என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது மின் தடை செய்யப்பட்டது எப்போது?

    கரூர்:

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விஜய் பரப்புரையின்போது மின்சாரம் தடை பட்டதால் தான் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. தரப்பில் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் பொதுப்பணித்துறை அலுவலக சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது மின் தடை செய்யப்பட்டது எப்போது? மின்வாரியத்தினர் யார்? யார்? பணியில் இருந்தனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

    அதற்கு மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த விளக்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • இன்றும் குருசரண் உட்பட 3 பேர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகினர்.
    • ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை பொதுமக்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து, கடந்த 6 மற்றும் 7-ந் தேதிகளில் 17 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 8 பேரிடம் விசாரணை நடந்தது. ஏற்கனவே ஆஜரான ஒரு சிலர் நேற்றைய விசாரணைக்கும் வந்து விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்துக்கு நேரில் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், கரூரில் நடிகர் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை ஒப்படைக்குமாறு சம்மன் வழங்கியிருந்தனர்.

    இதையடுத்து, நேற்று த.வெ.க. அரசு வழக்கறிஞர், சென்னை பனையூர் அலுவலக உதவியாளர் குருசரண் உட்பட 3 பேர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தனர். அப்போது, அவர்கள் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. வீடியோ காட்சிப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    அவற்றை பெற்றுக்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    இன்றும் குருசரண் உட்பட 3 பேர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் பல்வேறு ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்யததாக கூறப்படுகிறது. இதனிடையே இன்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

    • 2-வது நாளாக நேற்று 7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர் என 8 பேரிடம் விசாரணை.
    • கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக்கழக பிரச்சார கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதன் உரிமையாளர்கள் வீடியோகிராபர்கள் காவல்துறை அதிகாரிகள் என 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பினர். தொடர்ந்து அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று 2-வது நாளாக 7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் உரிமையாளர் என 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் விசாரனை நடத்தப்பட்டது.

    இதில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். அவர்களை கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.

    சம்பவம் நடைபெற்ற போது உங்களை தொடர்பு கொண்டது யார்? எந்த செல்போன் எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தது?

    நெரிசலில் சிக்கி ஆம்பு லன்சில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது எத்தனை பேர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்? எத்தனை பேர் பிணமாக சம்பவ இடத்திலிருந்து ஏற்றி சென்றீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • சாலையின் வெவ்வேறு பகுதிகளில் வைத்து அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றன.
    • வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட 306 பேருக்கு ஏற்கனவே சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் 3டி லேசர் ஸ்கேனர் கருவி உதவியுடன் சாலையின் பல்வேறு இடங்களில் அளவீடு செய்தனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்து 100 அடி வரை அளவீடு செய்யப்பட்டது. இந்த சோதனை சுமார் 6½ மணி நேரம் நடந்தது.

    நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். காலை 7 மணிக்கு அங்கு வந்த அவர்கள் 3டி லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் வெவ்வேறு பகுதிகளில் வைத்து அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்த அளவீடு செய்யும் பணியானது மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. சம்பவம் நடந்த இடத்தின் 2 பக்கங்களிலும் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றன. நேற்று காலை 7 மணி முதல் மாலை 4.30 மணி வரை 9½ மணி நேரம் இந்த ஆய்வு பணி நடந்தது.

    இன்று 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட 306 பேருக்கு ஏற்கனவே சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் தற்போது 10 வணிகர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

    • உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
    • த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய் அண்மையில் அவர்களை சென்னை வரவழைத்து ஆறுதல் கூறி அனுப்பினார்.

    கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. குஜராத் எஸ்.பி., பிரவீன் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

    சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்துக்கு சென்று 3டி லேசர் ஸ்கேனர் மூலம் அளவிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கூட்டம் நடந்த இடத்தின் அளவும், அதில் எத்தனை பேர் பங்கேற்க இயலும்? அளவுக்கு அதிகமாக எவ்வளவு பேர் அங்கு திரண்டு இருந்தனர் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

    இன்று 2-வது நாளாக காலை 7 மணிக்கு சி.பி.ஐ. தலைமை அதிகாரி பிரவீன் குமார் மற்றும் குழுவினர் வேலுச்சாமிபுரத்துக்கு சென்றனர். பின்னர் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் அளவீடு செய்யும் பணியை தொடர்ந்தனர். அப்பகுதியில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் சம்பவம் நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் தங்களது கடைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருந்தால் கேமராவில் பதிவான பதிவுகளை தங்களிடம் வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு காரணமாக கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இன்று கரூரிலிருந்து சென்ற அனைத்து வாகனங்களும் கரூர்-ஈரோடு சாலை முனியப்பன் கோவிலில் இருந்து கோவை ரோடு வழியாக திருப்பிவிடப்பட்டன.

    பின்னர் அந்த வாகனங்கள் ரெட்டிபாளையம் வழியாக ஈரோடு சாலைக்கு திருப்பிவிடப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால் அங்கு டி.எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சிபிஐ அதிகாரிகள் பணிகள் மேற்கொள்ளும் இடம் கரூர்- ஈரோடு சாலை என்பதால் அப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர். இதனால் அலுவலகங்கள் மற்றும் வேலைக்கு விரைவில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இதையடுத்து தடுப்பு வேலியை அகற்றுமாறு சி.பி.ஐ. அதிகாரிகள், போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து மாற்று வழியாக கோவை சாலைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறிய சதி குற்றச்சாட்டுக்கு விடை தேட உள்ளனர்.
    • சி.பி.ஐ. விசாரணை குழுவில் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து 6 சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து இணைந்துள்ளனர்.

    கரூர்:

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான குழுவினர் கரூர் பயணியர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கரூர் திரும்பினர். அதைத்தொடர்ந்து மீண்டும் சி.பி.ஐ. விசாரணை சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் சில தினங்களுக்கு முன்பு கரூர் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடந்தபோது, அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்கள் மூலமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அவர்களை கரூர் பயணியர் மாளிகைக்கு வரவழைத்து இன்று விசாரணை மேற்கொள்கின்றனர்.

    இதில் நெரிசலுக்கான காரணம் குறித்து துப்பு துலக்குகிறார்கள். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறிய சதி குற்றச்சாட்டுக்கும் விடை தேட உள்ளனர்.

    முன்னதாக வழக்கு பதிவு செய்த கரூர் நகர ஆய்வாளர் மணிவண்ணனிடம் நேற்று முதல்கட்ட விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், வழக்கின் முகாந்திரம் என்ன? என்ன மாதிரியான விசாரணை மற்றும் தகவல் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது?

    முதல் கட்டமாக யாராரிடம் விசாரணை நடத்தப்பட்டது? அதில் பெறப்பட்ட தகவல் என்ன? கூட்டத்திற்குள் சென்ற முதல் ஆம்புலன்ஸ் வாகனம் எது? எந்த தகவல் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சென்றார்? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தவெக நிர்வாகிகள், சி.பி.ஐ.யில் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் ஆகியோரிடம் என அடுத்தடுத்து பலர் விசாரணைக்கு ஆஜர் ஆவார்கள் என தெரிய வருகிறது.

    இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணை குழுவில் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து 6 சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து இணைந்துள்ளனர். இதன் காரணமாக சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணை மேலும் தீவிரமாகவும் என தெரிய வருகிறது.

    • இந்த முடிவு, பாதுகாப்பு காரணங்களால் எடுக்கப்பட்டதாக த.வெ.க தரப்பு தெரிவித்துள்ளது.
    • இந்த சந்திப்பு, த.வெ.க கட்சியின் அரசியல் பயணத்தில் முக்கியமானது என்கின்றனர் த.வெ.க.வினர்.

    கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது. இதில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் அறிவித்த ரூ.20 லட்சம் நிவாரண உதவி அவர்களின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூர் சென்று நேரில் சந்திக்க விஜய் முடிவு திட்டமிட்ட நிலையில் அங்கு மண்டபம் கிடைக்காததால் திட்டத்தை மாற்றியுள்ளார். அதற்கு பதிலாக, மாமல்லபுரத்தில் நாளை (திங்கட்கிழமை) சந்திப்பு நடத்த அறிவித்துள்ளார். இதற்காக கரூரில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முடிவு, பாதுகாப்பு காரணங்களால் எடுக்கப்பட்டதாக த.வெ.க தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில், விஜய், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உதவி அளிக்கும் திட்டங்களை அறிவிக்க உள்ளார். மாமல்லபுரத்தில் குடும்பங்கள் தங்குவதற்காக 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. த.வெ.க நிர்வாகிகள், பயண ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். இதற்காக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் ஏற்கனவே கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

    கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 10 பேர் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 39 பேரின் குடும்பத்தார் சென்னை வர சம்மதித்தனர். அதன்படி அனைவரையும் கரூருக்கு அழைத்து வந்து அங்கிருந்து பிரத்யேக பஸ்கள், வாகனங்கள் மூலம் சென்னைக்கு அழைத்து செல்கிறார்கள்.

    இதற்காக 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. இதனிடையே பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல கரூர் பகுதியில் இருந்து யாரும் வாகனங்கள் அனுப்ப மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து திருச்சி, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. இன்று மதியம் இந்த வாகனங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னைக்கு புறப்பட்டனர்.

    மேலும், இந்த சந்திப்பு, த.வெ.க கட்சியின் அரசியல் பயணத்தில் முக்கியமானது என்கின்றனர் த.வெ.க.வினர். பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சந்திப்பின் போது விஜய், பாதிக்கப்பட்டவர்களுடன் விரிவாக கலந்துரையாடுகிறார்.

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ள விஜய், அவர்களுடன் மனம் விட்டு பேச உள்ளார். இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்திக்க உள்ளனர். அப்போது காயம் அடைந்தவர்களுக்கு அறிவித்த தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார்.

    • த.வெ.க. வக்கீல்கள் முதல் தகவல் அறிக்கை நகலை பெற்றுக்கொண்டனர்.
    • 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கரூர்:

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கடந்த 17-ந்தேதி கரூருக்கு வருகை தந்தனர்.

    அப்போது இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் கோர்ட்டில் கடந்த 22-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதையடுத்து கரூர் கோர்ட்டில், சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் கேட்டு த.வெ.க. வக்கீல்கள் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, த.வெ.க.வினருக்கு சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை நகலை கொடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து த.வெ.க. வக்கீல்கள் முதல் தகவல் அறிக்கை நகலை பெற்றுக்கொண்டனர்.

    சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'கரூர் டவுன் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தான் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    • மேட்டூர் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது.
    • காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மாயனூர் கதவணை கடல்போல் காட்சியளிக்கிறது.

    கரூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது. இதையடுத்து தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. அது அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் கரூர் மாயனூர் கதவணைக்கு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் வினாடிக்கு 69 ஆயிரத்து 70 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கரை வாய்க்காலில் 300 கன அடியும், வடகரை வாய்க்காலில் 300 கன அடியும், கிருஷ்ணராயபுரம் கிளை வாய்க்காலில் 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மாயனூர் கதவணை கடல்போல் காட்சியளிக்கிறது. மேலும், காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

    கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயரிழிந்தனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது.

    அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

    • ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க சென்னை அமர்வு நீதிமன்றம் மறுப்பு.
    • கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறை, தலைவர்கள் மீது அவதூறாக கருத்துகளை பதிவிடும் போக்கு அதிகரிப்பு.

    கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

    உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டதாக ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரதராஜன் முறையீடு செய்தார்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க சென்னை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறை, தலைவர்கள் மீது அவதூறாக கருத்துகளை பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறை கடுமையாக ஆட்சேபனை செய்ததால் வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    • 1300 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.
    • பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரபடுத்த உள்ளனர்.

    கரூர்:

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக விஜய் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜிதேந்திர குமார், மகேஸ்வரி என்பி அஞ்சாரியா அடங்கிய அமர்வு ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்து இந்த தீர்ப்பை வழங்கியது.

    இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.பி.பிரவீன் குமார் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் நேற்று முன்தினம் கரூர் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கினர்.

    இவர்களிடம் நேற்று சிறப்பு புலனாய்வு குழு ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையிலான சிறப்பு குழுவினர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் ஆவணங்கள் மற்றும் விசாரணை நிலை அறிக்கையை ஒப்படைத்தனர். வழக்கு குறித்த 640 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்பட மொத்தம் 1300 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.

    மேலும் ஒரு நபர் ஆணைய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விரைவில் விசாரணை ஆவணங்களை ஒப்படைக்க உள்ளார்.

    ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மரத்தின் மீது ஏறியதில் மரக்கிளை முறிந்து விழுந்தது. இது தொடர்பாக வனத்துறையின் ஆவணங்களை பெற்று வனத்துறையினரிடம் சி.பி.ஐ. குழுவினர் விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தை இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வயிடுகிறார்கள். அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் நடந்த விவரம் குறித்து கேட்டு விசாரிக்கின்றனர்.

    பின்னர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், படுகாயம் அடைந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்கிறார்கள்.

    மேலும் சிறப்பு புலனாய்வு குழு ஒப்படைத்த டிரோன் பட காட்சிகள் மற்றும் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி நெரிசலுக்கு காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரபடுத்த உள்ளனர்.

    இதற்கிடையே சிறப்பு புலனாய்வுக்குழு தங்கி இருந்த இடமான திட்ட அலுவலகத்தில் தங்களது தளவாட பொருட்கள், பிரிண்டர், கணினி உள்ளிட்டவற்றை தங்கள் வாகனத்தில் எடுத்து சென்றனர்.

    அப்போது அந்த அலுவலகத்தின் பின்புறம் சில இடங்களில் காகிதங்கள் கிழித்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. அதன் அருகில் ஒரு பென் டிரைவ்வும் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

    அவை பயன்படுத்தப்பட்டு மீதம் ஆனவையா அல்லது முக்கிய ஆவணங்களா என்பது மர்மமாக உள்ளது. பென் டிரைவ் குப்பைக்கு வந்தது எப்படி என்பதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    அந்த பென் டிரைவை போலீசார் எடுத்து சென்றனர். ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பான புலன் விசாரணை பட்டியலில் தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்ட விவகாரத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் இணைத்துள்ளனர். தீவைத்து எரிக்கப்பட்டது நகல் ஆவணங்களா அல்லது அசல் ஆவணங்களா என சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கரூர் விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×