என் மலர்
காஞ்சிபுரம்
- மாரியப்பன் என்பவரை கையால் தாக்கி அவரிடமிருந்தும் செல்போன் பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு தனது வீட்டுக்கு செல்ல பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். மேலும் சேக்குப்பேட்டை கவரை தெரு அருகே வேலைக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த மாரியப்பன் என்பவரை கையால் தாக்கி அவரிடமிருந்தும் செல்போன் பறிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து செல்போன்களை பறிகொடுத்த இருவரும் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் காஞ்சிபுரம் பழைய ரெயில்வே ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக அவர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவை சேர்ந்த புருஷோத் (19) திருக்காலிமேட்டை சேர்ந்த சூர்யா (23) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.
- மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- சாலையோரம் கொட்டப்பட்ட குப்பபைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு தோற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் ஊராட்சியில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள முக்கிய
சாலையின் ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த குப்பைகளை அந்த பகுதியிலே எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையில் புகைமூட்டம் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
சாலையோரம் கொட்டப்பட்ட குப்பபைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு தோற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதற்கு போதிய குப்பை தொட்டிகள் அமைத்து குப்பைகளை கொட்டுவதற்கு ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- காஞ்சிபுரம் பாரதிய ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு சார்பில் 5 ஆயிரம் பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
- மாநில செயற்குழு கூட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்ததற்கான தகவல்களை புத்தகமாக கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பாரதிய ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு சார்பில் 5 ஆயிரம் பேர் பா.ஜனதாவில் இணைந்தனர். மாநில தலைவர் அண்ணாமலை, கோட்ட பொறுப்பாளர் வினோத் செல்வம், கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் ஆகியோரின் ஆசியுடன் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர் பாபுஜி ஆகியோரின் ஒத்துழைப்பில் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் லட்சுமி நாராயணன், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பிரதீஸ்வரன் ஆகியோரின் ஒத்துழைப்பின் பேரில் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் பா. ஜனதாவில் இணைந்தனர்.
கடலூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்ததற்கான தகவல்களை புத்தகமாக கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார். அப்போது நிர்வாகிகள் சரவணன், ஜெகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரைய தாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம்.
- சிறப்பு முனைப்பு இயக்கத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு சம்மந்தப்பட்ட கிரைய தாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய முத்திரை சட்ட பிரிவுகள் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்கள் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாயை ஈட்ட ஏதுவாக, முடங்கி உள்ள வசூல் பணியை முடுக்கி விடும் நோக்கத்தில், பதிவுத்துறை தலைவரது சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட அறிவுரைகளுக் கிணங்க, பதிவு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 1.1.2023 முதல் 31.3.2023 வரையிலான காலத்திற்கு ஒரு சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய 63 சார்பதிவகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக, குறைவு முத்திரைத் தீர்வையை செலுத்த தவறி, அதன் காரணமாக முடக்கப்பட்ட ஆவணங்களை, அவ்வாவணத்திற்குரிய விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரைய தாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவ்வாறான கிரையதாரர்கள் தத்தம் ஆவணத்திற்கு ஏற்பட்டுள்ள குறைவு முத்திரைத் தீர்வையினை (அதாவது அசல் மற்றும் வட்டியுடன்) செலுத்தி அசல் ஆவணத்தை விடுவித்துக் கொள்ள ஏதுவாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) மற்றும் தனிவட்டாட்சியர், காஞ்சிபுரம், தொடர்பு கொண்டு, இச்சிறப்பு முனைப்பு இயக்கத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு சம்மந்தப்பட்ட கிரைய தாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- 2 பெண் பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஆலந்தூர்:
வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி தங்கம் கடத்தல் நீடிக்கிறது.
இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 2 பெண் பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அவர்கள் உள்ளாடையில் மறைத்து தங்கத்தை கடத்தி வைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 860 கிராம் தங்க கட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த ஆண்பயணி ஒருவரிடம் 378 கிராம் தங்க கட்டி மற்றும் 90 கிராம் தங்கச் செயினை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.67 லட்சம் ஆகும். ஒரு கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.
- பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). விவசாயி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
பெருமாள் சில வருடங்களாக தனியாக வசித்து வந்தார். பெருமாள் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை உத்திரமேரூர் மருதம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் என்பவருக்கு விற்றார்.
மதனின் மனைவி கோளிவாக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த நிலத்தில் வீடு கட்ட மதன் முடிவு செய்தார். இதற்காக கல், மண் போன்றவற்றை அங்கு இறக்கினார்.
இன்று காலையில் அங்கு வந்த பெருமாள், இது புறம்போக்கு நிலம். இதில் வீடு கட்டக்கூடாது என்று மதனிடம் கூறினார்.
பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை அவரே புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.
இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே விட்டு சென்று பின்பு திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது.
- காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் வெளியே விட்டு செல்லப்படும் இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு திருடி செல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 44-வது வார்டு வேதாச்சலம் நகர் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே விட்டு சென்று பின்பு திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அங்கு இருக்கக்கூடிய சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது 2 இளைஞர்கள் அப்பகுதியை நோட்டமிட்டு சென்று வந்துள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு வெளியே விடப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனத்தை திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. தொடரும் இருசக்கர வாகன திருட்டால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உடனுக்குடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு.
- கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவலர் அரங்கத்தில் நிறைவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
- பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் மற்றும் இதர திட்டம் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.
குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும். குறிப்பாக அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும். தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதை தடுக்கும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள 044-27237175, 740 260 6005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.
- தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாமல்லபுரம்:
ஜி20 கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா தலைமை வகித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி வருகிற 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (பிப்ரவரி 1-ந் தேதி), 2-ந் தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐ.டி.சி. சோழா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.
அவர்களுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பா டுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு உள்ள வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது வெளி நாட்டினரை வரவேற்க எந்தந்த இடத்தில் கலைநிகழ்ச்சி குழுவினர் இருக்க வேண்டும். பாதுகாப்பு குறித்து ஆேலாசனை வழங்கினார். அப்போது சென்னை வட்ட தொல்லி யல்துறை கண் காணிப்பாளர் காளிமுத்து, கோட்டாட்சியர் சஜ்ஜீவனா, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
- விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆலந்தூர்:
இந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக, உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனா். அதைப்போல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா்.
விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதைப்போல் விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கான பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அப்பகுதியில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் தற்போது கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இதைப்போல் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை, விமானங்களில் ஏறும் இடத்தில் பயணிகளுக்கு, பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை சோதிக்கின்றனா். பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப் பின்னரே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.
விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளை அறிவுறுத்தி உள்ளனா்.
சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 30-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு, வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான, 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனா்.






