என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகளூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
- இனாம் நிலங்கள்திரும்ப பெற அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- தாசில்தார் அலுவலகம் எதிரே தார் சாலையில் போராட்டம் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
புகளூர் நகராட்சிக்கு உட்பட்ட புகழிமலை முருகன் கோவில் மற்றும் புகழூர் வட்டாரத்தில் உள்ள கோவில் நிலங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் திருக்கோயிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் இனாம் நிலம் உள்ளது. இந்த இனாம் நிலங்கள், அறநிலையத்துறை க்கு சொந்தமான நிலம் என்று, அதனை திரும்ப பெற அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இனாம் நிலங்கள்,மானிய நிலங்கள் , குத்தகைதாரர் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
40 முதல் 50 வருடங்களுக்கு மேலாக முறையாக பத்திரப்பதிவு மறுப்பதிவு செய்தும் கட்டுமான அனுமதிகள் பெற்று மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு,சாலை வசதிகள் அரசின் மூலம் பெற்று முறையாக அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தியும் நிலங்களை உரிமையாக வந்த பிறகு முறையாக அனுபவித்து வருவதாகவும், ஆனால் இந்து சமய அறநிலைத்துறை இந்த நிலங்களை எந்தவித ஆவணங்களும் கொடுக்காமல் கோவில் நிலங்கள் என்று சொல்லி இந்த நிலங்களை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, இந்து அறநிலையத்துறையை கண்டித்து புகளூர் தாகிசல்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மானிய நிலங்கள் அனைத்தும் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புகளூர் தாசில்தார் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புகளூர் வட்டாரத்தைச் சேர்ந்த இனாம் நில விவசாயிகள், குத்தகைதாரர்கள் வீடு, மனை உரிமையாளர்கள் ,தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலந்து கொண்டனர். தாசில்தார் அலுவலகம் எதிரே தார் சாலையில் போராட்டம் நடைபெற்றதால் அந்த சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






