search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அசாமில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி திடீர் மரணம்
    X

    அசாமில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி திடீர் மரணம்

    • விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நேற்று இரவு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கினர்.
    • மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி சஜித் அலி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

    ஆலந்தூர்:

    அசாம் மாநிலம் கவு காத்தியில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று இரவு 134 பயணிகளுடன், சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.

    அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, விமானத்தில் வந்த கவுகாத்தியை சேர்ந்த சஜித் அலி (46) என்ற பயணிக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு விமானத்திற்குள் அவதிப்பட்டார். அவருடன் வந்த அவருடைய சகோதரர் ராஜேஷ் அலி, இதுபற்றி விமான பணிப்பெண்களுக்கு தெரிவித்தார்.

    உடனடியாக அவர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நேற்று இரவு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கினர்.

    சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி சஜித் அலி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

    இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சஜித் அலி ஏற்கனவே, கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மேல் சிகிச்சை பெறுவதற்காக, விமானத்தில் தனது சகோதரர் ராஜேஷ் அலியுடன் வந்தபோது திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதற்கிடையே வழக்கமாக, இந்த விமானம் இரவு 9.40 மணிக்கு கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் இரவு 10.15 மணிக்கு பெங்களூர் புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த விமானத்திற்குள், பயணி ஒருவர் உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின் இரண்டு மணி நேரம் கழித்து நள்ளிரவு 12.30 மணிக்கு 106 பயணிகளுடன் பெங்களூர் புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×