என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலை, கஞ்சா, மது விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.
    • சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பே் கைது செய்யப்பட்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, லாட்டரி சீட்டுகள் மற்றும் மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்காணிப்பில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.இதில் மொத்தம் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 94 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 14 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 400 கிராம் கஞ்சா, விற்பனைக்காக வைத்திருந்த 87 லாட்டரி சீட்டுகள், 323 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கஞ்சா, லாட்டரி சீட்டுகள் மற்றும் மது விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரித்துள்ளார். மேலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிய வந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள 04324-296299 மற்றும் 94981-00780 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    • அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.20-க்கு விற்பனையானது
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர்

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் கிணற்றில் உள்ள குறைந்த அளவு நீரைக்கொண்டு முருங்கைக்காய் பயிரிடுதல் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். அரவக்குறிச்சி சுற்று வட்டாரப்பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மட்டுமே தற்போது வாழ்வாதாரமாக விளங்குகிறது. முருங்கையில் செடி முருங்கை, மரமுருங்கை என இரு வகை உள்ளன.

    கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முருங்கைக்காய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் 1 கிலோ ரூ.100-க்கு விலைபோனது. பிறகு மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கி காய்கள் விளைச்சல் அதிகமானது. இதனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 1 கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை விலை போனது. இதனால் விவசாயிகள் முருங்கை காய்களை பறிப்பதற்கு கூட கூலி கட்டாமல் பாதிக்கப்பட்டனர். தற்போது ஜூன் மாதம் விளைச்சல் குறைந்துள்ளதால் 1 கிலோ முருங்கை காய்கள் ரூ.20 முதல் ரூ.25 வரை முருங்கை மார்க்கெட்டுகளில் விலை போகின்றது.

    இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஆண்டில் ஜனவரி, டிசம்பர் மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயிகள் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் உள்ளிட்ட அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள முருங்கைக்காய் மார்க்கெட் கமிஷன் மண்டிகளில் முருங்கைக்காயை விற்று விடுவார்கள். அங்கு விவசாயிகளிடமிருந்து வாங்கிய முருங்கைக்காய்கள் பெங்களூரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் லாரிகளில் அனுப்பி வருகின்றனர். தற்போது முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம், என்றனர்.

    ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு கரூரில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    கரூர், 

    கரூர் நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள அஷ்டாதசபுஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதேபோல் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், தோட்டக்குறிச்சி சொக்கநாதர் கோவில்களிலும் ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கரூரில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைபெற்றது.
    • பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொணடனர்

    கரூர்

    கரூர் மண்மங்கலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் மண்மங்கலம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.10 கோடி செலவில் சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரையிலான சாலை மேம்பாட்டு பணிகள்
    • 4.5 கி.மீட்டர் நீளத்திற்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டம்

    கரூர், ஜூன்.26-

    கரூர்-திருச்சி புறவழிச்சாலையை இணைக்கும் வகையில், சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரை 4.5 கி.மீட்டர் தொலைவுக்கு சாலை உள்ளது. இந்த சாலையில், கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சுற்றுலா மாளிகை, அரசு கலைக் கல்லூரி, தாந்தோணிமலை வெங்கட்ரமண சுவாமி கோவில் ஆகியவை அமைந்துள்ளன.கரூர்-திருச்சி புறவழிச்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால், இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்க முன்பு கரூர் சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரை இச்சாலை, மையத்தடுப்புடன் கூடிய 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.தொடர்ந்து மாவட்டத்தில் முக்கிய அலுவலகங்கள் உள்ள இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில் சுங்கவாயில் முதல் வெங்கக்கல் பட்டி வரை 4.5 கி.மீட்டர் தொலைவுக்கு சாலையை ரூ.10 கோடியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரை சாலையில் இருக்கும் இடவசதியை பொறுத்து சாக்கடை வடிகால் வசதியுடன் சாலை மேம்படுத்தப்படும். மேலும் வடிகாலுக்கும், சாலைக்கும் இடையே உள்ள இடைவெளியில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.10 கோடியில் முன்மொழிவு அனுப்பப்ட்டு, சாலையை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • கரூரில் லாட்டரி- புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் ரோந்து பணியின் போது இருவரும் சிக்கினர்

    கரூர்,

    குளித்தலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை கடைவீதி பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற வைகைநல்லூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர். இதேபோல் குளித்தலை அருகே உள்ள வடக்கு புதூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த இளையராஜா (வயது 39) என்பவர் தனது பெட்டி கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கரூர் அருகே களைக்கொல்லி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    முசிறி,

    கரூர் அருகே முசிறி நடராஜ் நகரை சேர்ந்த பானுமதி(வயது 45).இவரது கணவன் நடேசன் ஆறு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு துக்கம் தாளாமல் விரக்தியில் இருந்து வந்தவர் திடீரென களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். இதனை அறிந்த மகன் பாலமுருகன்(23) தனது தாய் பானுமதியை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ,அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் முசிறி சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • லாலாபேட்டை பகவதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, கம்பத்தில் ஊற்றியும், பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் மாலையில் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து, நிலை நிறுத்தினர்.

    அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடி நின்ற பக்தர்கள் பகவதி அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் அலகுத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியுடன், கிடா வெட்டு பூஜையும் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) மாவிளக்கு பூஜை, சந்தன காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி கரகம் கருவறையில் இருந்து புறப்பட்டு வீதி உலா முடிந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், 29-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

    • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேப்ளாப்பட்டி ஊராட்சி மேலமேடு பகுதியில் வீட்டின் பின்புறம் மது விற்ற முருகன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


    • தாந்தோணிமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யபடுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது

    கரூர்:

    கரூர் கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலையில் உள்ள துணைமின் நிலையத்தில் தாந்தோணிமலை பீடர், வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்தில் சஞ்சய் நகர் பீடர் மற்றும் ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் பி.கே.பாளையம் பீடர் ஆகியவற்றில் மேம்பாட்டு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் காளியப்பனூர் கிழக்கு, மலைப்பட்டி, தாந்தோன்றிமலை, பாரதிதாசன் நகர் 1,2,3-வது கிராஸ், சத்தியமூர்த்தி நகர், ராமசந்திரபுரம், சிவசக்திநகர் கிழக்கு, காவேரி நகர், சுங்ககேட், குமரன் சாலை, வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், சஞ்சய் நகர் காவல் குடியிருப்பு, முனியப்பன் கோவில். திருக்காம்புலியூர், ஆத்தூர் பிரிவு, நெரூர் வடக்கு, சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையம், சேனப்பாடி, முனியப்பனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.

    • வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்:

    தோட்டக்குறிச்சி சேங்கல் மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசி மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது.
    • இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    கரூர்

    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது.இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் தி.மு.க.வினர் 10 பேர் வேண்டுதல் மொட்டை அடித்தனர். இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் தெற்கு மாநகர பகுதி தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, 41வது வார்டு திமுக செயலாளர் விஸ்வா ஏற்பாடு செய்திருந்தார்.

    ×