என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் வாகன சோதனையின் போது போலீஸ் பிடியில் இருந்து 2 பேர் தப்பி ஓட்டம்
- போலீசார் வந்து ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மர்ம நபர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
போலீசார் அந்த மர்ம நபர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த மர்ம நபர்களிடம் இரும்பு கம்பி, மிளகாய் பொடி மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருந்த அவர்களிடம் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி சத்தம் வந்தது.
போலீசார் அது குறித்து விசாரணை செய்த போது அந்த மர்ம நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி அருகே இருந்த ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே ஓடி தப்பினர். போலீசார் காஞ்சிபுரம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். 30-க்கும் மேற்பட்ட போலீசார் வந்து ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.
சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒரு இளம் பெண்ணை மிரட்டி சிலர் கூட்டு பாலியில் பலாத்காரம் செய்து தப்பி விட்டனர். அவர்களிடம் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.
இந்த பாலியல் வழக்கில் போலீசார் தேடும் தலைமறைவு குற்றவாளிகளாக இந்த மர்ம நபர்கள் இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர்.






