என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கள்ளக்குறிச்சியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், கார்த்திகேயன், மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக நிய–மனம் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் பணி ஒருங்கிணைப்பாளர்கள் 39 பேருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி னார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பயிற்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்களுக்கு வேலைக்கான அட்டை வழங்குதல், பணியாளர் களுக்கான ஊதியம் குறித்த புகார்களை தீர்த்து வைத்தல், நலிவுற்ற குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு பணி வழங்குதல், புதிய நபர்களை பதிவு செய்து அதற்கான வேலை அட்டை வழங்குதல், பணித்தளத்தில் வேலை ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது குறித்து ஒருங்கிணைப் பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், கார்த்திகேயன், மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • தியாகதுருகம் பகுதி தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்பட்டனர்.
    • யூரியாவை வாங்கி தங்களது பயிர்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 5000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து பராமரித்து வருகின்றனர். பயிர் செய்துள்ள விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுகின்றனர். இவ்வாறு பயிர் கடன் பெரும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர்களுக்கு தேவையான அளவு உரம் மற்றும் ரொக்கம் ஆகியவை கடனாக வழங்கப்படுகிறது. 

    அதன்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று உரம் வாங்கும் விவசாயிகளிடம் ஒருசில கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ளஸ் ஆகிய உரங்களை மட்டுமே இருப்பு உள்ளது எனவும், கடந்த ஒருமாத காலமாக யூரியா இருப்பு இல்லை என கூறுகின்றனர். எனவே விவசாயிகள் தனியார் கடைகளில் யூரியா வாங்கும் அவல நிலை உள்ளது. இதனால் தியாகதுருகம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா வாங்க செல்லும்போது வியாபாரிகள் டி.ஏ.பி.,காம்ளஸ் ஆகிய உரங்களை எடுத்தால் மட்டுமே யூரியா மட்டும் வழங்க முடியும் எனவும் கூடுதலாக திரவ யூரியாவும் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

    மேலும் ரூ. 266 க்கு விற்பனை செய்ய வேண்டிய யூரியா முட்டை ரூ.350 முதல் 400 வரை விற்பனை செய்வதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு யூரியாவை வாங்கி தங்களது பயிர்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதேபோல் கடந்த மாதம் யூரியா கூடுதல் விலைக்கு விற்க்கப்படுவது குறித்து வேளாண்மை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்படி தியாகதுருகம் வேளாண்மை அதிகாரிகள் உரக்கடைகள் ஆய்வு செய்தனர்.ஆனால் வியாபாரிகள் தொடர்ந்து யூரியாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது . எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்து யூரியா கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். . மேலும் தியாகதுருகம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கள்ளக்குறிச்சியில் 21,240 மாற்றுத்திறானாளிகளுக்கு அடையாள அட்டைகள் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
    • நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாமில் 279 பேர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத் திறானாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடை பெற்றது.

    முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பேசிய தாவது:-

    கடந்த 01.08.2021 முதல் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு 8,435 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒருங்கிணைந்த விழுப்புரம் அலுவலகம் மூலமாக 12,541 மாற்றுத் திறானாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடை யாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 279 ேபர் கலந்து கொண்டனர்.

    இதில் ஒற்றை சாளர முறையில் நேற்று 264 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 21,240 மாற்றுத்தி–றனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெற்றிடவும், மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து சலுகை கட்டணம், மாதாந்திர உதவித்தொகை, கல்விக்கடன், அரசின் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் பல்வேறு சலுகைகளை பெற்றிட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பயண்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன், திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரி உதவி மருத்துவ அலுவலர் (எலும்பு அறுவை சிகிச்சை) பிரவீன் பால் மற்றும் மாற்றுத்திறனாளி கள் பலர் கலந்து கொண்ட னர்.

    • சங்கராபுரம் அருகே உரக்கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
    • மர்ம நபர்கள் இரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்ரோட்டில் பிரபல உரக்கடை ஒன்று உள்ளது. இந்த உரக்கடையை தொழுவந்தாங்கால் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வியாபாரி சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

    வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்து விட்டு உரக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை மீண்டும் கடைக்கு சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த கல்லாப்பெட்டி உடைத்து அதில் இருந்த 30,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பன்னீர்செல்வம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மேலும் பகண்டை கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து உரக்கடையில் கைவரிசை காட்டிய மறுமணம் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    மேலும் இதே போன்று பகண்டை கூட்ரோடு சாலை மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சூப்பர் மார்க்கெட் மருந்து கடை மொபைல் கடை, டீக்கடை போன்ற பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் இரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர். இதனால் இந்த கொள்ளை கும்பலை தடுக்கும் விதமாக போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றன.

     

    • உளுந்தூர்பேட்டையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் உளுந்தூர்பேட்டையில் பயிற்சிசேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் வருகின்ற 11-ந் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்நடை பெறவுள்ளது எனமாவட்ட கலெக்டர்ஸ்ரீதர் தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் உளுந்தூர்பேட்டையில் பயிற்சிசேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இந்த தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாமில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஆவின் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்சிறு,குறு மற்றும் நடுத்தரதொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் என்.சி.வி.டி, மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழில் பழகுநராக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும். இதனைதொடர்ந்து ஓராண்டுமுதல்2- ஆண்டுகள்வரை தொழில் பழகுநர் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இந்த பயிற்சியின் போது மாதாந்திர உதவித்தொகை ரூ.8,500 முதல் ரூ.10,000 வரைநிறுவனத்தால் வழங்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள இளைஞர்கள் தொழிற்பயிற்சி சேர்க்கை முகாமினை பயன்படுத்தி க்கொள்ளலாம்.

    இவ்வாறுஅதில் கூறப்பட்டுஉள்ளது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கராபுரம் அருகே இளம் பெண் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
    • சாவில் சந்தேகம் இருப்பதாக மலரின் சகோதரி பொன்னம்மாள், மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பொருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். அவரது மனைவி மலர்(வயது35) மாற்றுத்திறனாளி. கணவரால் கைவிடப்பட்டவர்.

    இவர் திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்த அவர், மணலூர்பேட்டையில் இருந்து சொந்த ஊருக்கு பஸ் இல்லாததால் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் இரவு முழுவதும் காத்திருந்தார். அப்போது திடீரென அதிகாலையில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதையடுத்து அவரை, உறவினர்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். இதனிடைய அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக மலரின் சகோதரி பொன்னம்மாள், மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் முன்னிலையில் மலரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் வைத்து மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அதே இடத்தில் மலரின் உடல் மீண்டும் புதைக்கப்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் பாபு, மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர். மலர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே தெரியும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • உளுந்தூர்பேட்டை அருகே இன்று நடந்த விபத்தில் ஆம்னி பஸ் -லாரி மோதி 2 டிரைவர்கள் பலி ஆனார்கள்.
    • விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையில் இருந்து 20-க்கும் பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் ஒன்று தேனி மாவட்டம் போடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவாக போடி பகுதியை சேர்ந்த சுருளி முத்து என்பவர் உடன் வந்தார்.

    இந்த பஸ் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தனியார் பால் பண்ணை எதிரே வந்தது. அப்போது முன்னாள் இரும்புக் பட்டைகள் ஏற்றி சென்ற கனரக லாரி ஒன்று திடீரென பிரேக் பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் லாரியின் டிரெய்லர் மீது அதிவேகமாக மோதியது.இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சிவா, மாற்று டிரைவர் சுருளி முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே இரும்பு பட்டைகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்து நடந்த ஒரு சில நொடிகளில் ஆம்னி பஸ்சின் பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் ஒன்று ஆம்னி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபதல் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையிலான மீட்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சாலை விபத்தால் சென்னை- திருச்சிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    • சங்கராபுரம் அருகே மகா மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் ஊரணி பொங்கல், காத்தவராயன் திருக்கல் யாணம், கழுமரம் ஏறுதல், காளிகோட்டை இடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப் பட்ட பின், அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 5000 கிலோ மீன்களை கிராம மக்கள் அள்ளி சென்றனர்.
    • மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டனர். அதன்படி குத்தகை காலம் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற உள்ளதாக தொலைபேசி மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் பரவியது. அதன்படி நேற்று சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரக்கோட்டாலம், அணைகரை கோட்டாலம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.

    தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள் அனைவரும் அணைப்பகுதியில் இறங்கி வலைகளை வீசி மீன்களை பிடித்துக் கொண்டு இருந்தனர். போலீசார் பொதுமக்களிடம் அணையின் அருகே ஆழமான பகுதியில் மீன் பிடிக்க வேண்டாம் என கூறினர். ஆனால் பொதுமக்கள் மீன்பிடிக்கும் ஆர்வத்தில் ஆழமான பகுதியில் இறங்கி மீன்களை பிடித்தனர்.  தொடர்ந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் விதமாக அணையின் கதவைத் திறந்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் அணையில் தண்ணீர் குறைந்தது. தொடர்ந்து பொதுமக்கள் விரால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 5000 கிலோ மீன்களை அள்ளி சென்றனர். மணிமுக்தா அணையில் பொதுமக்கள் சுமார் 2000 பேர் கூடி சுமார் 5000 கிலோ மீன்களை பிடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் திருவிழா போல காட்சியளித்தது.

    • கள்ளக்குறிச்சி அருகே மயானத்தில் ஆக்கிரமித்த கரும்பு தோட்டம் அகற்றப்பட்டது.
    • நில அளவையர் விஜயசாந்தி, மணிமாறன் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருேக விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45) இவர் இதே பகுதியில் உள்ள மயானத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் உயர்நீதிமன்றம் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவையர் விஜயசாந்தி, மணிமாறன் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் மூலம் மயான எல்லை அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது.


    இந்நிலையில் நேற்று தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பன்னீர்செல்வம் தலைமையில் மயானத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் பாலு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளாதேவி, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா அருள், ஊராட்சி செயலாளர் முத்துவேல் ஆகியோர் உடனிருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    • சங்கராபுரம் அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.
    • ஷ்பகிரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அதே பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவர் இளைய னார் குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருக்கர வாகனத்தில் சென்றார். பின் அங்கிருந்து கீழ்பாடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டி ருந்தார். புஷ்பகிரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சியில் இலவச மாதிரி தேர்வு -வேலை வாய்ப்பு முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இளைஞர்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் செய்தி குறிப்புகளை வெளியிட்டுள்ளார் அதில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு ப்பணியாளர் தேர்வா ணையத்தால் 7,301 பணியிட ங்களுக்கான (கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்) டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இத்தேர்வு வருகிற 24-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. எனவே, மேற்காணும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் 10.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் மெயின் ரோடு, இந்திலியில் அமைந்துள்ள ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.

    இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படத்துடன் 08.07.2022 அன்று மாலை 5 மணிக்குள் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ அல்லதுhttp://shorturl.at/fJSZ3 என்ற உரலி வழியாகவோ (கூகுள் பார்ம்) பதிவு செய்து கொண்டு, 10.07.2022 அன்று நடைபெறவுள்ள இலவச மாதிரி தேர்வுகளை எழுதி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தனியார்துறை நிறுவனங்கள் மூலம் சிறிய அளவிலான "வேலைவாய்ப்பு முகாம்" மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் CANDIDATE LOGIN-ல் தங்களது விபரங்களை பதிவு செய்துகொண்டு, இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், 08.07.2022 அன்று காலை 10.00 மணி முதல் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், சிறு, குறு மற்றும் தனியார் தனியார்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை தங்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரிலோதேர்வு செய்யவுள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி க்கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×