என் மலர்
கரூர்
- இனாம் நிலங்கள்திரும்ப பெற அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- தாசில்தார் அலுவலகம் எதிரே தார் சாலையில் போராட்டம் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
புகளூர் நகராட்சிக்கு உட்பட்ட புகழிமலை முருகன் கோவில் மற்றும் புகழூர் வட்டாரத்தில் உள்ள கோவில் நிலங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் திருக்கோயிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் இனாம் நிலம் உள்ளது. இந்த இனாம் நிலங்கள், அறநிலையத்துறை க்கு சொந்தமான நிலம் என்று, அதனை திரும்ப பெற அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இனாம் நிலங்கள்,மானிய நிலங்கள் , குத்தகைதாரர் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
40 முதல் 50 வருடங்களுக்கு மேலாக முறையாக பத்திரப்பதிவு மறுப்பதிவு செய்தும் கட்டுமான அனுமதிகள் பெற்று மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு,சாலை வசதிகள் அரசின் மூலம் பெற்று முறையாக அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தியும் நிலங்களை உரிமையாக வந்த பிறகு முறையாக அனுபவித்து வருவதாகவும், ஆனால் இந்து சமய அறநிலைத்துறை இந்த நிலங்களை எந்தவித ஆவணங்களும் கொடுக்காமல் கோவில் நிலங்கள் என்று சொல்லி இந்த நிலங்களை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, இந்து அறநிலையத்துறையை கண்டித்து புகளூர் தாகிசல்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மானிய நிலங்கள் அனைத்தும் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புகளூர் தாசில்தார் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புகளூர் வட்டாரத்தைச் சேர்ந்த இனாம் நில விவசாயிகள், குத்தகைதாரர்கள் வீடு, மனை உரிமையாளர்கள் ,தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலந்து கொண்டனர். தாசில்தார் அலுவலகம் எதிரே தார் சாலையில் போராட்டம் நடைபெற்றதால் அந்த சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- முருகேசன் (வயது 59) என்பவரை கைது செய்தனர்
- 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலையில் க.பரமத்தி செல்லும் பிரிவு சாலை அருகே அரசு அனுமதி இன்றி மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக ஒருவர் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீஸருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து மது விற்பனையில் ஈடுபட்ட நொய்யல் குறுக்கு சாலையைச் சேர்ந்த முருகேசன் (வயது 59) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் பெரியரெங்கம் பாளையம் பகுதியில் உள்ள முள்காட்டுக்குள் மது விற்பனை செய்த பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சாவித்திரி(48 )என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்
- பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தினார்கள்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொழில் முனைவோர் ஆய்வுத்துறை தலைவர், வணிகவியல் (முன்னாள் பதிவாளர்), பேராசிரியர் மற்றும் சிஎம்பி தலைவர்சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் செயலாளர் கே.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர்எஸ்.குப்புசாமி, கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.முருகன், கல்லூரியின் டீன் (அட்மிஷன்) கே.சுந்தராஜு ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
மேலாண்மை துறைத்தலைவர்கே.ராஜேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் சிவக்குமார் பேசும்போது தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய குணங்கள் பற்றியும், தொழிலைத் தொடங்க விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார். கோயம்புத்தூர் வனபிரஸ்தாவைச் சேர்ந்த மாணவர் குழுவினர தலைமைத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தினார்கள்.
- வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது
- இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம்,கந்தம்பாளையம், மூர்த்திபாளையம்,நொய்யல், மரவாபாளையம், சேமங்கி ,முத்தனூர், கோம்புப்பாளையம், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம்,கட்டிபாளையம், தவுட்டுப்பாளையம் பாலத்துறை, நன்செய் புகளூர், கந்தம்பாளையம், ஓலப்பாளையம் ,ஒரம்புப்பாளையம், நல்லிக்கோயில் ,தளவாபாளையம், தோட்டக்குறிச்சி ,புகழிமலை, காகிதபுரம், மூர்த்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய ஆரம்பித்தது.
தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது .கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- அரசு பஸ் மீது லாரி மோதி 13 பேர் காயம் அடைந்தனர்
- லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
கோவையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள கே.பேட்டை கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அதே சாலையில் திருச்சியில் இருந்து கரூருக்கு விறகுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ் மீது லாரி மோதியது.
இதில் பஸ் டிரைவர் சொக்கலிங்கம் (44), லாரி டிரைவர் சக்திவேல் (28) உள்பட 13 பேர் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த 13 பேரையும் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் அருகே சிமெண்டு கலவை லாரி மோதி கிராம நிர்வாக அலுவலர் பலியானார்
- சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
கரூர் மாவட்டம், புலியூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கமலக்கண்ணன் (வயது 28). இவர், திருச்சி மாவட்டம், இனாம்புதூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் இனாம்புதூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் அன்று மாலை பணி முடிந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி-பாளையம் சாலையில் தண்ணீர் பந்தல்மேடு அருகே வந்தபோது, முன்னாள் திருச்சி மாவட்டம், பாளையம் கணபதி நகரை சேர்ந்த செல்வா (26) என்பவர் ஓட்டி சென்ற சிமெண்டு கலவை வாகனம் திடீரென பின் நோக்கி வந்து, கமலக்கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கமலக்கண்ணன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கமலக்கண்ணனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கமலக்கண்ணனின் தந்தை செல்வராஜ் ெகாடுத்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தவுட்டுப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, பணம் திருட்டு நடந்துள்ளது
- வழக்கு பதிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் 3-வது தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி( 60). இவரது மனைவி மீனாட்சி (வயது 53) . இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்த மீனாட்சி அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6பவுன் தங்க நகை மற்றும் பணம் 10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து மீனாட்சி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சற்று தூரம் ஓடி சென்று நின்று கொண்டது. பட்டப் பகலில் வீட்டில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வேலாயுதம்பாளையத்தில் தொடர்ந்து கொள்ளையடித்துச் செல்வதும் ,சாலை வழியாக வரும் பெண்களை குறி வைத்து வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளை நடப்பதும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் பைக் திருட்டு நடப்பதும் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் கரூரில் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது
- குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100 க்கும் விற்பனையானது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,குளத்துப்பாளையம், காளிபாளையம் ,வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் ,மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி ,முல்லை, சம்பங்கி ,அரளி,ரோஜா ,செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர் .பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் ,அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர் .பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை வருகின்றனர். கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100 க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.250- முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர் நேற்று குண்டுமல்லி ரூ.300- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.80- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.300- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் வாங்கிச் சென்றனர். புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
- அ.தி.மு.க.வின் நெருக்கடியால்பெண்களுக்கு ஆயிரம் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசி உள்ளார்
- பரமத்தி வேலூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பேசினார்
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கபிலர்மலை செல்லும் சாலை அருகே, பழைய தேசிய நெடுஞ்சாலை அருகில் அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினீயர் சேகர் தலைமை வகித்தார். பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகர கழக செயலாளருமான எஸ்.எம்.நாராயணன் அனைவரையும் வரவேற்றார். கபிலர்மலை ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் வெற்றிவேல், ரவி, நகர செயலாளர்கள் சுகுமார், ரவீந்தர், வேலுச்சாமி மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி, வேடசந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது, தி.மு.க. ஆட்சி அமைந்து 2 1/2 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அதேபோல் அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த படித்த பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கும் திட்டம், ரூ.25 ஆயிரம் மானியத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர் திட்டமும் நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து விட்டனர். தற்பொழுது பாராளுமன்றத் தேர்தல் வரும் நிலையிலும் , எதிர்க்கட்சியான அதிமுகவின் நெருக்கடியால், குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 50 சதவீத குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.
- உற்பத்தி அதிகரிப்பால் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி
- சிப்பம் ஒன்று 1,260 வரையிலும் விற்பனையானது.
வேலாயுதம்பாளையம்,
கரூர்மாவட்டம் நொய்யல் ,மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகழூர், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி ,வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
கரும்புகள் விளைந்த உடன் விற்பனைக்காக புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பறையில் ஊற்றி பாகு தயார் செய்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் அருகாமையில் செயல்பட்டு வரும் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி செல்கின்றனர். வாங்கிய வெல்ல சிப்பங்களை லாரிகளில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ,உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,370 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று 1,260 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- 1 டன் ரூ.15,500 க்கு வாங்கிச் சென்றனர்
- மரவள்ளிக்கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம், குளத்து பாளையம், குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்,பாளையம், நல்லிக்கோவில், பழமாபுரம் ,புன்னம் சத்திரம், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். 10 மாதங்களில் மரவள்ளிக்கிழங்கு விளைந்தவுடன் உள்ளூர் பகுதிக்கு வரும் தரகர்கள் மூலம் மரவள்ளிக்கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர் .
மரவள்ளிக்கிழங்குகளை வாங்கிய புரோக்கர்கள் புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, புதன்சந்தை, மல்லூர், கீரனூர்,சின்னசேலம்,ஆத்தூர்,மல வேப்பங்கொட்டைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் . வாங்கிய மரவள்ளி கிழங்குகளை ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக ஜவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர் . மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது . அதே போல் ஜவ்வரிசி விலை உயரும் போதும், விலை வீழ்ச்சி அடையும் போதும் சேகோசர்வ் மூலம் மரவள்ளி கிழங்கு களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் 1 டன் ரூ.15,500 க்கு வாங்கிச் சென்றனர்.சிப்ஸ் தயாரிப்பவர்கள் 1 டன் மரவள்ளிக்கிழங்கை ரூ.16, 500க்கு வாங்கிச் சென்றனர் .நேற்று ஜவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் 1 டன் மரவள்ளி கிழங்கு ரூ.12,000க்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.13 ஆயிரத்து 500 க்கு வாங்கிச்சென்றனர். மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- புதிய வகையான உணவு பழக்கத்தால் மனிதன் பாதிக்கப்படுகிறான்
- நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 120 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தனர்.
வேலாயுதம்பாளையம்,
பழைய காலத்து உணவு வகைகளால் மனிதர்களின் ஆரோக்கியமான உடல்நிலையும், தற்போதைய உணவு பழக்க வழக்கங்களால் மனிதர்களின் உடல்நிலை சீர்கெட்டு போனது குறித்தும் மூதாட்டியின் கருத்து:-
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காலை உணவாக கேழ்வரகு களி,கம்மஞ்சோறு,சோளச்சோறு போன்றவற்றையே பயன்படுத்தி வந்தோம். மதிய உணவாகவும் அதையே பயன்படுத்தினோம். இரவு உணவாக மட்டும் அரிசி சோற்றை சாப்பிட்டு வந்தோம். வேறு எந்த உணவுகளையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. காலங்காலமாக இந்த உணவுகளை பயன்படுத்தி வந்ததன் காரணமாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 120 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தனர்.
அவர்களுக்கு எந்த நோய், நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன் முதல் நவநாகரீகம் பெருகி பல்வேறு நவீன வெளிநாட்டு உணவு பழக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தற்காலங்களில் இளைஞர்கள் புதிய புதிய உணவு வகைகளை தேடி சென்று சாப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக உடல் நலன்கள் பாதிக்கப்பட்டு ஆரோக்கியமும் இல்லாமல் குறைந்த வயதிலேயே மனிதன் இறக்கக்கூடிய நிலைக்கு சென்று விடுகிறான். பாஸ்ட் புட் உணவையும், சவர்மா, பர்கர் போன்ற பல்வேறு புதிய வகையான உணவுகளை இப்போதைய இளைஞர்கள் தேடிச் செல்கின்றனர். வேகவைத்த, எண்ணெயில் பொரித்த சிக்கன் வகைகளையும் , மட்டன் வகைகளையும் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் ஆடு, கோழி கறிகளை வெட்டி குளிர்சாதனம் பெட்டிக்குள் வைத்து அதை அவ்வப்போது எடுத்து உணவுகளாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக மனிதனின் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. இதன் காரணமாகவே நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்தார். 48-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல் அதே நாமக்கல் பகுதியில் பர்கர் சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். அந்த காலத்து உணவு முறைகளை பயன்படுத்தி வந்திருந்தால் இது போன்ற நிலைமைகள் ஏற்படாது. எனவே அந்தக் காலத்து உணவு பழக்க வழக்கத்திற்கும் இந்த காலத்து உணவு பழக்க வழக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் வேக வைத்த எண்ணெய்யிலேயே மீண்டும் உணவு பொருட்களை தயாரிக்கின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கிறது. எனவே நாம் பழைய உணவு பழக்கத்திற்கு சென்று அந்த காலத்து உணவு பழக்கவழக்கங்களை நாம் பயன்படுத்தி வந்தால் உடல் நலத்தை பேணிக் காக்க முடியும். நமது உடலை பாதுகாப்போம் என்றார்.






