என் மலர்tooltip icon

    கரூர்

    • தார் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளால் புன்னம் சத்திரத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
    • பிளாஸ்டிக் கப்புகள் போன்ற ஏராளமான கழிவுகள் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம்சத்திரம் பகுதிகளில் ஹோட்டல்கள் பலகார கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற ஏராளமான கழிவுகள் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. இதே போல மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் மருத்துவ கழிவுகளும் மூட்டையாக கட்டப்பட்டு இங்கு வீசி செல்கின்றனர்.

    இதனால் சாலையின் ஓரத்தில் நெடுதூரம் கழிவுகளாக கிடைக்கிறது. தற்பொழுது வட கிழக்கு பருவமழை தொடங்கி விட்டதன் காரணமாக மழை பெய்து வருகிறது. மழைநீர் கழிவுகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுகளில் கொசுக்கள் முட்டையிட்டு ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் கழிவுகளை கொட்டப்படுவதை தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் இதனை கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொண்டமாங்கினம் ஊராட்சி கவுண்டம்பட்டிக்கு மயான சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
    • குளித்தலை கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டதொண்டமாங்கினம் ஊராட்சி கவுண்டம்பட்டிக்கு மயான சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

    குளித்தலை,  

    கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான தொண்டமாங்கினம் ஊராட்சி நான்காவது வார்டு கவுண்டம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இப்பகுதி மக்கள் இறந்தால் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டு வாரி பகுதியில் 1 1/2 கிலோ மீட்டர் தொலைவில் சென்று அடக்கம் செய்வது வழக்கம். மயான பாதை செல்வதற்கும் அப்பகுதி கிராம மக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்வதும் அதே வழியில் தான் செல்கின்றனர். கடந்த 19-ந்தேதி கவுண்டம்பட்டியை சேர்ந்த முத்தலாட்சியம்மாள் (75) வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டார், இவரை அடக்கம் செய்வதற்காக தூக்கி சென்ற போது காட்டு வாரி பகுதியில் மழை பெய்ததால் முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரில் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இதனால் மயான பாதை மற்றும் கிராமத்திற்கு செல்வதற்கான சாலையை காட்டுவாரி கரை பகுதியில் அமைத்து அப்பகுதி மக்களுக்கு உதவிட பல ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 19 பேர்களுக்கு 15 ஆயிரம் மானிய விலையில் தள்ளு வண்டிகள்
    • தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில்

    குளித்தலை,  

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் குளித்தலை மற்றும் தோகைமலை பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் 19 பேர்களுக்கு 15 ஆயிரம் மானிய விலையில் தள்ளு வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குளித்தலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் லலிதா தலைமை வகித்தார், குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காய்கறி கனி 19 தள்ளு வண்டிகள் மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதற்கான விதைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார், நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் அன்பழகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சச்சின்ராம், தகவல் தொழில்நுட்பம் அமுல்ராஜ், ஒன்றிய கழக நிர்வாகி பரளி குமார், ஜோதிவேல், கிளை செயலாளர் அருணாச்சலம், ராஜேந்திரம் கோபால், மேல தண்ணீர்பள்ளி கிளை செயலாளர் ஸ்டாலின் விக்னேஸ்வரன், மாணவரணி லோகேஸ்வரன், ஒன்றிய கழக நிர்வாகி ஜெகநாதன், பொறியாளர் அணி ஹரிஹரன், மேட்டுமருதூர் ஆறுபாஸ்கர், கழக நிர்வாகிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிதொகுதி சபா கூட்டம்
    • கவுன்சிலர் ராதிகா கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

    கரூர். 

    கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 4-வது வார்டு தொகுதி சபா கூட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகில் பேரூராட்சி தலைவர் சேதுமணி, தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு 4-வது வார்டு கவுன்சிலர் ராதிகா, பகுதி சபா செயலாளர் வரி தண்டலர் சவரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினம், தமிழ் ஆசிரியர் மணிகண்டன் ஆய்வக உதவியாளர் கனகராஜ் பகுதி சபா உறுப்பினர்கள் மஞ்சுளா சாந்தி ராமச்சந்திரன், பேரூராட்சி எழுத்தர் சரவணன், மஞ்சுளா, புனிதா, முன்னாள் கவுன்சிலர் கதிர்வேல் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கலைஞர் மகளிர் உரிமை தொகை 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அணுகு சாலை அமைத்திட வேண்டும் என்று தி.மு.க பெண் கவுன்சிலர் ராதிகா கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

    இதே போல 4-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடை மீது தரமான கான்கிரீட் மூடிகள் அமைக்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உரிய மின்விளக்கு வசதி ஏற்படுத்திய தர வேண்டும் என்றும் கழிவுநீர் சாக்கடையில் பொதுமக்கள் வர்த்தகர்கள் தங்கள் குப்பைகளை அதில் கொட்டாமல் இருப்பதற்கு, பேரூராட்சி சார்பில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் பேருந்துகளை நடுரோட்டில் நிறுத்திச் செல்லாமல் அரைவட்ட வடிவிலான பஸ் நிறுத்தம் அமைத்துத் தர வேண்டும் என்றும் சாக்கடையை நீர் குடிநீரில் கலந்து வராமல் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.அந்த கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கரூரில் 11 ஜோடி வெள்ளி கொலுசு திருட்டு
    • நகை பட்டறை தொழிலாளி கைது

    கரூர், செப். 22-

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குரு தினேஷ் (வயது38). கரூர், ஜவஹர் பஜாரில் வெள்ளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், கரூர் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த நகைப் பட்டறை தொழிலாளி கார்த்திக்கேயன் (44) என்பவர் சம்பவத்தன்று கடைக்கு வந்து கூட்டத்தை பயன்படுத்தி 11 ஜோடி கொலுசுகளை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தவர், எடுத்துச் சென்று விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ரூ. 8 ஆயிரத்து 750 மதிப்புள்ள 11 ஜோடி வெள்ளி கொலுசுகள் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திக்கேயனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து போலீசார் கொலுசுகளை மீட்டனர்.

    • யூ.பி.ஐ .பரிவர்த்தனையா என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது .
    • முடிவில் வணிக மேலாண்மை, மாணவி சத்யா நன்றி கூறினார்.

      வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டில், வணிக மேலாண்மை, தொழிற்சார் கணக்கியல் ஆகிய துறைகள் இணைந்து மாணவிகளின் பேச்சுத் திறனை அதிகரிப்பதற்காகவும், மேலும் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகவும் முக்கியம் பணப்பரிவர்த்தனையா, யூ.பி.ஐ .பரிவர்த்தனையா என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது .

    இதில் பணப்பரிவர்த்தனை சிறந்தது என்ற தலைப்பில் 6 மாணவிகளும் யூ.பி.ஐ .பரிவர்த்தனையே சிறந்தது என்ற தலைப்பில் 6 மாணவிகளும் பேசினார்கள். இந்நிகழ்வில் வணிகவியல் துறை தலைவர் யமுனா நடுவராக இருந்து மாணவிகளின் வாதங்களிலுள்ள சிறப்புகளை தொகுப்பித்து இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கும் நாட்டிற்கும் மிக முக்கியம் யூ.பி.ஐ .பரிவர்த்தனையே என்று தீர்ப்பு வழங்கினார். இந்நிகழ்விற்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும் ,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார்.

    தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினார்கள். கல்லூரியின் வணிக மேலாண்மை, துறை மாணவி செளமியா வரவேற்று பேசினார். துணை முதல்வர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வணிக மேலாண்மை, மாணவி சத்யா நன்றி கூறினார்.

    • பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி வளாகத்தை அடைந்தது.
    • பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புகழூர் நகராட்சிப் பொறியாளர் மலர்கொடி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி வளாகத்தை அடைந்தது.

    பேரணியில் டெங்கு ஒழிப்பு குழுவினர், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு கையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை கடைக்காரர்கள், வியாபாரிகள், வணிக நிறுவனத்தினர் விற்பனை செய்யவும், பயன்படுத்துவும் கூடாது என்றும், புகழூர் நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ,எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதேபோல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கும். மேலும் தெருக்களில் கிடக்கும் தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள் , பழையபாட்டில்கள், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மழைநீர் தேங்கினால் அதில் கொசுக்கள் தங்கி முட்டையிட்டு ஏராளமான கொசுக்களை உற்பத்தி செய்து பொதுமக்களை தீண்டும். அவ்வாறு பொது மக்களை கொசுக்கள் தீண்டுவதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் துப்புரவு ஆய்வாளர்வள்ளி முத்து, பணி மேற்பார்வையாளர் ரவி மற்றும் டெங்கு ஒழிப்பு குழுவினர், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் முருகன் கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .மேலும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

    • வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் விற்பனை
    • வெங்கமேட்டில் செயல்பட்டு வரும்மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு சென்றும் விற்பனை

     பரமத்தி வேலூர், 

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம் ,திடுமல், சிறுநல்லி கோவில் ,தி.கவுண்டம்பாளையம், கபிலர்மலை, வடகரையாத்தூர், ஆனங்கூர் ,மோகனூர், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். தேங்காய் முதிர்ச்சி அடைந்ததும் கூலி ஆட்கள் மூலம் தேங்காயை பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயாகவும், தேங்காய் பருப்புகளாகவும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர் .அதேபோல் பரமத்தி வேலூர் அருகே வெங்கமேட்டில் செயல்பட்டு வரும்மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வருகின்றனர்.

    வெங்கமேட்டில் உள்ள மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.69 -க்கும், குறைந்தபட்சமாக ரூ22.06 - க்கும், சராசரியாக ரூ.23.30-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 82- க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    மேலும் ஏலத்திற்கு 10 ஆயிரத்து 248 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 75.89- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ 53.33- க்கும், சராசரி விலையாக ரூ 68.88- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 8 லட்சத்து 74 ஆயிரத்து 288- க்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 370 க்கு விற்பனையானது.

    • கரூரில் 2 சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
    • குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்

    கரூர்,

    தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம், கொசு ஒழிப்பு பணிகள்மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள், செவிலியர், மருத்துவ பணியாளர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. கரூர் அரசு கல்லுாரி மருத்துவமனையில், 50 படுக்கைகள் கொண்ட காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளப்பட்டியில் வசிக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10, 8 வயதுள்ள இரு சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் தாமோதரன் கூறுகையில்," பருவநிலை காரணமாக, குழந்தைகள் உள்பட பலர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ள னர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, யாருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை,' என்றார்.

    • கரூர் மளிகை கடையில் ரூ.1 லட்சம் திருட்டு நடந்தது
    • பணத்தை திருடிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்

    கரூர்,

    கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழ வெளியூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சுப்ரமணி (வயது 56). இவர், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் தங்கராசு என்பவ ரது மகன் சரத்குமார் (30). இவர்கள் கட்டிடம் உடைக்கும் கூலி வேலை செய்கிறார். இந்நிலையில் நேற்று சுப்ரமணி மளிகை கடைக்கு சரத்குமார்சென்று பன்னீர் சோடா கேட்டுள்ளார். இதனால் சுப்ரமணி பன்னீர் சோடா எடுப்பதற்காக கடைக்கு உள்ளே சென்றதாக தெரிகிறது. அப்போது மளிகைக்கடைக்கு உள்ளே சென்ற சரக்குமார், அங்கு கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை திருடி உள்ளார். இதனை பார்த்த ராமசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரத்குமாரை பிடித்து தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தோகை மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சரத்குமாரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நடைபெற்றது
    • தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மழை வெள்ளம் வரும்போது, கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்வது, மற்றவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் தீவிபத்தின் போது தற்காத்து கொள்வது குறித்தும், தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். காட்டினார்கள். இதில் பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×