search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் பகுதிகளில் விவசாயம் பாதிப்பு
    X

    கரூர் பகுதிகளில் விவசாயம் பாதிப்பு

    • நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரால் கரூர் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுகிறது
    • தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் பணப் பயிர்கள் காய்ந்து வருகின்றன

    வேலாயுதம்பாளையம்,

    நொய்யல் ஆறு கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பகுதியில் தொடங்கி திருப்பூர் மாவட்டம் வழியாக வந்து கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது.

    நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருந்த சாயக்கழிவுநீரை ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழை நீர் வரும்பொழுது மழை நீருடன் கலந்து விடுவது வழக்கம்.

    தற்போது கோவை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் அதிக அளவு மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருந்த சாயக் கழிவு நீரை திறந்து விடப்பட்டு உள்ளது.

    நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் சாயக்கழிவுநீருடன் சேர்ந்து கரும் பச்சை நிறத்தில் வருகிறது. இந்த நீர் நேராக காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது.

    நொய்யல் ஆற்றில் இருந்து பாசனம் செய்யும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவ தால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் கிணறுகளில் உள்ள குடிநீரும் சாய கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    சாயக்கழிவு நீர் கலந்தநீரை காவிரி ஆற்றில் குளிக்கும் போது உடலில் ஒருவிதமான அரிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் சாயக்கழிவு தண்ணீரை தொடர்ந்து குளித்து வந்தாலும் ,இந்த தண்ணீரை குடித்து வந்தாலும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் கூறும்போது:- தற்போது நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை பரிசோதனை செய்ததில் இதன் உப்புத்தன்மை 2100 டிடிஎஸ் என உள்ளது. கடந்த ஆண்டுகளில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீரை பரிசோதனை செய்த போது தண்ணீரின் உப்புத்தன்மை 68 டிடிஎஸ் தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் வெள்ளபெருக்கு ஏற்படும் போது திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருக்கும் சாயக்கழிவு நீரை திறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால்தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் பணப் பயிர்கள் காய்ந்து வருகின்றன. நொய்யல் ஆற்றில் வரும் மழைநீருடன் கலந்து வரும் சாயக் கழிவு நீர் விவசாயம் செய்ய உகந்த தண்ணீர் அல்ல. எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். பாசன விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×