என் மலர்
காஞ்சிபுரம்
சரக்கு விமானங்கள் மூலம் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பப்படுகின்றன.
நேற்று சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு அனுப்புவதற்காக சில பார்சல்கள் விமானநிலைய சரக்கு பெட்டகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அதில் கைவினைப் பொருட்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பார்சலில் இருப்பது கைவினைப் பொருட்கள் தானா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிறப்பு நுண்ணறிவு பிரிவு புலன் விசாரணை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அந்த பார்சல்கள் பிரித்து பார்க்கப்பட்டன.
அப்போது, அதில் கைவினைப் பொருட்களுக்கு பதிலாக செம்மரகட்டைகள் சிறு சிறு துண்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த பார்சல்களில் மொத்தம் 413 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தன.
இவற்றின் மதிப்பு ரூ.28 லட்சம். இந்த பார்சல்களை அனுப்ப ஏற்பாடு செய்தது யார் என்பது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பார்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த சென்னை முகவரி போலி முகவரி என்று தெரியவந்தது. பார்சலில் போய் சேர வேண்டிய ஹாங்காங் முகவரியும் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு செம்மர கட்டைகளை அனுப்ப முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. #ChennaiAirport
ஈரோட்டை சேர்ந்தவர் மோகனசுந்தரம். தனியார் பால் நிறுவன உரிமையாளர். வியாபாரத்தை விரிவுபடுத்த இவருக்கு ரூ.50 கோடி தேவைப்பட்டது.
அதற்காக சிலரை அணுகிய போது பாங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சென்னை வரவழைத்தனர். பட்டினபாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் 3 பேர் அவரை சந்தித்து பேசினர். அப்போது கடன்பெற்று தர ரூ.1 கோடி தேவைப்படும் என கூறி அதை பெற்றுக் கொண்டனர்.
காரில் வந்த அவர்கள் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி அங்கிருந்து பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.
பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மோகன சுந்தரம் போலீசில் புகார் செய்தார். அதைதொடர்ந்து போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொரட்டூரை சேர்ந்த கார் டிரைவர் ஜெயக்குமார் (40) கைது செய்யப்பட்டார். இவர் கொள்ளை கும்பலுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தை சேர்ந்தவர் மன்னார். இவர் அதே பகுதியில் வீட்டு அலங்கார கம்பிகள் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை கடைக்கு வந்த போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் 300 கிலோ காப்பர் வயர்கள், கட்டிங் எந்திரம் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும்.
இதேபோல் அருகில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையின் ஷட்டரும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் பணம், பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் பிரபு (31). இவர் நேற்று மாலை கூவத்தூர் அடுத்த தன்டாம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சென்னை செல்ல பஸ் ஏறுவதற்காக கூவத்தூர் செல்வதாக கூறி சென்றார்.
இந்த நிலையில் கல்பாக்கம் அடுத்த பெருமாள்சேரி பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் அருகே பிரபு பிணமாக கிடந்தார். சதுரங்கபட்டிணம் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரபு எதற்காக மாமியார் வீட்டுக்கு வந்தார். கூவத்தூர் செல்வதாக கூறியவர் எப்படி பெருமாள்சேரியில் பிணமாக கிடந்தார். யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா? என்று சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த வாழ்முனி நாயக்கர்- மீனாட்சி அம்மாள் தம்பதியரால் இக்கோவில் சிறிய அளவில் கட்டப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.
அம்மனை வழிபட்டால் வேலைவாய்ப்பு, திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியத்தினை அருளுவதாக நம்பப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த நிலையில் வாழ்முனி தம்பதியரின் பேரனும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியுமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் பெரும் பொருட்செலவில் இந்த கோவிலை தற்போது புதுப்பித்து கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. காலை 5 மணிக்கு மகா கணபதி பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெற்றன. நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்று காலை 10.30 மணி அளவில் கோபுர கும்பாபிஷேகமும், 11 மணியளவில் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.
இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பெஞ்சமின், மாபா. பாண்டியராஜன் மற்றும் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முத்தியால்பேட்டை முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்து உள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கோவையை மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை பாலக்காடுக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.
நிவாரண பொருட்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டக்கூடாது. இதில் விளம்பரம் தேடுவது தவறு. உணர்வுபூர்வமாக உள்ளத்தில் இருந்து செய்ய வேண்டும்.
நாளை டெல்லியில் இருந்து மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கொண்டு வரப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்து கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க உள்ளோம். வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் புண்ணிய நதிகளில் அஸ்தி கரைக்கப்படும்.
மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. பிரதமர் பதவி விலக வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், கவர்னரிடம் மனு கொடுக்க போவதாக திருநாவுக்கரசர் சொல்லி வருகிறார். ஊழல் என்றால் என்ன என்று இந்தியாவுக்கே போபர்ஸ் ஊழல் மூலம் பிரகடனம் செய்தது காங்கிரஸ். தரம் தாழ்ந்த அரசியலை காங்கிரசார் செய்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த மணிசங்கர் ஐயரை மீண்டும் காங்கிரசில் சேர்த்து இருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை கட்சியில் சேர்த்திருப்பது தவறான முன் உதாரணம்.
இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #Tamilisaisoundararajan
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்த தேவசுந்தரமூர்த்தி (31). இவர் ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 19-ம் தேதி கீவளூர் குளத்தங்கரை அருகே நின்றிருந்த தேவசுந்தர மூர்த்தியை 13 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்த சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தார்.
விசாரணையில் பெண்ணை கிண்டல் செய்ததில் ஏற்பட்ட தகராறில் கச்சிபட்டு பகுதியை சேர்ந்த 13 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ், சூரியா, மனோஜ், கணேஷ், கோலி, விக்னேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக தலைமறைவான மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரையும் மோடி அரவணைத்து செல்கிறார். எனவே மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் அமையும். வரும் பாராளுமன்ற தேர்தல் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் மட்டுமே தேர்தல் களத்தில் இடம்பெற போகிறது.
ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. நாடு முழுவதும் 80 இடங்களை பிடிப்பது சிரமம். காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாக தான் அமரும்.
தமிழகத்தை பொறுத்த வரை ஏற்கனவே முதல்-அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்தனர். மத்திய அரசு மக்களுக்கு தரும் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
அதே போலதான் தமிழகத்தில் ஆளும் தற்போதைய அ.தி.மு.க. அரசும் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுடன் இணக்கமாக உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற மேல்-சபை துணை தலைவர் தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. அதேபோன்று நாங்களும் பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரைக்கு (அ.தி.மு.க.) தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம்.
அ.தி.மு.க-பா.ஜனதா கட்சிகள் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. எனவே வரும் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #RamdasAthawale #ParliamentaryElection
மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று, இன்று அதிகாலை 5 மணி அளவில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடிக்கு வந்தது.
இந்த பஸ்சை செஞ்சியை சேர்ந்த பிரபு ஆனந்த் (35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சை நிறுத்திய சுங்கச் சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்தும்படி கூறினார்கள். அப்போது, பஸ் டிரைவர் ‘‘இந்த சுங்கச் சாவடிக்கு லைசென்சு முடிந்துவிட்டது. எனவே கட்டணம் செலுத்த முடியாது’’ என்று சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால், பஸ்டிரைவருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னால் வந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்டதூரத்துக்கு நின்று கொண்டிருந்தன.
இந்த நிலையல் டிரைவர் பஸ்சை அங்கிருந்து சிறிது தூரம் நகர்த்தினர். அப்போது 10-க்கும் அதிகமான சுங்கச் சாவடி ஊழியர்கள் சூழ்ந்து கொண்டு பஸ் மீது தாக்குதல் நடத்தி, நிறுத்த முயன்றனர்.
இதனால் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மற்ற தனியார் பஸ் டிரைவர்கள் அதை கண்டித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து அடியோடு நின்றதால் தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பஸ் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு 6 மணி அளவில் பஸ்களும் வாகனங்களும் அங்கிருந்து புறப்பட்டன. இந்த பிரச்சினை காரணமாக செங்கல்பட்டு-சென்னை இடையே 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #tamilnews

பிரதமர் மோடி, சுதந்திர தினவிழா உரையில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் பற்றி அறிவித்தார். 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 15-க்குள் அல்லது அதற்கு முன்பாகவோ இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார். அதற்குள் அந்த திட்டத்தை முடிப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மிகவும் முக்கியமான திட்டமாகவும் உள்ளது.
இந்த திட்டத்தினால் இந்தியாவின் விஞ்ஞானத்துக்கு புது உத்வேகம் கிடைக்கும். 3 மனிதர்களை அழைத்துக்கொண்டு விண்ணுக்கு செல்லும் விண்கலம் 7 நாட்கள் விண்ணில் இருக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் இஸ்ரோவுக்கு சவாலாக உள்ளது. அதை வெற்றிகரமாக நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறோம்.
சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி மாதம் அனுப்பப்படும். சந்திரயான்-2 விண்கலத்தில் சில மாற்றங்கள் மற்றும் சோதனைகள் நடப்பதால் இந்த ஆண்டுக்கு பதிலாக அடுத்த ஆண்டுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.
மேக்-இன்-இந்தியா திட்டத்தின்கீழ் அதிக ராக்கெட்டுகளை தயாரிக்க பிரதமர் நிதி ஒதுக்கி உள்ளார். 2 ஆண்டுகளில் இந்த ராக்கெட்டுகளை தயாரிக்க வேண்டி உள்ளது.
மங்கள்யான் விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மங்கள்யான்-2 விண்கலம் தயாரிப்பதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்று வருகிறது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்புகள் குறித்து செயற்கைகோள் எடுத்த படங்கள் மூலம் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி துல்லியமாக கணக்கிடமுடியும்.
செயற்கைகோள் எடுத்த படங்கள் மூலமாக எவ்வளவு மழை இருக்கும் என்பதை கணித்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வழிகாட்டும் கருவி தயாராகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ISRO
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து விமானம் வந்தது.
அதில் பயணம் செய்த ஆப்பிரிக்க நாடான செனகல்லைச் சேர்ந்த நிடியாமட்டர் (28) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி சென்னை வந்திருப்பது குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை விமான நிலையத்தில் உள்ள ஒரு தனியறையில் அமர வைத்தனர். விசாரணைக்கு பிறகு நிடியாமட்டரை கத்தார் நாட்டுக்கு திரும்ப அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் கத்தார் விமானம் அதிகாலை 4.45 மணிக்கே புறப்பட்டுசென்று விட்டதால் அவரை கத்தார் விமான நிறுவன அதிகாரிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் தனியறையில் அடைக்கப்பட்டு இருந்த நிடியாமட்டர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் விமான நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நிடியாமட்டர் உரிய ஆவணம் இன்றி சென்னை ஏன் வந்தார்? போதை பொருள் கடத்தலில் தொடர்பு உடையவரா? அல்லது பயங்கரவாத கும்பலின் பின்னணியில் உள்ளவரா? என்று விசாரித்து வருகிறார்கள். அவரை விமான நிலையம் முழுவதும் தேடினார்கள். ஆனால் விமான நிலையத்திற்கு வெளியே தப்பி சென்று விட்டது தெரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து கியூபிராஞ்ச் போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
அவரது புகைப்படம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை வைத்து சென்னை முழுவதும் தேடி வருகிறார்கள்.
மேலும் நிடியாமட்டர் விமான நிலையத்தில் இருந்து எப்படி தப்பி சென்றார்? என்பது பற்றியும் விசாரிக்கிறார்கள்.






