என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் ஆசிரியை திட்டியதால் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை
    X

    காஞ்சிபுரத்தில் ஆசிரியை திட்டியதால் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    • மாணவியை திட்டிய ஆசிரியையிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
    • ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் ரஜினி. அரசு பஸ்சில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் கனிஷ்கா (வயது 16). காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து உள்ளார். அவர் வரலாறு பாடப்பிரிவு எடுத்து இருந்தார்.

    மாணவி கனிஷ்காவுக்கு ஆங்கிலப்பாடம் படிப்பதில் சிரமம் இருந்தது. தன்னால் ஆங்கிலம் சரியாக படிக்க முடியவில்லையே என்று தொடர்ந்து மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.

    இது பற்றி அவர் அடிக்கடி தனது தோழிகளிடம் தெரிவித்து வருத்தம் அடைந்தார்.

    இந்த நிலையில் வகுப்பில் இருந்தபோது ஆங்கில பாடத்தை சரிவர படிக்கவில்லை என்று ஆசிரியை ஒருவர் மாணவி கனிஷ்காவை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவளிடம் பெற்றோரையும் பள்ளிக்கு அழைத்து வரும்படி தெரிவித்தார்.

    மற்ற மாணவிகளின் முன்பு ஆசிரியை கடுமையாக நடந்ததால் மாணவி கனிஷ்கா மிகவும் மனவேதனை அடைந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் கனிஷ்கா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. ஏற்கனவே மனமுடைந்து இருந்த கனிஷ்கா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரம் கழித்து தாய் லதா வீட்டுக்கு வந்தபோது மகள் கனிஷ்கா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறி துடித்தார்.

    இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது மாணவி கனிஷ்கா தனது டைரியில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர். அதில் அவர் எழுதி இருப்பதாவது:-

    பள்ளியில் இன்று ஆசிரியை திட்டி விட்டார்கள். நான் எந்த தவறும் செய்யாமல் இருக்கும் போது எல்லாம் என்னை திட்டுகிறார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கும் திட்டுகின்றனர்.

    நாளை தந்தையை அழைத்து வரும்படி ஆசிரியை கூறி உள்ளார். எப்பவும் நான் நியாயமாக இருந்தாலும் அநியாயம் தான் நடக்கிறது.

    கடவுளே இல்லை. எனக்கு ஒருமுறை கூட நல்லது நடக்கவில்லை. எப்பவும் பார்த்ததில்லை. தேர்வில் 'பிட்' அடித்தவர்கள் மட்டும் தான் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள். எப்பவும் படித்து எழுதும் எனக்கு மதிப்பெண்ணில் ஒருமுறை கூட 'குட்' போட்டதில்லை. நான் ஒருமுறை கூட குட் வாங்கியது இல்லை.

    லாரி வண்டியின் மீது சைக்கிளை விட முயன்றும் ஒரு முறை கூட என்னால் சாக முடியவில்லை. எனக்கு உயிருடன் இருக்க பிடிக்கவில்லை.

    அம்மா... என்னை நல்ல ஆங்கில பள்ளியில் சேர்த்து இருந்தால் எனக்கும் மற்றவர்கள் போல் ஆங்கிலம் வந்திருக்கும் அல்லவா....

    எல்லோர் முன்பும் இதுபோல் கேட்டு இருப்பார்களா? எனக்கு ஆங்கிலம் வராதா? எனக்கு சத்தியமா வாழ பிடிக்கவில்லை. சின்ன வயதில் இருந்து ஆங்கிலம் வந்து இருந்தால் இவ்வளவு கஷ்டப்படாமல் இருந்திருப்பேன்.

    வரவர என்னை எனக்கே பிடிக்கவில்லை அம்மா... என்னை ஏன் ஆங்கில பள்ளியில் சேர்க்கவில்லை. நான் சந்தோஷமாக இல்லை. அக்காள், தங்கை நன்றாக படிக்கிறார்கள். என்னால்தான் படிக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் உருக்கமாக எழுதி உள்ளார்.

    மாணவி கனிஷ்காவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவியை திட்டிய ஆசிரியையிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×