என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: வேலுச்சாமிபுரத்தில் 2-வது நாளாக சிபிஐ விசாரணை
- உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
- த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய் அண்மையில் அவர்களை சென்னை வரவழைத்து ஆறுதல் கூறி அனுப்பினார்.
கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. குஜராத் எஸ்.பி., பிரவீன் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்துக்கு சென்று 3டி லேசர் ஸ்கேனர் மூலம் அளவிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கூட்டம் நடந்த இடத்தின் அளவும், அதில் எத்தனை பேர் பங்கேற்க இயலும்? அளவுக்கு அதிகமாக எவ்வளவு பேர் அங்கு திரண்டு இருந்தனர் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
இன்று 2-வது நாளாக காலை 7 மணிக்கு சி.பி.ஐ. தலைமை அதிகாரி பிரவீன் குமார் மற்றும் குழுவினர் வேலுச்சாமிபுரத்துக்கு சென்றனர். பின்னர் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் அளவீடு செய்யும் பணியை தொடர்ந்தனர். அப்பகுதியில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் சம்பவம் நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் தங்களது கடைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருந்தால் கேமராவில் பதிவான பதிவுகளை தங்களிடம் வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு காரணமாக கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இன்று கரூரிலிருந்து சென்ற அனைத்து வாகனங்களும் கரூர்-ஈரோடு சாலை முனியப்பன் கோவிலில் இருந்து கோவை ரோடு வழியாக திருப்பிவிடப்பட்டன.
பின்னர் அந்த வாகனங்கள் ரெட்டிபாளையம் வழியாக ஈரோடு சாலைக்கு திருப்பிவிடப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால் அங்கு டி.எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிபிஐ அதிகாரிகள் பணிகள் மேற்கொள்ளும் இடம் கரூர்- ஈரோடு சாலை என்பதால் அப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர். இதனால் அலுவலகங்கள் மற்றும் வேலைக்கு விரைவில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதையடுத்து தடுப்பு வேலியை அகற்றுமாறு சி.பி.ஐ. அதிகாரிகள், போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து மாற்று வழியாக கோவை சாலைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






