என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • 150 பவுன் நகை, மற்றும் ரூ. 5 1/2 லட்சம்ரொக்கம், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
    • கொள்ளையடித்த நகைகளை கிணற்றில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே உள்ள கண்ணப்பன் தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. தொழில் அதிபர். இவர் ரங்கசாமி குளம் பகுதியில் சிமெண்ட், கம்பி, டைல்ஸ், பெயிண்ட், உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 13-ந்தேதி சுந்தரமூர்த்தி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றார். அவர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 150 பவுன் நகை, மற்றும் ரூ. 5 1/2 லட்சம்ரொக்கம், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு நகை-பணத்தை அள்ளி சென்று இருந்தனர்.

    இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த குணசேகரன், சென்னையை சேர்ந்த ராஜன், சிவவிநாயகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கொள்ளையடித்த நகைகளை அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே திருப்பணமூரில் சாலையோரம் உள்ள கிணற்றில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் தேடினர். அப்போது ஒரு பையில் 62 பவுன் நகையை மீட்டனர்.

    மேலும் கைதான 3 பேரிடமும் மீதி நகை மற்றும் ரொக்கப்பணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையில் ரெயில் நிலைய ரோட்டில் நடைபெற்றது.
    • ஏழைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கூடுவாஞ்சேரி:

    நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர தி.மு.க.சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையில் ரெயில் நிலைய ரோட்டில் நடை பெற்றது. நகர செயலாளரும், நகர் மன்ற தலைவருமான எம்.கே.டி.கார்த்திக் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில் தலைமைக் கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா, அத்திப்பட்டு சாம்ராஜ், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக நந்திவரம் கூடு வாஞ்சேரி நகர் மன்ற துணைத்தலைவர் வழக்க றிஞர் ஜி.கே.லோகநாதன் அனைவரையும் வரவேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் இரா.ஜிஜேந்திரன் ஜிஜி, காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சந்தானம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், கே.பி.ஜார்ஜ், கே.பி.அச்சுதாஸ், எஸ்.அப்துல்காதர், டி.ராம மூர்த்தி, கவுன்சிலர் ஸ்ரீமதிராஜி, பா.ஹரி, கவுன்சிலர் பா.ரவி, என்.டில்லி, கவுன்சிலர் ஜெ.குமரவேல், கவுன்சிலர் டி.சதிஷ்குமார், ஜெ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூடுவாஞ்சேரி நகர வார்டு செயலாளர்கள் கவுன்சிலர் எம்.நாகேஸ்வ ரன்,கவுன்சிலர் ர.விக்னேஷ், கே.பாஸ்கர்,மதனகோபால், ஒய்.ஜினோ,எஸ்.மதன்,பி.சதீஷ்,கே.ஏகாம்பரம்,வி.கே.ஏழுமலை,ஜி.மோகன்,எம்.கே.எஸ்.செந்தில், எம்.கே.பி.நரேஷ்பாபு, ஜி.எம்.கார்த்திக், எஸ்.முரளி, எஸ். ஜெகதீசன், டி.பிரகாஷ், எஸ்.பழனி வேல், ஆர்.கணேசன்,த.சீனி வாசன், என்.கோகுல நாதன், வி.சண்முகம்மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி கவுன்சிலர்கள் அ.டில்லீஸ்வரி ஹரி,ஜெயந்திஅப்பு, எம்.நக்கீரன், எஸ்.சரஸ்வதி, திவ்யாசந்தோ ஷ்குமார், சசிகலாசெந்தில், அம்பிகாபழனி,ஸ்ரீமதிடில்லி,கவுசல்யாபிரகாஷ்,ஜெயந்திஜெகன்,நளினிமோகன், பரிமளா கணேசன், சுபாஷினி கோகுலநாதன் மற்றும் வழக்கறிஞர்கள் வி.மகாலிங்கம், ஜெயசாமு வேல், எம்.கே.டி.சரவணன், எம்.கே.பி.சதிஷ்கு மார்,ஆர்.தினேஷ்குமார், ஆர்.பத்ம நாபன்,பொன்.தசரதன், புண்ணியகோட்டி, ஏ.எ.ஸ்.தரணி,கே.பாலாஜி, வெங்கடேசன்,ஜெ.காளிஸ்வரன்,எஸ்.ராம்பிரசாத், பி.கணேசன், சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • 3 சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து சில்லரை காசுகள் ரூ.3664 -ஐ திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் கச்சபேஸ்வரர் நகரில் உள்ள அண்ணா தெருவில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது.

    இந்தக் கோயிலில் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை 3 சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து சில்லரை காசுகள் ரூ.3664 -ஐ திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.

    இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒன்றுசேர்ந்து சிறுவர்களை கையும் களவுமாக பிடித்து, கோயில் பொறுப்பாளரான ஜோதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஜோதி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறுவர்களை ஒப்படைத்துவிட்டு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    • மினிலாரி மேம்பால தடுப்புச் சுவரின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் தாலுக்கா, இடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ் மகன் சங்கர் (40). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மினிலாரியில் வேலூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார்.

    அப்போது, காஞ்சிபுரம் அருகே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி அருகில் மேம்பாலத்தின் மீது வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மினிலாரி மேம்பால தடுப்புச் சுவரின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் உயிரிழந்த டிரைவர் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து உயிரிழந்த சங்கரின் தந்தை சின்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அப்புறப்படுத்தாமல், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • உயிர் பலி வாங்கும் முன்பு சாலை நடுவே உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அங்காளம்மன் கோவில் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.

    மிகவும் குறுகலான அந்த இடத்தில் சாலையின் இருபுறமும் சுமார் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அப்புறப்படுத்தாமல், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்கம்பங்களும் பழமையான புளிய மரங்களும் சாலையின் நடுவே உள்ளது.

    இதனால் இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.

    உயிர் பலி வாங்கும் முன்பு சாலை நடுவே உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகிறது.

    மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது இந்த திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

    மேலும், இ-சேவை வலைத்தளத்திலிருந்து (www.tnesevai.tn.gov.in/www.tnega.tn.gov.in) இணையவழி சேவைகளை மக்களுக்கு வழங்கும் "அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம் 14-ந்தேதி இரவு வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவர் குப்பங்களில் இருந்து தலா 2 படகுகள் வீதம் 46 படகுகள் இப்போட்டியில் கலந்துக் கொண்டன.
    • 1000 மீனவர்களுக்கு மீன் பிடி கூடை, பொது மக்களுக்கு வேட்டி, புடவை, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    திருப்போரூர்:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை கோவளத்தில் படகுப்போட்டி நடை பெற்றது. விழாவுக்கு சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். திருப் போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான எல்.இதயவர்மன் வரவேற்றார்.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவர் குப்பங்களில் இருந்து தலா 2 படகுகள் வீதம் 46 படகுகள் இப்போட்டியில் கலந்துக் கொண்டன. படகுப் போட்டியின் இறுதிப் போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற கானத்தூர், கோவளம் மற்றும் செம்மஞ்சேரி கிராம மீனவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1000 மீனவர்களுக்கு மீன் பிடி கூடை, பொது மக்களுக்கு வேட்டி, புடவை, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


    நிகழ்ச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர். ராஜா, வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீ.ஆ.வைத்தியலிங்கம், வீ.தமிழ்மணி, து.மூர்த்தி, ஆர்.டி.அரசு, மாவட்டக்குழு தலைவர்கள் மனோகரன், செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், ஒன்றியக்குழு துணைத்தலை வர் சத்யா சேகர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பையனூர் சேகர், செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பா ளர் எல்லப்பன், கோவளம் கிளை தி.மு.க. செயலாளர் அருள்தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாவலூர் மகாலட்சுமி ராஜாராம், படூர் தாரா சுதாகர், முட்டுக்காடு சங்கீதா மயில்வாகனன், கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், கானத்தூர் வள்ளி எட்டியப்பன், சிறுசேரி துணைத் தலைவர் ஏகாம்பரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அருண்குமார், சுரேஷ் மற்றும் தி. மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் நன்றி கூறினார். 

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த குண்ண வாக்கத்தை சேர்ந்த ரவி (வயது49) என்பவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
    • பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 22-ந்தேதி திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

    இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப்பொருட்கள் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி, பள்ளூரை சேர்ந்த முருகன் உள்பட மொத்தம் 9 பேர் சம்பவம் நடந்த அன்றே பலியானார்கள்.

    வெடிவிபத்தில் உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நேற்றுமுன்தினம் இரவு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீஷ் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த குண்ண வாக்கத்தை சேர்ந்த ரவி (வயது49) என்பவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது. இன்னமும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர், காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேர் என மொத்தம் 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • ராவண அவதாரம் உற்சவம் 30-ந்தேதி நடக்கிறது.
    • 5-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. பஞ்சபூத தலங்களில் மண் தலன் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழா 14 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. தினமும் காலையும், மாலையும் இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் எழுந்தருளி காஞ்சீபுரத்தில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராவண அவதாரம் உற்சவம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. 31-ந்தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று மாலை வெள்ளி தேர் உற்சவமும் நடைபெற உள்ளது.

    அடுத்த மாதம் 3-ந்தேதி இரவு தல மகிமை காட்சியான வெள்ளி மாவடி சேவையும், 5-ந்தேதி காலை திருக்கல்யாண உற்சவமும் வெகு விமரிசை யாக நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
    • பட்டாசு வெடிவிபத்தில் மேலும் 2 பேர் பலியான சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இருந்தது.

    கடந்த 22-ந்தேதி மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப்பொருட்கள் வெடித்து சிதறின.

    இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி, பள்ளூரை சேர்ந்த முருகன், குருவிமலையை சேர்ந்த தேவி, காஞ்சிபுரத்தை சேர்ந்த சுதர்சன் உள்பட மொத்தம் 9 பேர் சம்பவம் நடந்த அன்றே பலியானார்கள். இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

    வெடிவிபத்தில் உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(50), மற்றும் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ஜெகதீஷ் (35) ஆகிய 2 பேர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

    இதனால் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. இன்னும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர், காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேர் என மொத்தம் 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அவர்களது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பட்டாசு வெடிவிபத்தில் மேலும் 2 பேர் பலியான சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நாகராஜுடன் மது குடிக்க சென்ற நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் ஊராட்சியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது41). அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார்.

    நேற்றுமாலை நாகராஜ், மது குடிப்பதற்காக கிளாய் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே தனது நண்பர்களுடன் சென்றார்.

    அப்போது நண்பர் ஒருவர் கூடுதலாக மது வாங்கிவிட்டு திரும்பி வந்த போது நாகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடன் இருந்த மற்ற நண்பர்கள் மாயமாகி இருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. நாகராஜுடன் மது குடிக்க சென்ற நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கொலையுண்ட நாகரா ஜுக்கு திவ்யா என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். நாகராஜ் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தார்.

    அவரது கொலைக்கு பெண்தகராறு காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    • உத்திரமேரூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • விபத்துக்கு காரணமான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் பாண்டியன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் ஒன்றியம் மேனலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65). தச்சு வேலை செய்து வந்தார். நேற்று காலை 10 மணி அளவில் மேனலூரில் இருந்து உத்திரமேரூரில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் மர சட்டங்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார். உத்திரமேரூர் நங்கையர்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்லப்பன் தலையில் லாரியில் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செல்லப்பன் பலியானார். இது பற்றி செல்லப்பன் மகன் முருகன் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பலியான செல்லப்பன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் பாண்டியன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×