என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம். மையத்தில் வாலிபர் தவறவிட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த உணவு டெலிவரி ஊழியர்கள்
- வங்கி கணக்கை செல்போனில் சரவணன் சரி பார்த்த போதுதான், தான் ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துவிட்டு வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
- நேர்மையாக நடந்து கொண்ட உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களை வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ஆலந்தூர்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர், கடந்த 8-ந் தேதி மாலை வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் தனது வங்கி கணக்கில் பணம் செலுத்த சென்றார்.
அப்போது செல்போன் அழைப்பு வந்ததால் தன்னிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மீது வைத்து விட்டு செல்போனில் பேசியபடியே ஞாபகம் இல்லாமல் வீட்டுக்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் அதே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்த உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள் கார்த்திகேயன், மாசிலாமணி ஆகியோர் ஏ.டி.எம்., எந்திரத்தில் சரவணன் விட்டுச்சென்ற ரூ.50 ஆயிரத்தை எடுத்து நேர்மையுடன் வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்திர மோகனிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில் வங்கி கணக்கை செல்போனில் சரவணன் சரி பார்த்த போதுதான், தான் ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துவிட்டு வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஏ.டி.எம். மையத்துக்கு சென்று அங்கிருந்த காவலாளியிடம் விசாரித்தார். அப்போது வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் பணம் உள்ளது தெரிய வந்தது. பின்னர் போலீஸ் நிலையம் சென்று பணத்தை பெற்றுக் கொண்டார்.
நேர்மையாக நடந்து கொண்ட உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் கார்த்திக்கேயன், மாசிலாமணி ஆகியோரை வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.






