டும் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதையும், மாயனூர் அரசு தொடக்கப்பள்ளியில் 15-வது நிதி குழுத் திட்டத்தின் கீழ் ரூ.7.51 லட்சம் மதிப்பிலான பள்ளி வகுப்பறைகள் கட்டடங்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார். அதைதொடர்ந்து மாயனூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.59.46 லட்சம் மதிப்பிலான 3 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடப்பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு அப்பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர் இளஞ்சேரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பாலாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தவசந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






