என் மலர்tooltip icon

    கரூர்

    • விஜய் தரப்பிலோ, போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காமல் தடியடி நடத்தியதே நெரிசலுக்கு காரணம் என்று தெரிவித்து வருகின்றனர்.
    • விஜய் பிரசார கூட்டத்துக்குள் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் பலர் குற்றம் சாட்டினர்.

    கரூர்:

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக முதலில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையமும், சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை நடத்தி வந்தது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து விஜய் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, என்.பி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு கடந்த 13-ந் தேதி கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது.

    மேலும் தமிழக அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்தது. வழக்கு தொடர்பான அத்தனை ஆவணங்களையும், விசாரணை விபரங்களையும் சிறப்பு புலனாய்வு குழு மற்றும் ஒரு நபர் ஆணையம் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் கோர்ட் உத்தரவிட்டது.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் எப்போது வந்து விசாரணையை தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு குஜராத் கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் ஏ.எஸ்.பி. முகேஷ் குமார், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்று நள்ளிரவு 2 கார்களில் கரூர் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினர். சி.பி.ஐ. அதிகாரிகள் வந்த கார்கள் சுற்றுலா மாளிகை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தை இன்று பார்வையிட்டு விசாரணையை தொடங்க உள்ளனர். பின்னர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தங்கியுள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொடக்கத்தில் தங்கி இருந்தனர். பின்னர் கடந்த வாரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை திட்ட அலுவலகத்திற்கு தங்கள் அலுவலகத்தை இடமாற்றம் செய்தனர்.

    இன்று திட்ட அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இல்லை. இதனிடையே இன்று காலை சிறப்பு புலனாய்வுக் குழு ஏ.டி.எஸ்.பி. திருமலை சி.பி.ஐ. அதிகாரிகளை சுற்றுலா மாளிகையில் சந்தித்தார். சிறிதுநேரம் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    ஐ.ஜி.அஸ்ராகர்க் வழக்கு விவரங்கள், ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கிறார். கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் குழு இன்று விசாரணையை தொடங்க உள்ள தகவல் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஜய் தரப்பிலோ, போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காமல் தடியடி நடத்தியதே நெரிசலுக்கு காரணம் என்று தெரிவித்து வருகின்றனர்.

    விஜய் பிரசார கூட்டத்துக்குள் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் பலர் குற்றம் சாட்டினர். இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அது தொடர்பாக எழுந்துள்ள சந்தேக கேள்விகளுக்கும் சி.பி.ஐ. விசாரணையில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கரூர் கூட்டல் நெரிசல் விவகாரத்தில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.
    • த.வெ.க. மாவட்ட நிர்வாகி பவுன்ராஜியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்திருந்த போலீசார் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை கைது செய்தனர்.

    மதியழகன் மற்றும் பவுன்ராஜை போலீசார் கடந்த மாதம் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இருவரும் ஜாமீன் கோரி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று நீதிமன்ற காவல் முடிவடைந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருவரும் காவல் நீட்டிப்பு இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.

    • கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
    • காவல்துறை அனுமதி அளித்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கடந்த 27-ந் தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இச்சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் வரும் 17-ந்தேதி செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் அவர் நேரில் வழங்க உள்ளார்.

    மண்டபம் உள்ளிட்ட தகவல்களுடன் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் த.வெ.க.வினர் மனு வழங்க உள்ளனர்.

    காவல்துறை அனுமதி அளித்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

    • நேற்று அந்த காலணிகள் 2-ம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்டன.
    • அடுத்த கட்ட விசாரணைக்கு தேவைப்படும் என்பதால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டத்தில் கூட்டத்துக்கு வந்திருந்த பலரும் தங்கள் காலணிகள் மற்றும் உடமைகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதனால், காலணிகள் சாலையில் நாலாபுறமும் சிதறி கிடந்தன. பின்னர், தூய்மை பணியாளர்கள் மூலமாக அந்த காலணிகள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டது. இதனை, ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் பார்வையிட்டார். அதன் பின்னர் கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். அதன் பின்னர் சிறப்பு புலனாய்வு குழு ஐஜி அஸ்ராகர்க் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து, நேற்று அந்த காலணிகள் 2-ம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்டன. அந்த காலணிகளை கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு, குப்பை சேகரிக்கும் வாகனத்தில் ஏற்றி பாலம்மாள் புரத்தில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நேற்று சேகரித்த காலணிகளின் எடை சுமார் 450 கிலோ இருக்கும் என்றும், அது அடுத்த கட்ட விசாரணைக்கு தேவைப்படும் என்பதால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • தேவையான பாதுகாப்பு குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கரூர் மாவட்ட காவல்துறைக்கு விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் கரூர் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நேரில் ஆறுதல் கூற த.வெ.க. தலைவர் விஜய் செல்ல உள்ளார். கரூர் செல்லும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க.வினர் இன்று மனு அளித்தனர்.

    ஏற்கனவே நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டனறக.

    இந்நிலையில், கரூர் செல்வதற்கு அனுமி கேட்டு தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் அனுப்பட்டட நிலையில், டிஜிபி அலுவலகத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தவெக சார்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து கரூர் எஸ்.பி-ஐ தொடர்பு கொள்ள டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

    கரூர் செல்லும் தேதி, நேரம், இடம் வரும் வழிபோன்ற விவரங்களை கரூர் மாவட்ட காவல்துறைக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கரூர் போலீசுக்கு விவரங்கள் அளித்தவுடன் தேவையான பாதுகாப்பு குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக 45 நபர்களுக்கு நிதியை செந்தில் பாலாஜி வழங்கினார்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிதியுதவி வழங்கினார். முதற்கட்டமாக 45 நபர்களுக்கு நிதியை அவர் வழங்கினார்.

    பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியையும் வீடு வீடாக சென்று செந்தில் பாலாஜி வழங்கினார்.

    • நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
    • மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று, தவெக சார்பில் நடைபெற்ற விஜயின் பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 41 பேர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சென்று சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

    • 27-ந்தேதி சம்பவத்தின்போது நடந்த விவரங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேட்டறிந்தனர்.
    • பிரசார வேன் நின்ற இடம், ஜெனரேட்டர் அறை, தொண்டர்கள் ஏறி நின்ற கட்டிடங்கள் போன்றவற்றை பார்வையிடுகின்றனர்.

    கரூர்:

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது.

    இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சியாமளாதேவி, கரூர் எஸ்.பி. ஜோஸ் தங்கையா இடம் பெற்றனர். தற்போது இந்த குழுவில் 3 ஏ.டி.எஸ்.பி.க்கள், 4 டி.எஸ்.பி.க்கள், ஒரு தடயவியல் நிபுணர் ஆகிய 8 அதிகாரிகள் கூடுதலாக் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    முன்னதாக இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில் ஏ.டி.எஸ்.பி. பிரேம்ஆனந்தன் கரூரில் இருந்து சென்னை புறப்பட்டு சென்று ஐஜி அஸ்ரா கார்க்கிடம் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தார்.

    இதை தொடர்ந்து ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கரூர் வந்தனர். முதல்கட்டமாக குழுவினர் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு 27-ந்தேதி சம்பவத்தின்போது நடந்த விவரங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேட்டறிந்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் மற்றும் குழுவினர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள், கூட்டம் நடைபெற்ற இடத்தில் எத்தனை பேர் நிற்கலாம், விஜய் பிரசாரத்தின்போது எவ்வளவு மக்கள் பங்கேற்றனர் உள்ளிட்டவற்றை ஆராய்கின்றனர்.

    பின்னர் பிரசார வேன் நின்ற இடம், ஜெனரேட்டர் அறை, தொண்டர்கள் ஏறி நின்ற கட்டிடங்கள் போன்றவற்றை பார்வையிடுகின்றனர். பிரசாரத்தின்போது தொண்டர்கள், பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்று கேட்டறிகின்றனர்.

    அதன் பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள், டிரோன் பட காட்சிகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிரபடுத்த உள்ளனர்.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் சிறப்பு புலானாய்வு குழுவும் விசாரணையை தொடங்கி உள்ளதால் கரூரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனை, உயிரிழந்தோரின் கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
    • பல்சர் மற்றும் யமகா மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்து 2 பேர் மோதியதாகவும் எப்.ஐ. ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் கடந்த மாதம் 13-ந்தேதி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    சனிக்கிழமைகள்தோறும் பிரசாரம் செய்ய திட்டமிட்ட அவர் அதற்கு அடுத்த வாரம் 20-ந்தேதி நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். 3-வது வாரமாக கடந்த 27-ந்தேதி நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இன்னொரு நிர்வாகியான நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டது.

    கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இருவரும் தலைமறைவாக உள்ளனர். 2 பேரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியான நிலையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு அதுபோன்று இனி வரும் காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய சம்பவத்தை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்தார்.

    விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் போலீசார் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர். யாரும் புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்காமல் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து அதில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

    இதை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து எந்த இடத்தில் விபத்து நடைபெற்றது என்பது பற்றி போலீ சார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கரூர் வேலாயுதம்பாளையம் சோதனை சாவடி பகுதியில் வைத்து தான் பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதியது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

    விஜயின் பிரசார வாகனத்தின் பதிவு எண்களான டி.என்.14ஏ.எஸ்.0277 என்ற எண் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. டிரைவர் பெயர் இல்லாமல் வாகன டிரைவர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    பல்சர் மற்றும் யமகா மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்து 2 பேர் மோதியதாகவும் எப்.ஐ. ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    பி.என்.எஸ். 281 என்கிற சட்டப் பிரிவில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், மற்றவர்களின் உயிருக்கு காயம் ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கரூர் தவிட்டுப்பாளையம் சோதனை சாவடி அருகில் பணியில் இருந்த ஏட்டு தெய்வ பிரபு அளித்த புகாரின் பேரிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வேலாயுதம் பாளையம் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து விஜயின் பிரசார வாகனத்தை இன்றோ அல்லது நாளையோ பறிமுதல் செய்ய உள்ளனர்.

    கிழக்கு கடற்கரை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தை எப்போது பறிமுதல் செய்யலாம் என்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று வேலாயுதம்பாளையம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    கரூர் போலீசார் சென்னை வந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக சென்னை மாநகர போலீசாரின் உதவியையும் கரூர் போலீசார் நாடி உள்ளனர்.

    இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யும்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் முடிவு செய்யப்பட்டது.

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
    • தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது வாய்பேச முடியாத இளைஞர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், "விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே 5 பேர் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக சைகை மொழியில் அந்த இளைஞர் பேசியுள்ளார்.

    • தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
    • கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கரூர்:

    கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரியும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட கோரியும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார் கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.

    ஏற்கனவே இந்த வழக்கினை முதலில் கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் நியமிக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், மத்திய மாவட்ட நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை தொடங்கியது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சியாமளாதேவி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். அது மட்டுமில்லாமல் கூடுதல் துணை போலீஸ் சூப்பரண்டுகள், துணைபோலீஸ் சூப்பிரண்டுகளும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற இருக்கிறார்கள்.

    ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கரூர் வந்தனர். முதல்கட்டமாக குழுவினர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமி புறம் பகுதியை பார்வையிடுகிறார்கள். அதன் பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள், டிரோன் பட காட்சிகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிர படுத்த உள்ளனர்.

    முன்னதாக வழக்கின் அத்தனை ஆவணங்களையும் கரூர் போலீசார் இன்று சிறப்பு புலனாய்வு குழு தலைமை அதிகாரி அஸ்ராகர்க்கிடம் ஒப்படைத்தனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.

    அவர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் உயிரிழந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை சந்தித்து குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் சிறப்பு புலானாய்வு குழுவும் விசாரணையை தொடங்கி உள்ளதால் கரூரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனை, உயிரிழந்தோரின் கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
    • சம்பவம் நடைபெற்ற இடத்தில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.

    கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தையொட்டி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேரளாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சிவ தாசன் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, நாகை மாலி எம்.எல்.ஏ., மாநில குழு உறுப்பினர் பாலா ஆகியோர் இன்று காலை கரூர் வந்தனர்.

    அங்கு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்த குழுவினர் அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் காலணிகள் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து கூட்ட நெரிசலில் உயிரிழந்த 2 வயது குழந்தை குரு விஷ்ணுவின் இல்லத்திற்கு சென்று அவர்களின் பெற்றோர்களிடம் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் சம்பவத்தில் உயிரிழந்த ஒரே ஊரைச் சேர்ந்த அதாவது ஏமூர் புதூரைச் சேர்ந்த நான்கு பேரும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

    பின்னர், சுங்ககேட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஹேமலதாவின் கணவர் மற்றும் அதன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    ×