search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே மீன்பிடி திருவிழா: 5000 கிலோ மீன்களை அள்ளி சென்ற கிராம மக்கள்
    X

    மணிமுக்தா அணையில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி அருகே மீன்பிடி திருவிழா: 5000 கிலோ மீன்களை அள்ளி சென்ற கிராம மக்கள்

    • கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 5000 கிலோ மீன்களை கிராம மக்கள் அள்ளி சென்றனர்.
    • மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டனர். அதன்படி குத்தகை காலம் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற உள்ளதாக தொலைபேசி மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் பரவியது. அதன்படி நேற்று சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரக்கோட்டாலம், அணைகரை கோட்டாலம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.

    தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள் அனைவரும் அணைப்பகுதியில் இறங்கி வலைகளை வீசி மீன்களை பிடித்துக் கொண்டு இருந்தனர். போலீசார் பொதுமக்களிடம் அணையின் அருகே ஆழமான பகுதியில் மீன் பிடிக்க வேண்டாம் என கூறினர். ஆனால் பொதுமக்கள் மீன்பிடிக்கும் ஆர்வத்தில் ஆழமான பகுதியில் இறங்கி மீன்களை பிடித்தனர். தொடர்ந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் விதமாக அணையின் கதவைத் திறந்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் அணையில் தண்ணீர் குறைந்தது. தொடர்ந்து பொதுமக்கள் விரால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 5000 கிலோ மீன்களை அள்ளி சென்றனர். மணிமுக்தா அணையில் பொதுமக்கள் சுமார் 2000 பேர் கூடி சுமார் 5000 கிலோ மீன்களை பிடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் திருவிழா போல காட்சியளித்தது.

    Next Story
    ×