என் மலர்
கரூர்
- கரூர் மின்னணு தேசிய சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ரூ.4.25 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றுள்ளது
- 2 ஆயிரத்து 533 கிலோ தேங்காய்கள் விற்பனை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 2 ஆயிரத்து 533 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.25.19 -க்கும், குறைந்தபட்சமாக ரூ15.10- க்கும், சராசரியாக ரூ.23.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 59 ஆயிரத்து 621- க்கு ஏலம் நடைபெற்றது.
இதே போல ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 675 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 85.09- க்கும் குறைந்தபட்சமாக ரூ 53.39- க்கும், சராசரியாக ரூ 82.89- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 980- க்கு ஏலம் நடைபெற்றது.
- நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரால் கரூர் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுகிறது
- தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் பணப் பயிர்கள் காய்ந்து வருகின்றன
வேலாயுதம்பாளையம்,
நொய்யல் ஆறு கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பகுதியில் தொடங்கி திருப்பூர் மாவட்டம் வழியாக வந்து கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது.
நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருந்த சாயக்கழிவுநீரை ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழை நீர் வரும்பொழுது மழை நீருடன் கலந்து விடுவது வழக்கம்.
தற்போது கோவை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் அதிக அளவு மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருந்த சாயக் கழிவு நீரை திறந்து விடப்பட்டு உள்ளது.
நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் சாயக்கழிவுநீருடன் சேர்ந்து கரும் பச்சை நிறத்தில் வருகிறது. இந்த நீர் நேராக காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது.
நொய்யல் ஆற்றில் இருந்து பாசனம் செய்யும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவ தால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் கிணறுகளில் உள்ள குடிநீரும் சாய கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
சாயக்கழிவு நீர் கலந்தநீரை காவிரி ஆற்றில் குளிக்கும் போது உடலில் ஒருவிதமான அரிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் சாயக்கழிவு தண்ணீரை தொடர்ந்து குளித்து வந்தாலும் ,இந்த தண்ணீரை குடித்து வந்தாலும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் கூறும்போது:- தற்போது நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை பரிசோதனை செய்ததில் இதன் உப்புத்தன்மை 2100 டிடிஎஸ் என உள்ளது. கடந்த ஆண்டுகளில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீரை பரிசோதனை செய்த போது தண்ணீரின் உப்புத்தன்மை 68 டிடிஎஸ் தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் வெள்ளபெருக்கு ஏற்படும் போது திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருக்கும் சாயக்கழிவு நீரை திறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால்தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் பணப் பயிர்கள் காய்ந்து வருகின்றன. நொய்யல் ஆற்றில் வரும் மழைநீருடன் கலந்து வரும் சாயக் கழிவு நீர் விவசாயம் செய்ய உகந்த தண்ணீர் அல்ல. எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். பாசன விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வேலாயுதம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது
- முருகனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி முதல் நாளை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதே போல புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மேலும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
- கரூர் செல்வநகர் காலனியில் தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
- வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது குறித்து விசாரணை நடத்தி சென்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமிங்கி செல்வநகர்காலனி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பலருக்கு தமிழக அரசு சார்பில் ஒட்டுவில்லை தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதேபோல் அந்தப் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (67). என்பவருக்கும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் ஓட்டு விலை வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. வீடு கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அர்ஜுனன் என்பவரது வீடு மிகவும் பழுதடைந்தது இருந்தது.
இந்நிலையில் அர்ஜுனன் மற்றும் அவரது குடும்பத்தினர் 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை சிதலடைந்து திடீரென விழுந்துள்ளது. அர்ஜுனனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெளியில் வேலைக்கு சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதுகுறித்து அர்ஜுனன் புகளூர் தாசில்தார் முருகன், வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மலையப்பசாமி, வேட்டமங்கலம் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது குறித்து விசாரணை நடத்தி சென்றனர்.
- வேலாயுதம்பாளையத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த விவசாயி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
- காலை 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வைத்து நீண்ட நேரமாக வெடித்துக் கொண்டிருந்ததால் போலீசார் நடவடிக்கை
கரூர்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கந்தம்பாளையம் பகுதியில் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நேரத்திற்கு பிறகும் காலை 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வைத்து நீண்ட நேரமாக வெடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த போலீசார் நீண்ட நேரமாக அரசு அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- கரூர் புன்னம்சத்திரம் கிராமத்தில் பெண்களை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 45). இவரது மனைவி லட்சுமி (39). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் லட்சுமியின் வீட்டின் முன்பு பெரிய ரெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (30). என்பவர் (கூலி தொழிலாளி). அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது பெட்டி கடை வைத்து நடத்திவரும் லட்சுமி இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். இதனால் கமலேஷ், லட்சுமி மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் லட்சுமி பெட்டிக் கடையில் இருந்த போது அங்கு வந்த கமலேஷ் லட்சுமியை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
அப்போது லட்சுமியின் கணவர் மாதேஷ் கமலேஷிடம் தேவையற்ற முறையில் தகராறில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது லட்சுமி சகோதரி சித்ரா அந்த பகுதிக்கு வந்து இருவரையும் தகராறில் ஈடுபட வேண்டாம் என கூறி உள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த கமலேஷ் மாதேஷ் மற்றும் சித்ரா ஆகியோரை கீழே தள்ளிவிட்டு தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதில் மாதேஷ் மற்றும் சித்ரா ஆகியோர் காயம் அடைந்துள்ளனர்.உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் இருவரையும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து லட்சுமி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கமலேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார்
- அடையாளம் தெரியாத கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணி பாளையம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 62). இவரது மகன் பழனிச்சாமி ( வயது 26). இவர் நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பழனிச்சாமி பெட்ரோல் பங்கில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த கார் பழனிச்சாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனிச்சாமியை ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பழனிசாமி ஏற்கனவே வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பழனிச்சாமியின் தந்தை மாரிமுத்து வேலாயுதம்பா ளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தார். அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- பாலத்துறை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- 3 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து வழக்கு பதிவு
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறை சலவை காலனி அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வேலாயுதம்பாளையம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பழனிசாமி (56) , பாலத்துறை சலவை காலனியை சேர்ந்த மாரிமுத்து( 64), வேலாயுதம்பாளையம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்( 50), பாலத்துறை பகுதியை சேர்ந்த விஜயன்( 48) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 3 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் மலைக்கோவிலூர் பகுதியில் நாளை மின் தடை
- செயற்பொறியாளர் ஆனந்த் அறிவிப்பு
கரூர்,
கரூர் கோட்டத்திற்குட்பட்ட மலைக்கோவிலூர் துணைமின் நிலையத்தில் நாைளமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி, பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகபட்டி, தடாகோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- கரூரில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் அரசு அனுமதி இன்றி மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு மதுபாட்டில்களை அதிக விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்து கொண்டு இருந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். அதேபோல் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதுபாட்டில்களை விற்பனை செய்த புஞ்சை தோட்டக்குறுச்சி பகுதியை சேர்ந்த சண்முகம்(55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவிலில் அங்காள பரமேஸ்வரிஅம்மனுக்கு பால் ,தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் விபூதி தேன் கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது .
அதேபோல் வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவில், நானப்பரப்பு மாரியம்மன் கோவில், தளவா பாளையம் மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில்,சேமங்கி மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன் ,பேரூர் அம்மன் கோவில்,திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில்,அத்திப்பாளையம் பொன்னாச்சிஅம்மன், உப்பு பாளையம் மாரியம்மன்,புன்னம் மாரியம்மன் ,பகவதி அம்மன், பேரூர்அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன் ,பகவதி அம்மன், , குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் மற்றும் குலதெய்வ கோயில்களில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் குடிப்பாட்டு மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- குளித்தலை அரசு பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு நூதன முறையில் பிரசாரம் நடைபெற்றது
- 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது குளித்தலை ஆர்.டி.ஓ. ரவி தலைமையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் மற்றும் அவர்கள் குடும்பத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வோட் 18 + என்ற அமைப்பில் மாணவர்களை அமர செய்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது, இதில் குளித்தலை வட்டாட்சியர் மகுடேஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வெங்கடேசன், தேர்தல் துணை வட்டாட்சியர் நீதிராஜன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா , கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






