என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
- மேட்டூர் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது.
- காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மாயனூர் கதவணை கடல்போல் காட்சியளிக்கிறது.
கரூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது. இதையடுத்து தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. அது அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் கரூர் மாயனூர் கதவணைக்கு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் வினாடிக்கு 69 ஆயிரத்து 70 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கரை வாய்க்காலில் 300 கன அடியும், வடகரை வாய்க்காலில் 300 கன அடியும், கிருஷ்ணராயபுரம் கிளை வாய்க்காலில் 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மாயனூர் கதவணை கடல்போல் காட்சியளிக்கிறது. மேலும், காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.






