என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் அதிக பணத்தை வசூல் செய்தனர்.
    • மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியச் செல்வி. இவர்களது மகன்கள் சகாய பாரத், ஆரோக்கிய அருண், இருதய ராஜ்.

    இவர்களில் சகாய பாரத் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். ஆரோக்கிய அருண் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து போலீசாக உள்ளார். இருதயராஜ் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் அதிக பணத்தை வசூல் செய்தனர். மேலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது, பெரும் நிறுவனங்களின் விற்பனை உரிமம் எடுப்பது, மற்றும் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதுவரை சுமார் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.

    ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை கொடுக்காததால் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கட்டிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ் சகோதரர்களான சகாயபாரத், ஆரோக்கிய அருண் ஆகியோர் குடும்பத்துடன் சேர்ந்து ரூ.40 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து ஜோசப், அவரது மனைவி மரிய செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத் அவரது மனைவி சமியா உள்ளிட்ட8 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி நிதி மோசடி செய்த வழக்கில் போலீஸ் சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு அவர்களிடம் போலீசார் உட்பட ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நள்ளிரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடிசை வீடு முழுவதும் பரவியது.
    • வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள திம்ம ராஜம் பேட்டை ஊராட்சி, சீயமங்கலம் காலனியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று இருந்தனர். இதையடுத்து நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான சரவணன் என்பவர் வெங்கடேசின் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.

    இந்நிலையில் நள்ளிரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடிசை வீடு முழுவதும் பரவியது. இதில் வெங்கடேசும், சரவணனும் சிக்கிக்கொண்டனர். அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயில் இருந்து தப்பி முயன்றனர். இதில் சரவணன் லேசான தீக்காயத்துடன் தப்பி வெளியே வந்தார். ஆனால் வெங்கடேஷ் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த தும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் பலியான வெங்கடேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சரவணன் உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடிபோதை தகராறில் வாலிபரை நண்பரே பீர்பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரியதர்ஷனை தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத், நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் வினித்குமார் (வயது24) வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு அதே பகுதியில் தனது நண்பர்களுடன் முக்கண்ணி அம்மன் கோயில் தெரு பகுதியில் மதுகுடித்ததாக தெரிகிறது. அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்களில் ஒருவரான பிரியதர்ஷன் என்பவர் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து வினித் குமாரின் கழுத்தில் பலமாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த வினித் குமார் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த நண்பர்கள் வினித்குமாரை மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வினித்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே அங்கிருந்த பிரியதர்ஷன் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரியதர்ஷனை தேடி வருகின்றனர்.

    குடிபோதை தகராறில் வாலிபரை நண்பரே பீர்பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவர் இறந்த சோகத்தில் காமாட்சி மன உளைச்சலில் இருந்து வந்தார்.
    • காமாட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மடம் தெருவை சேர்ந்தவர் காமாட்சி (42). இவரது கணவர் செல்வம். இவர் கடந்த 29-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    கணவர் இறந்த சோகத்தில் காமாட்சி மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வெளியே சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற காமாட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து உயிரிழந்த காமாட்சியின் மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
    • இடைத்தரகர்கள் தலையீடு தெரியவந்தால் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி 69,820 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை தொடங்கி நடந்து வருகிறது.

    விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக 103 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் என மொத்தம் 123 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு 4027.240 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

    இதுபோன்று இடைத்தரகர்கள் தலையீடு தெரியவந்தால் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 4-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.
    • மதுக்கடைகள் மூடப்படும் தகவலை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    மகாவீர் ஜெயந்தியையொட்டி வருகிற 4-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • இருவரும் வீட்டை கேட்டதால் இருவரிடையே பாகப்பிரிவினை தகராறு இருந்து வந்தது.
    • கொலைக்கான காரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்

    திருகக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்திமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் ஜிப்சி காலனி பகுதி உள்ளது. இந்த காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ் (வயது 30). இவரது தம்பி சந்திரன் (27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒரே வீட்டில் கடந்த 15 வருடங்களாக கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். அந்த வீட்டின் அருகே அரசு சார்பில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 சென்ட் காலி நிலம் உள்ளது.

    இந்த நிலையில் சந்திரன் தனிக்குடித்தனம் செல்ல விரும்பினார். இதற்காக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தனக்குரிய பங்கை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒத்துக்கொண்ட வெங்கடேஷ், தற்போது வசித்து வரும் வீட்டை தான் எடுத்துக்கொள்வதாகவும், 3 சென்ட் நிலத்தை நீ எடுத்துக்கொண்டு வீடு கட்டிக்கொள் என்றும் கூறினார்.

    அதற்கு சந்திரன் ஒத்துக்கொள்ளவில்லை. வீட்டுடன் கூடிய இடம் தனக்கு வேண்டும். 3 சென்ட நிலத்தை நீ எடுத்துக்கொள் என்றார். இருவரும் வீட்டை கேட்டதால் இருவரிடையே பாகப்பிரிவினை தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு வெங்கடேசை, அவரது மனைவி விநாயகி, சந்திரன் அவரது மனைவி நந்தினி மற்றும் நண்பர்கள் 3 பேர் என அனைவரும் ஒன்றாக வீட்டில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது வெங்கடேசனுக்கும், சந்திரனுக்கும் பாகப்பிரி வினை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து சந்திரனை அங்கிருந்து வெளியே அனுப்பு உள்ளனர்.

    இதற்கிடையே மது போதையில் இருந்த சந்திரனுக்கு அண்ணன் மீதான ஆத்திரம் அடங்க வில்லை. வீட்டை தனக்கு தராத அண்ணனை கொலை செய்ய திட்டமிட்டார்.

    இதற்காக சந்திரன் தனது வேட்டை துப்பாக்கிைய எடுத்துக்கொண்டு அதில் நண்பர் ஒருவரின் உதவியுடன் வெடிமருந்து மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளை நிரப்பினர்.

    பின்னர் துப்பாக்கியுடன் தனது வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

    விளக்கை போட்டால் அனைவரும் எழுந்து விடுவார்கள் என்பதால் சந்திரன் வெளிச்சத்திற்காக டார்ச் லைட்டை தனது தலையில் கட்டினார். பின்னர் மெதுவாக கதவை திறந்து வெங்கடேசை நோக்கி டார்ச் லைட் அடித்தார். பின்னர் வேட்டை துப்பாக்கியால் அவரது மார்பில் குறி பார்த்து சுட்டார்.

    இதில் காயம் அடைந்த வெங்கடேஷ் எழுந்தார். துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டு அவரது மனைவி விநாயகியும் எழுந்தார். அப்போது அங்கு சந்திரன் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.

    இதைபார்த்த விநாயகி கூச்சல் போட்டு அலறினார். வெங்கடேஷ் தம்பியிடம் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்து வெளியே ஓடினார். ஆனாலும் ஆத்திரம் அடைந்த சந்திரன், தப்பி ஓட முயன்ற வெங்கடேசனின் கழுத்து பகுதியில் சுட்டார். இதில் அவர் குண்டு பாய்ந்து இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்திரனை போலீசார் தேடினார்கள். அப்போது அவர் அந்த பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சந்திரனை கைது செய்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் செந்தில் குமரன் ஆய்வு நடத்தினார். வெடிமருந்து உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தார். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலைக்கான காரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பக்தர்கள் கற்பூர தீபாராதனைகள் காண்பித்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
    • வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கக்கூடியதும், உலக புகழ் பெற்றதுமான காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

    அன்று முதல் சாமி காலை, இரவு என இரு வேளைகளிலும் பவழக்கால் சப்பரம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர்பிரபை, பூத வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, கைலாசபீட ராவண வாகனம் போன்ற வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் 6-ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாளுடன் எழுந்தருளி முன்னால் செல்ல, 63 நாயன்மார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து புடைச்சூழ பின் தொடர்ந்து வர மேளத்தாளங்கள் இசைக்க, வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் சாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் காண்பித்து பக்தி முழக்கமிட்டு பயபக்தியுடன் 63 நாயன்மார்களுடன் படைச்சூழ வந்த ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வேண்டி வணங்கி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

    • குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • 1½ கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    குன்றத்தூர்:

    வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே உள்ள குப்பைமேடு அருகே உள்ள சுடுகாட்டில் சிலர் அமர்ந்து மதுகுடித்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

    இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் பிடிபட்டவர்கள் கூடுவாஞ்சேரியை சேர்ந்த பாலாஜி என்ற காக்கா பாலாஜி (24), யுவராஜ் (25), தாமோதர பெருமாள் (23) என்பது தெரியவந்தது.

    இவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இருசக்கர வாகனத்தில் வைத்து போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க சுடுகாட்டில் வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    • அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
    • செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் நாகராஜை கொலை செய்தது தெரிய வந்தது.

    ஸ்ரீபெரும்புதூர்,

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிளாய் கிராமம் தெருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 41).இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும், டிராவல்ஸ் தொழிலும் செய்து வந்தார். கடந்த 24-ந் தேதி நாகராஜ் நண்பர்களுடன் மதுகுடிக்க சென்றபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் நாகராஜை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே செல்வக்குமார் உள்பட 4 பேரை கைது செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ராமு, ரவி, சிலம்பரசன், மகாலட்சுமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    கடந்த ஜனவரி மாதம் கிளாய் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்கு பிறகு ஆடு வெட்டி கறி விருந்து நடைபெற்றது. அப்போது இந்த விருந்தில் அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் பல முறை நாகராஜை தீர்த்துக்கட்ட முயற்சி செய்து உள்ளார். சம்பவத்தன்று நாகராஜ் மதுகுடிப்பதை அறிந்து செல்வக்குமார் தனது கூட்டாளிகளுடன் சென்று தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது. கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.
    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 ரொக்கம், 320 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி கிடைத்தது.

    காஞ்சிபுரம்:

    மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் செயல் அலுவலர் கவெனிதா, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 ரொக்கம், 320 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி கிடைத்தது.

    • மற்ற மாணவிகள் வந்த போது ஸ்வேதா தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விரைந்து வந்து ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு வேலூரை சேர்ந்த வேலு என்பவரது மகள் ஸ்வேதா(வயது19) விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    மாணவி ஸ்வேதா கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு உடன் தங்கி உள்ள மாணவிகள் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் விடுதி அறையில் தனியாக இருந்த மாணவி ஸ்வேதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் மற்ற மாணவிகள் வந்த போது ஸ்வேதா தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினருக்கும், ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி ஸ்வேதாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×