என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • இந்தியா எனது தாய்நாடு, உக்ரைன் எனக்கு வாழ்க்கை தந்த நாடு.
    • ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. கடந்த 10 மாதத்துக்கு மேல் உக்ரைன் நாட்டில் பல்வேறு நகரங்கள் மீது ரஷியா குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    போர் காரணமாக உக்ரைனில் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாட்டினர் வெளியேறிவிட்டனர். ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் உணவு விடுதி நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலா சங்கர் என்பவர் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்து வருகிறார்.

    அவர் போர் முனையில் உள்ள வீரர்களுக்கு மருந்து பொருட்கள், ஹெல்மெட்கள், வெப்ப உடைகள், ஷூக்கள், குண்டுகள் துளைக்காத உடைகள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் கண்காணிப்பு டிரோன்கள் உள்ளிட்டவற்றை அங்குள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி சென்று சேர்த்து வருகிறார்.

    போர் மேகம் சூழ்ந்துள்ள சாலைகளில் அவர் பயணம் செய்து ராணவத்தினருக்கு உதவிகள் செய்கிறார்.

    இது தொடர்பாக பாலா சங்கர் கூறும்போது, 'எனக்கு வாழ்க்கை தந்த நாட்டை இக்கட்டான காலத்தில் கைவிடமுடியாது. இந்தியா எனது தாய்நாடு, உக்ரைன் எனக்கு வாழ்க்கை தந்த நாடு. நான் என்ன வேண்டுமானாலும் செய்ய விரும்புகிறேன்' என்றார்.

    போர் ஆரம்பித்த கால கட்டத்தில் பாலா சங்கர் தனது உணவு விடுதி மூலம் பலருக்கு உணவு வழங்கி உதவி செய்தார். பாலா சங்கரின் இந்த ஆபத்தான சேவையை அவரது குடும்பத்தினர் நினைத்து அச்சத்தில்ல் உள்ளனர். எனினும் பாலாசங்கர் தனது சேவையை தொடர்ந்து வருகிறார்.

    அவரது சகோதரர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்து விட்டனர். மனைவி மற்றும் மகன் போலந்து நாட்டிற்கு இடம்மாறி உள்ளனர். பாலா சங்கர் கடந்த 2013-ம் ஆண்டு மருத்துவமாணவராக உக்ரைன் நாட்டுக்கு சென்று இருந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு கிரிமியாவை ரஷியா இணைந்த இணைந்த பிறகு இது அவருக்கு 2-வது போர் ஆகும். படிப்பை முடித்த பிறகு பாலா சங்கர் உக்ரைன் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றார். மேலும் உணவகத்தை தொடங்கி நடத்தினார்.

    கடந்த 2015-ம் ஆண்டு அவர் கார்கிவ் தமிழ்ச்சங்கம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் கடந்த ஆண்டு இதனை தனது மகன் மாறன் பெயரில் அறக்கட்டளையாக மாற்றி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
    • காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கழிவுகளை தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழல் மாசை விளைவிக்கும் என்பதால் தீ வைப்பதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    எனவே மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குப்பைகளை பொதுமக்கள் யாரும் தீவைத்து எரிக்காமல் இருக்கவும், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர பகுதிகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை ஒதுக்கப்பட்ட இடத்தில் அளித்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    1-வது வார்டு பஞ்சுப்பேட்டை, 3-வது வார்டு ஏகம்பரநாதர் சன்னதி தெரு, 5-வது வார்டு பூக்கடை சத்திரம், 17-வது வார்டு, பி.எஸ்.கே. தெரு, பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் 19-வது வார்டு ரெயில்வே ரோடு, 24-வது வார்டு 3-ம் கால் திருவிழா மண்டபம் தெரு, 25 வது வார்டு அண்ணா தெரு, 33-வது வார்டு விளக்கொளி கோயில் தெரு, 36-வது வார்டு காவலான் தெரு, 48 வது வார்டு ஓரிக்கை ஜங்சன், 49-வது வார்டு சதாவரம் மெயின் ரோடு, 14-வது வார்டு ஆவாக்குட்டை, 11-வது வார்டு திருவேங்கடம் தெரு, 44- வார்டு இரட்டை கால்வாய், 39-வது வார்டு என்.ஜி.ஓ. நகர் ஆகிய 16 இடங்களில் அளித்து சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாடிட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள உள்ளாவூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜேசிடம் தெரிவித்தார். ஆனால் அவர் நமக்கு ஜாதகம் சரி இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்தார். மேலும் இளம் பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்தார். இதற்கிடையே இளம்பெண்ணை பெற்றோர் சமாதானபடுத்தி அவருக்கு வெறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருமணம்செய்ய மறுத்த காதலனான கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மீது சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    காதலியை திருமணம் செய்ய மறுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முன்விரோதத்தில் இந்த கொலை முயற்சி நடந்து இருப்பது தெரிய வந்து உள்ளது.
    • பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைவீதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). லாரி உரிமையாளர். இவர் கம்மார்பாளையம் கடை வீதியில் எம் சாண்ட், மற்றும் சிமெண்ட் விற்பனை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் கம்மார்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே கண்ணன் நின்று கொண்டு இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் பலத்த காயம் அடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பாலுசெட்டிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொலை முயற்சியில் ஈடுபட்டது கோவிந்தவாடி பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகரின் மகன் என்று தெரிகிறது. அவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. முன்விரோதத்தில் இந்த கொலை முயற்சி நடந்து இருப்பது தெரிய வந்து உள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைவீதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடந்தது.

    செல்வம் எம். பி., வரலட்சுமி மதுசூதனன் எம். எல்.ஏ. , நகர் மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே. லோகநாதன், கவுன்சிலர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 6 பேருக்கு இஸ்திரி பெட்டி, 5 பேருக்கு தையல் எந்திரம், 5 பேருக்கு தள்ளுவண்டி, மற்றும் 3 குளிர்சாதன சவப்பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

    முன்னதாக காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி தி.மு.க. சார்பில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து எம்.கே. தண்டபாணி நினைவிடம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் வண்டலூர் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ. சண்முகம்,கூடுவாஞ்சேரி எம்.கே.டி.சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • போலீசார் வந்து ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மர்ம நபர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    போலீசார் அந்த மர்ம நபர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த மர்ம நபர்களிடம் இரும்பு கம்பி, மிளகாய் பொடி மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருந்த அவர்களிடம் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி சத்தம் வந்தது.

    போலீசார் அது குறித்து விசாரணை செய்த போது அந்த மர்ம நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி அருகே இருந்த ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே ஓடி தப்பினர். போலீசார் காஞ்சிபுரம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். 30-க்கும் மேற்பட்ட போலீசார் வந்து ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.

    சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒரு இளம் பெண்ணை மிரட்டி சிலர் கூட்டு பாலியில் பலாத்காரம் செய்து தப்பி விட்டனர். அவர்களிடம் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.

    இந்த பாலியல் வழக்கில் போலீசார் தேடும் தலைமறைவு குற்றவாளிகளாக இந்த மர்ம நபர்கள் இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • முனியனின் சாவில் சந்தேகம் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த சிறுணை கிராமத்தை சேர்ந்தவர் முனியன்.இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருப்புட்குழியை சேர்ந்த பரிமளா என்பவருடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    பரிமளா பாலுசெட்டியிலுள்ள தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். பரிமளா வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லாத அவரது கணவர் முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனது சொல் பேச்சை கேட்காத மனைவியின் செயலால் முனியன் மன உளைச்சலில் அவ்வப்போது மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 2-ந் தேதி பரிமளா, முனியன் வீட்டில் வைத்திருத்த 4000 ரூபாயில் 1000 ரூபாயை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றார். செல்லும் வழியில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    சிறுணையில் இருந்து பாலுசெட்டி செல்லும் சாலையில் பரிமளாவை வழிமறித்து முனியன் வாக்குவாதத்தில் ஈடுபட பரிமளா தான் வைத்திருந்த பிளேடால் முனியனின் கழுத்தை கிழித்துள்ளார்.இதனையடுத்து முனியன் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து பாலுசெட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மேலும் தனது மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத முனியன், பரிமளா பணிபுரியக்கூடிய துணிக்கடைக்கு சென்று சண்டையிட்டதால் பரிமளாவை பணியில் இருந்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா அன்று முதல் முனியனுடன் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வந்த முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் முனியனின் பெற்றோர் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது முனியன் இறந்து விட்டதாக பரிமளா தெரிவித்திருக்கிறார்.

    இதனையடுத்து முனியனின் சாவில் சந்தேகம் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பரிமளா தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பாலுசெட்டி போலீசார் முனியனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிதம்பரம் பொற்சபையில் நடராஜர் மூர்த்தி ஆனந்த தாண்டவம் ஆடி ஞானமூர்த்தியாக உள்ளார்.
    • பக்தர்கள் சிவ தரிசனம் பெற்று நடராஜர் அருளாலே, நல்ல ஆனந்தத்தை பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மிக பயணமாக விசாகப்பட்டினம் சென்று உள்ளார். ஆருத்ரா தரிசனத்தையொட்டி விஜயேந்திரர் பக்தர்களுக்கு கூறி இருப்பதாவது:

    சிதம்பரம் பொற்சபையில் நடராஜர் மூர்த்தி ஆனந்த தாண்டவம் ஆடி ஞானமூர்த்தியாக உள்ளார். அவரை மார்கழி திருவாதிரை ஆருத்ரா நட்சத்திரத்தன்று தரிசித்தல் புண்ணியத்தை அளிக்கும்.

    சமஸ்கிருத பாடல்களை ஸ்ரீ வாஞ்சியம் ராமச்சந்திர பாகவதர் மூலமாக அட்டவீரட்டான தலங்களில் காஞ்சி மகா பெரியவர் பாடச் செய்தார். தினசரி காஞ்சி மடத்தில் இந்த ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

    பக்தர்கள் சிவ தரிசனம் பெற்று நடராஜர் அருளாலே, நல்ல ஆனந்தத்தை பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சிவனுக்கு ஏகவில்வம் சிவார்ப்பணம் என்று வில்வத்தை சமர்ப்பித்து, தும்பைப் பூவை சமர்ப்பித்து சிவ நாமமே கூறி, திருநீறு அணிந்து அருள் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள் செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மின் செயற்பொறியாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின்நிலையத்தில் நாளை (7-ந் தேதி சனிக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள் காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனாம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டுர் பகுதி,

    திருக்காலிமேடு, டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள் செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை ஆகிய பகுதிகளில் நாளை (7-ந் தேதி) சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினருக்கு 76 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இதனை நேற்று முன் தினம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு வீடுகள் தரமற்று கட்டப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    அங்கேயே கட்டுமான ஒப்பந்ததாரரை அழைத்து கடுமையாக கண்டித்தார். ஒதுக்கப்பட்ட நிதியில் தரத்துடன் குடியிருப்புகளை கட்டி முடிக்க வேண்டும். இல்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

    தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    வாலாஜாபாத் ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் ஆர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    கட்டுமானப்பணி செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றபோது ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் கொலை செய்யப்பட்டார்.
    • ராஜூவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடந்தி வருகின்றனர்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர், நரசிம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது30). கார் டிரைவர். அதேபகுதியில் வசித்து வந்த இவரது மாமனார் உடல்நலக் குறைவால் இறந்துபோனார். அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பார்த்திபன் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் குத்தி கொலைசெய்யப்பட்டார்.

    இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பார்த்திபனின் நெருங்கிய உறவினரான எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பாண்டியன் என்கிற ராஜூ என்பவர் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதத்தால் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து ராஜூவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்‌ ஸ்ரீதேவியும் இருளர் குடியிருப்பு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் திட்ட அலுவலர் ஸ்ரீதேவியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் கட்டும்பணி நடந்து வருகிறது. இதேபோல் சிங்காடி வாக்கத்தில் 100 குடியிருப்புகளும், குண்டுகுளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகளும், மலையங்குளம் ஊராட்சியில் 178, குடியிருப்புகளும், காட்ரம்பாக்கத்தில் 31 குடியிருப்புகளும் என மொத்தம் 443 குடியிருப்புகள் ரூ.19 கோடியே 37 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.

    இந்த பணியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கயல்விழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையே முன்னதாக ஊத்துக்காடு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் இருளர் குடியிருப்பு வீடுகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகள் தரமற்று இருப்பது தெரிந்தது. அவர் சுவரில் செங்கல்களுக்கு இடையே இருந்த சிமெண்டுகளில் கைவைத்தபோது அது பெயர்ந்து விழுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ஆர்த்தி காண்டிராக்டரை கண்டித்தார். மேலும் ஒதுக்கப்பட்ட நிதியில் முறையாக கட்டுமான பணி செய்ய வேண்டும் என்று எச்சரித்தார்.

    இதேபோல் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவியும் இருளர் குடியிருப்பு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பணிகள் மந்தமாகவும் தரமற்றும் இருப்பதை கண்டு அவர் அங்கிருந்த ஊழியர்களை கண்டித்தார்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவிவருகிறது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் திட்ட அலுவலர் ஸ்ரீதேவியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். அனைத்து திட்டங்களிலும் இதேபால் அதிகாரிகள் ஆய்வு செய்தால் எந்த முறைகேடும் நடைபெறாமல் நலத்திட்டங்கள் முழுமையாக பயனாளிகளுக்கு கிடைக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×