என் மலர்
காஞ்சிபுரம்
- மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
- காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேதாச்சலம் நகர் பகுதியில் ஏ.டி.எம்.மையம் உள்ளது.
வாடிக்கையாளர் ஒருவர் எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு இருந்தபோது ஏ.டி.எம்.எந்திரத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது.
சிறிது நேரத்தில் தீ மள,மளவென எந்திரம் முழுவதும் பரவி பற்றி எரியத்தொடங்கியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் அலறியடித்து ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேவந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீணை அணைத்தனர். ஏ.டி.எம்.மின் பின்புறம் முழுவதும் எரிந்து நாசமானது. மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த தீவிபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தின் உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது.
- போலீசார் அங்கிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் உள்ள குளக்கரை அருகே பென்ஸ் சொகுசு கார் ஒன்று நேற்று இரவு நின்றது. அதில் இருந்த காதல் ஜோடி தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காதல் ஜோடி காரில் இருந்து இறங்கி கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இதில் ஆவேசம் அடைந்த காதலன் திடீரென காருக்கு தீவைத்தார். காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது.
இரவு நேரத்தில் கார் தீப்பற்றி எரிவதை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அப்போது காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட தகராறில் கார் எரிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் சொகுசு கார் முழுவதும் எரிந்து நாசமானது.
போலீசார் அங்கிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். இதில் காதலன் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் என்பது தெரியவந்தது. அவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு மருத்துவம் படித்து முடித்து உள்ளார். இவரும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்தனர்.
நேற்று மாலை மாணவியை சந்திக்க காதலன் வந்து உள்ளார். பின்னர் அவர்கள் காரில் சுற்றியபடி காஞ்சிபுரம் ராஜகுளம் குளக்கரை அருகே வண்டியை நிறுத்திவிட்டு பேசியபடி இருந்து உள்ளனர். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மாணவி பேச மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த காதலனான டாக்டர் தனது ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை தீவைத்து எரித்து இருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் எரிப்பு தொடர்பாக எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
காதலி பேச மறுத்ததால் காதலன் தனது சொகுசு காரை தீவைத்து எரித்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேசியக்கொடியை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
- செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றினார்.
காஞ்சிபுரம்:
குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஆர்த்தி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறந்து பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னா டை அணிவித்து கலெக்டர் ஆர்த்தி கவுரவித்தார். பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரூ.2 கோடியே 3 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை கலெக்டர் ஆர்த்தி பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல் கண்காணிப்பாளர் பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, தாசில்தார் பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேசியக்கொடியை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கி தலைவர் வாலாஜாபாத் பா. கணேசன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வங்கி தலைவர் பாலாஜி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பயனாளிகளுக்கு ரூ. 30 லட்சத்து 7 ஆயிரத்து 456 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
மேலும் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 23 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 373 அலு வலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள், பரிசுகள் வழங்கி கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கவுரவித்தார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவகர்லால், வட்டாட்சியர் மதியழகன் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ரவி, சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ராசாத்தி செல்வ சேகரன், பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் நகரத் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, ஆலாடு ஊராட்சியில் தலைவர் பிரசாத், அத்திபட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், காட்டூர் ஊராட்சியில் தலைவர் செல்வ ராமன் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.
செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாவட்ட வருவாய் துறை அலுவலர் மேனுவல் ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் தேசிய கொடியை ஏற்றினர். செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
- கடந்த 21-ந்தேதி இரவு தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென கோட்டிங் எந்திரம் வெடித்து தீ பரவியது.
- திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காடரம்பாக்கம் பகுதியில் கார் சைலன்சர்களுக்கு கோட்டிங் அடிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
கடந்த 21-ந்தேதி இரவு தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென கோட்டிங் எந்திரம் வெடித்து தீ பரவியது. இதில் அருகில் இருந்த தொழிலாளர்களான காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த மதன் குமார் (வயது26). திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி(36), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் (19), புத்தாராய் (26),ரஞ்சித் (26) ஆகிய 5 பேருக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டது.
அவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாயார் குளம் அருகே பதுங்கி இருந்த பரிவட்டம் விக்கியை போலீசார் கைது செய்தனர். அப்போது தப்பி ஓட முயன்ற அவருக்கு கை முறிந்தது.
- பதுங்கி இருந்த மணிகண்டன், வசந்தகுமார் ஆகியோரையும் போலீசார் பிடித்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், மாண்டூ கணீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்து வந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி, திருத்தணியை சேர்ந்த ஜெயக்குமார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய வெடிபொருட்கள், ஆணி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
எதிர்தரப்பை சேர்ந்த ஒருவரை தீர்த்து கட்ட அவர்கள் வெடிகுண்டு தயாரித்து வந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காஞ்சிபுரம், தாயார் குளம் பகுதியை சேர்ந்த பரிவட்டம் விக்கி என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே தாயார் குளம் அருகே பதுங்கி இருந்த பரிவட்டம் விக்கியை போலீசார் கைது செய்தனர். அப்போது தப்பி ஓட முயன்ற அவருக்கு கை முறிந்தது.
அவருடன் பதுங்கி இருந்த மணிகண்டன், வசந்தகுமார் ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. கை முறிந்த பரிவட்டம் விக்கிக்கு அரசு ஆஸ்பத்திரியில் மாவு கட்டு போடப்பட்டது.
- வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம்.
- www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200/-, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/- (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.600/-), 12-ம் வகுப்பு தேர்ச்சி/ பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/- (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை ரூ.750/-) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600/- (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை ரூ,1000/-) வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் கல்வித்தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்) பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ளவாறு வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட வருமானச் சான்று, மாற்றுச்சான்றிதழ், கல்விச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல் இணைத்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மாரியப்பன் என்பவரை கையால் தாக்கி அவரிடமிருந்தும் செல்போன் பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு தனது வீட்டுக்கு செல்ல பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். மேலும் சேக்குப்பேட்டை கவரை தெரு அருகே வேலைக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த மாரியப்பன் என்பவரை கையால் தாக்கி அவரிடமிருந்தும் செல்போன் பறிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து செல்போன்களை பறிகொடுத்த இருவரும் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் காஞ்சிபுரம் பழைய ரெயில்வே ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக அவர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவை சேர்ந்த புருஷோத் (19) திருக்காலிமேட்டை சேர்ந்த சூர்யா (23) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.
- மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- சாலையோரம் கொட்டப்பட்ட குப்பபைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு தோற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் ஊராட்சியில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள முக்கிய
சாலையின் ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த குப்பைகளை அந்த பகுதியிலே எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையில் புகைமூட்டம் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
சாலையோரம் கொட்டப்பட்ட குப்பபைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு தோற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதற்கு போதிய குப்பை தொட்டிகள் அமைத்து குப்பைகளை கொட்டுவதற்கு ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- காஞ்சிபுரம் பாரதிய ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு சார்பில் 5 ஆயிரம் பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
- மாநில செயற்குழு கூட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்ததற்கான தகவல்களை புத்தகமாக கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பாரதிய ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு சார்பில் 5 ஆயிரம் பேர் பா.ஜனதாவில் இணைந்தனர். மாநில தலைவர் அண்ணாமலை, கோட்ட பொறுப்பாளர் வினோத் செல்வம், கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் ஆகியோரின் ஆசியுடன் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர் பாபுஜி ஆகியோரின் ஒத்துழைப்பில் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் லட்சுமி நாராயணன், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பிரதீஸ்வரன் ஆகியோரின் ஒத்துழைப்பின் பேரில் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் பா. ஜனதாவில் இணைந்தனர்.
கடலூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்ததற்கான தகவல்களை புத்தகமாக கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார். அப்போது நிர்வாகிகள் சரவணன், ஜெகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரைய தாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம்.
- சிறப்பு முனைப்பு இயக்கத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு சம்மந்தப்பட்ட கிரைய தாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய முத்திரை சட்ட பிரிவுகள் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்கள் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாயை ஈட்ட ஏதுவாக, முடங்கி உள்ள வசூல் பணியை முடுக்கி விடும் நோக்கத்தில், பதிவுத்துறை தலைவரது சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட அறிவுரைகளுக் கிணங்க, பதிவு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 1.1.2023 முதல் 31.3.2023 வரையிலான காலத்திற்கு ஒரு சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய 63 சார்பதிவகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக, குறைவு முத்திரைத் தீர்வையை செலுத்த தவறி, அதன் காரணமாக முடக்கப்பட்ட ஆவணங்களை, அவ்வாவணத்திற்குரிய விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரைய தாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவ்வாறான கிரையதாரர்கள் தத்தம் ஆவணத்திற்கு ஏற்பட்டுள்ள குறைவு முத்திரைத் தீர்வையினை (அதாவது அசல் மற்றும் வட்டியுடன்) செலுத்தி அசல் ஆவணத்தை விடுவித்துக் கொள்ள ஏதுவாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) மற்றும் தனிவட்டாட்சியர், காஞ்சிபுரம், தொடர்பு கொண்டு, இச்சிறப்பு முனைப்பு இயக்கத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு சம்மந்தப்பட்ட கிரைய தாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- 2 பெண் பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஆலந்தூர்:
வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி தங்கம் கடத்தல் நீடிக்கிறது.
இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 2 பெண் பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அவர்கள் உள்ளாடையில் மறைத்து தங்கத்தை கடத்தி வைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 860 கிராம் தங்க கட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த ஆண்பயணி ஒருவரிடம் 378 கிராம் தங்க கட்டி மற்றும் 90 கிராம் தங்கச் செயினை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.67 லட்சம் ஆகும். ஒரு கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.
- பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). விவசாயி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
பெருமாள் சில வருடங்களாக தனியாக வசித்து வந்தார். பெருமாள் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை உத்திரமேரூர் மருதம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் என்பவருக்கு விற்றார்.
மதனின் மனைவி கோளிவாக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த நிலத்தில் வீடு கட்ட மதன் முடிவு செய்தார். இதற்காக கல், மண் போன்றவற்றை அங்கு இறக்கினார்.
இன்று காலையில் அங்கு வந்த பெருமாள், இது புறம்போக்கு நிலம். இதில் வீடு கட்டக்கூடாது என்று மதனிடம் கூறினார்.
பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை அவரே புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.
இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






