search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள்: கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை மனு
    X

    கரூரில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள்: கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை மனு

    • கரூரில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை மனு அளித்தார்
    • நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்

    கரூர்,

    முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபு சங்கரை சந்தித்து, மனு அளித்தார். அப்போது, அமராவதி அணையில் 64 அடி உயரம் தண்ணீர் இருக்கிறது. குடிநீர் தேவைக்காக கடைமடை வரை தண்ணீரை திறக்க வேண்டும், 60 அடி தண்ணீர் இருந்தாலே திறக்கலாம் என விதி இருக்கிறது. தற்போது 64 அடி தண்ணீர் இருப்பு இருப்பதால், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும்.

    அமராவதி ஆற்றின் துணை ஆறான குடகனாற்றில் வரும் கழிவு நீரில் 3,500 டி.டி.எஸ். உப்புத் தன்மை கலந்து வருவதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவு நீரை ஆற்றில் கலக்கும் நிறுவனத்தை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கரூரிலிருந்து கோவை மற்றும் ஈரோடு சாலைகள் பிரியும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வித்தியாசமான முறையில் ஸ்பீடு பிரேக் போடப்பட்டுள்ளது. அதில் வயதானவர்கள், பெண்கள் ஏறி இறங்கும் போது விபத்து ஏற்படுகிறது.

    அதை அப்புறப்படுத்தி விட்டு தேசிய நெடுஞ்சாலையின் விதிகளுக்கு உட்பட்டு வேகத்தடை அமைக்க வேண்டும். தன்னுடைய டிரஸ்ட் சார்பில் வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் 3 முறை அதில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றுவது, தாரை ஊற்றி மரங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவற்றை தடுக்க வேண்டும். ஆண்டாங்கோவில் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி குப்பை கிடங்கில் மாதம் 10 ஆயிரம் செலுத்தி குப்பை கிடங்கில் கொட்டி வருகிறோம். அதனை கொட்ட அனுமதிக்காததால் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு, எரியூட்டும் நிலை உள்ளது. இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு மனு அளித்துள்ளார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும், கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், பொது கூட்டம் நடத்த கேட்ட இடத்திக் அனுமதி தருவது இல்லை. நாம் கேட்கும் இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் நடத்தச் சொல்லி அலைக்கழிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றே போராட்டங்கள் நடத்தக் கூடிய சூழ்நிலை உள்ளது என்றார். இந்நிகழ்வின் போது மாவட்ட அவைத் தலைவர் திருவிகா, ஆலம் தங்கராஜ், கரூர் மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் சேரன் பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×