என் மலர்
காஞ்சிபுரம்
- கடந்த மாதம் மார்கழி என்பதால் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது.
- காஞ்சிபுரத்தில் தற்போது தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பட்டுச்சேலை விற்பனை ஜோராக நடக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் என்றாலே பட்டுச்சேலை தான் நினைவுக்கு வரும். சுபகாரியங்களுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் காஞ்சிபுரத்திற்கு வந்து செல்வார்கள்.
கடந்த மாதம் சுபமுகூர்த்த தினங்கள் இல்லை என்பதால் காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை குறைந்து இருந்தது. கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததை தொடர்ந்து சுப மூகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு பட்டுச்சேலை எடுக்க காஞ்சிபுரத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
வெளியூர்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்து வருவதால் பட்டுச்சேலை விற்பனை கடைகள் அதிகம் உள்ள காஞ்சிபுரம் காந்திரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அனைத்து கடைகளிலும் விற்பனை களை கட்டுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காஞ்சிபுரத்தில் தற்போது தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பட்டுச்சேலை விற்பனை ஜோராக நடக்கிறது.
இதற்கிடையே பட்டுச்சேலை கடைகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்த உரிய பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம், காந்திரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்த உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் காஞ்சிபுரம் நகர மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:-
கடந்த மாதம் மார்கழி என்பதால் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது. தற்போது தை மாதம் தொடங்கி உள்ள நிலையில் பட்டு சேலைகள் அமோகமாக விற்பனையாகும். தை மாதம் மட்டும் அறிஞர் அண்ணா பட்டுக்கூட்டுறவு சொசைட்டியில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு சேலைகள் விற்பனையாகும். முகூர்த்த புடவைகளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அவர்கள் வசதிக்கு ஏற்றார் போல் வாங்கி செல்கின்றனர். அதிக அளவில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலான முகூர்த்த புடவைகள் விற்பனையாகின்றன.
காஞ்சிபுரத்தில் சுமார் ரூ.100 கோடி வரை பட்டுச்சேலைகள் இந்த தை மாதம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
பட்டுச்சேலைகளுக்கு காந்தி ரோட்டில் அதிக அளவில் அரசு சொசைட்டிகள் மற்றும் தனியார் கடைகள் உள்ளன. முக்கிய முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் சேலை வாங்க கார்கள் மற்றும் வாகனங்களில் வருவதால் காந்தி ரோடு பகுதியில் மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் குணசுந்தரி அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காந்தி நகர் பகுதியில் கடந்த 15-ந்தேதி சிங்கபெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி குணசுந்தரி பிறந்த நாள் விழாவுக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் குணசுந்தரி அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து அவரது கணவர் பாலகிருஷ்ணன் காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் குற்றவாளியை விரைந்து பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் வழிகாட்டுதலில் தாலுகா இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் எஸ்.துளசி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் நாகராஜ், மதிவாணன் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். குற்றவாளியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
- குற்றவாளிகள் 568 நபர்களில் இதுவரை 120 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 234 நபர்களை சிறையில் அடைத்தும் மொத்தம் 779 நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கூறுகையில்:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளின் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமான விசாரணை மூலம் முடித்து குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல்செய்து கோர்ட்டு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த ஓராண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொலை, கொலை முயற்சி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 568 நபர்களில் இதுவரை 120 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
49 நபர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்தும், 343 நபர்கள் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஓராண்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும், பிணையத்தை மீறி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 26 நபர்களை ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 234 நபர்களை சிறையில் அடைத்தும் மொத்தம் 779 நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- மொத்தம் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1029 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்தக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 192 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இலங்கையின் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு வெவ்வேறு விமானங்களில் பயணம் செய்த 2 பெண் பயணிகளிடம் இருந்து 837 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1029 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தல் தொடர்பாக 3 பெண் பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிங்கப்பெருமாள் கோவில் தெற்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென குணசுந்தரி கழுத்தில் இருந்த 12 பவுன் நகையை பறித்தான்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், சிங்கப்பெருமாள் கோவில் தெற்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி (60). இவர் தங்கையின் பேரனின் முதலாவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் மற்றொரு பெண்ணுடன் பேசியபடி வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென குணசுந்தரி கழுத்தில் இருந்த 12 பவுன் நகையை பறித்தான். இதில் குணசுந்தரி சில அடிதூரம் தாண்டி கீழே விழுந்தார். பின்னர் கொள்ளையன் நகையுடன் தப்பி சென்று விட்டான். கீழே விழுந்ததில் குணசுந்தரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
- உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
- மோதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகர்(39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே என்.ஜி.ஓ. காலனியில் உள்ள விளையாட்டு திடலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதனை காண பிரபாகர் சென்று இருந்தார். அப்போது ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்த கும்பல் திடீரென பிரபாகரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கும்பல் பிரபாகரனை சுற்றி வளைத்து கை, முகம், கழுத்து, தொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதனை கண்டு பொங்கல் விழாவை காண வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அதேபகுதியை சேர்ந்த 4 பேரை தேடிவருகிறார்கள்.
- சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
- விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆலந்தூர்:
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார்(32). இவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசில், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்கு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அவர் போலீசிடம் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லவும் முயன்று வந்தார்.
இதையடுத்து தினேஷ் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். இதுபற்றி அனைத்து சர்வதேச விமானநிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பாலியல் குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த தினேஷ் குமார் இலங்கைக்கு செல்வதற்காக விமானத்தில் பயணிக்க வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் தினேஷ்குமாரின் பயணத்தை ரத்து செய்து கைது செய்தனர். இதுபற்றி பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
- வங்கி கணக்கை செல்போனில் சரவணன் சரி பார்த்த போதுதான், தான் ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துவிட்டு வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
- நேர்மையாக நடந்து கொண்ட உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களை வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ஆலந்தூர்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர், கடந்த 8-ந் தேதி மாலை வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் தனது வங்கி கணக்கில் பணம் செலுத்த சென்றார்.
அப்போது செல்போன் அழைப்பு வந்ததால் தன்னிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மீது வைத்து விட்டு செல்போனில் பேசியபடியே ஞாபகம் இல்லாமல் வீட்டுக்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் அதே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்த உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள் கார்த்திகேயன், மாசிலாமணி ஆகியோர் ஏ.டி.எம்., எந்திரத்தில் சரவணன் விட்டுச்சென்ற ரூ.50 ஆயிரத்தை எடுத்து நேர்மையுடன் வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்திர மோகனிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில் வங்கி கணக்கை செல்போனில் சரவணன் சரி பார்த்த போதுதான், தான் ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துவிட்டு வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஏ.டி.எம். மையத்துக்கு சென்று அங்கிருந்த காவலாளியிடம் விசாரித்தார். அப்போது வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் பணம் உள்ளது தெரிய வந்தது. பின்னர் போலீஸ் நிலையம் சென்று பணத்தை பெற்றுக் கொண்டார்.
நேர்மையாக நடந்து கொண்ட உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் கார்த்திக்கேயன், மாசிலாமணி ஆகியோரை வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
- மர்ம நபர் குணசுந்தரி அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் தாலிகொத்து போன்றவற்றை பறித்துகொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது. அப்போது அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டரை அருகே உள்ள சிங்கபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி குணசுந்தரி (வயது 60). இவர் மற்றொரு மூதாட்டியுடன் தனது உறவினரின் குழந்தை பிறந்த நாள் விழாவுக்காக கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களை நோட்டமிட்டபடி பின் தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் இவர்கள் சென்றதை சாதகமாக்கி கொண்ட அந்த மர்ம நபர் குணசுந்தரி அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் தாலிகொத்து போன்றவற்றை பறித்துகொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார்.
அந்த மர்ம நபர் நகை பறிப்பில் ஈடுபட்டபோது தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அந்த நபரை தேடி வருகின்றனர்.
- முன்பெல்லாம் போட்டித் தேர்வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை.
- உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பலரும் கஷ்டப்படாமல் முன்னுக்கு வந்து விடவில்லை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக பயின்று 69 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கான பயிற்சிக்கையேடு வழங்கும் விழா நடந்தது. வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் ஆர்.அருணகிரி தலைமை தாங்கினார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நிர்மலாதேவி, பயிற்சியாளர்கள் ஏ.பொன்வேல், எம்.புவனேசுவரி, என்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக உதவியாளர் எம்.அசோக் வரவேற்று பேசினார். விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளரும், சப்-கலெக்டருமான புண்ணியகோட்டி பயிற்சிக்கையேடுகளை வழங்கி பேசியதாவது:-
முன்பெல்லாம் போட்டித் தேர்வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. ஆனால் இப்போது வேலைவாய்ப்பு அலுவலகமே அனைத்தையும் இலவசமாக கற்றுத் தந்து பலருக்கும் அரசு வேலை பெற்றுத்தருவது பாராட்டுக் குரியது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெறுவதோடு நின்று விடாமல் தொடர்ந்து ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள்.விடாமுயற்சியே பலரின் வாழ்க்கையில் வெற்றியின் ரகசியமாக இருந்திருக்கிறது. உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பலரும் கஷ்டப்படாமல் முன்னுக்கு வந்து விடவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரெயில், பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் பலர் கார்களில் செல்கின்றனர்.
- விமானங்களில் சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தை விட பல மடங்கு உயர்ந்து இருந்தது.
மீனம்பாக்கம் :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் பலர் கார்களில் செல்கின்றனர்.
இதனால் அதிக நேரம், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் தற்போது விரைவாக சொந்த ஊருக்கு செல்ல பலர் விமான பயணத்தை நாடுகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனாலும் கட்டண உயர்வு பற்றி கவலைப்படாமல் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் விமானங்களில் பயணம் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலையில் இருந்தே பலர் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் அதிக கட்டணம் கொடுக்க முன் வந்தாலும் விமானங்களில் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டதால் சீட் இ்ல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் செல்ல பயணிகள் பெரும் ஏமாற்றமும், கவலையும் அடைந்தனர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமானங்களும், தூத்துக்குடிக்கு 3 விமானங்களும், திருச்சிக்கு 4 விமானங்களும், கோவைக்கு 6 விமானங்களும் இயக்கப்படுகிறது. இந்த விமானங்கள் சிலவற்றில் நேற்று டிக்கெட்டுகள் முழுவதும் நிரம்பி விட்டன. சில விமானங்களில் ஒரு சில டிக்கெட்டுகள் மட்டும் இருந்தன. இந்த விமானங்களில் சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தை விட பல மடங்கு உயர்ந்து இருந்தது.
பயணிகள் கூட்டத்தை சமாளிப்பதற்காக சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மதுரைக்கு 3 விமானங்களும், தூத்துக்குடிக்கு 2 விமானங்களும், திருச்சிக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகிறது.
இந்த விமானங்களிலும் இன்று(சனிக்கிழமை) பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டன. ஒரு சில விமானங்களில் மட்டும் சில இருக்கைகள் உள்ளன. இந்த விமானங்களில் சென்னையில் இருந்து செல்லும் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் பண்டிகை காலங்களில் விமான டிக்கெட்டுகளை கடைசி நேரத்தில் எடுக்க முயற்சிப்பதால் கட்டணங்கள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் விமான நிறுவனங்கள் கூடுதலாக விமானங்களை இயக்குவதால் விமானத்தில் சீட் இல்லை என்ற நிலை ஏற்படாது.
கடந்த தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் மதுரை, தூத்துக்குடி, கோவை, திருவனந்தபுரம், கொச்சி, மும்பை உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கூடுதல் விமான சேவைகளை இயக்கினார்கள்.
ஆனால் இந்த முறை விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை இயக்கவில்லை. அதற்கு பதிலாக, பெங்களூரு வழியாக சுற்று வழித்தடத்தில் இயக்குகின்றனர். இதனால் பயண நேரம் அதிகமாவதுடன், டிக்கெட் கட்டணமும் பல மடங்கு அதிகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
- சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 2 பைகளையும் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர்.
- டப்பாக்களில் வன உயிரினங்கள் இருந்தது தெரியவந்தது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு தாய்லாந்தில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.
அதில் வந்த பயணிகள் தங்களது பைகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து எடுத்து சென்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்த 2 பெரிய பைகளை மட்டும் நீண்ட நேரம் யாரும் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 2 பைகளையும் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அதில் இருந்த டப்பாக்களில் வன உயிரினங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பையை பிரித்து பார்த்த போது அதில் அரியவகை 3 சிறிய குரங்குகள், 45 சிறிய மலைப் பாம்புகள், 2 நட்சத்திர ஆமைகள், 8 மண்ணுளிப் பாம்புகள், வெள்ளை முள்ளம்பன்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அனைத்து வனஉயிரினங்களும் நல்ல ஆரோக்கியமாக இருந்தது. இதையடுத்து விலங்குகள் அனைத்தையும் அதிகாரிகள் மீட்டு சென்னையில் உள்ள விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த உயிரினங்கள் அனைத்தும் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த போது அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து மர்ம கும்பல் பையில் இருந்த விலங்குகளை விமான நிலை யத்திலேயே விட்டு சென்று இருப்பது தெரியவந்தது.






