என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஒரகடம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.

    படப்பை:

    படப்பையை அடுத்த சேரப்பஞ்சேரி பணப்பாக்கம் துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தர் ராமலிங்கம் (வயது 52). கூலித் தொழிலாளி. அவர் ஒரகடம் அடுத்த வைப்பூர் கூட்டு சாலை அருகே சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ராமலிங்கம் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிதாக ஏ.சி. சொகுசு பஸ் (எண் 55) கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.
    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பஸ் பயணம் என்பது பயணிகளுக்கு மிகவும் சவாலானதாகவே உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி படாதபாடுபட்டு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிதாக ஏ.சி. சொகுசு பஸ் (எண் 55) கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் இந்த பஸ் ஒரகடம் வழியாக செல்கிறது.
    இந்த சொகுசு பஸ் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் குறைந்த பட்சம் ரூ.30, அதிகபட்சமாக ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பஸ் இயக்கப்படுவதால் அதிக நெரிசல் இல்லாமல் பயணிகள் செல்கிறார்கள்.

    மேலும் இந்த பஸ் பெருங்களத்தூர், படப்பை, ஒரகடம், வாரணவாசி, வாலாஜாபாத் ஆகிய 5 இடங்களில் மட்டும் நின்று செல்கிறது. இதனால் பயணம் செய்யும் நேரமும் அதிக அளவு குறைந்துள்ளது.

    இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும் போது, “தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு ஒரகடம் வழியாக இயக்கப்படும் ஏ.சி. பஸ்சுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

    ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இரு மார்க்கத்திலும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 5 நிறுத்தங்களில் மட்டும் இந்த பஸ் நின்று செல்லும்” என்றார்.
    படப்பை அருகே 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் பி.டி.சி. காலனியில் நேற்று இரவு கொள்ளை கும்பல் புகுந்தது.

    அவர்கள் பூட்டி கிடந்த 4 வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோக்களில் இருந்த நகை-பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர்.

    இன்று அதிகாலை அக்கம் பக்கத்தினர் வெளியே வந்தபோதுதான் 4 வீடுகளில் கொள்ளை நடந்திருப்பது தெரிந்தது. வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருப்பதால் எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்று தெளிவாக தெரியவில்லை.

    அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன் படப்பை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 70 சவரன் நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதே போல் வரதராஜபுரம் பகுதியில் 2 வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர்.

    தொடர் கொள்ளை சம்பவத்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    செய்யூர் அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
    மதுராந்தகம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த வீராணங்குன்னத்தை சேர்ந்தவர் காளி (வயது 38). இவர் செய்யூர் தாலுகாவுக்கு உள்பட்ட செங்காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    அதே ஊரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது பூர்வீக நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அதிகாரி காளியை அணுகி மனு வழங்கினர்.

    அதற்கு காளி ரூ.9 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. முதல் தவணையாக ரூ.8 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த கோபாலகிருஷ்ணன் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவரது தலைமையிலான போலீசார் கோபாலகிருஷ்ணனிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்து கிராம நிர்வாக அதிகாரி காளியிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து கோபாலகிருஷ்ணன் அந்த பணத்தை காளியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை செய்யூர் தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றினர்.

    காளியை செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி முன்னால் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    சென்னைக்கு வந்த 31 விமான பயணிகளிடம் 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை விமானம் ஒன்று வந்தது. இதில் 184 பயணிகள் இருந்தனர். இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.

    பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 31 பயணிகள் தங்களது உள்ளாடை, கைப்பைகளில் தங்கத்தை மறைத்து வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவர்களிடம் 6½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2½ கோடியாகும். 31 பயணிகளும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

    ஒரே விமானத்தில் 31 பேர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கம் கொண்டு வந்துள்ளதால் இதன் பின்னணியில் தங்கம் கடத்தல் கும்பல் இருக்கும் என்று சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். தங்கம் கொண்டு வந்த 31 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை வந்த விமானத்தில் பெண் பயணி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    குவைத்தில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு வந்த விமானத்தில் பயணம் செய்த மொய்தீன் பீ பவாதீன் (65). என்ற பெண், தனக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊழியர்களிடம் தெரிவித்தார். உடனே இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். விமானம் தரை இறங்கியதும் மொய்தீன் பீ பவாதீனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவர் மாரடைப்பில் உயிரிழந்தது தெரிய வந்தது. பலியான அவர் சென்னையை சேர்ந்தவர்.

    கமலுக்கு ஏற்பட்ட கதிதான் ரஜினிக்கும் ஏற்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிகாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு மசோதா விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறது. இதுகுறித்து தமிழகத்தின் நலன் கருதி சில கருத்துக்களை ஜலசக்தி அமைச்சரை சந்தித்து நானும், அமைச்சர் தங்கமணியும் பேச இருக்கிறோம்.

    ஒரு மாற்று அரசியல் என்பது ரஜினிகாந்த் ஒரு வரால் மட்டும்தான் ஏற்படுத்த முடியும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். இது அவருடைய கருத்து. இதுபற்றி நாங்கள் பலமுறை கருத்துக்களை சொல்லி விட்டோம்.

    மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் திரைப் படத்தில் பெரிய நட்சத்திரங்களாகவும், அரசியல் வானில் மிகவும் பெரிய நட்சத்திரங்களாகவும் ஜொலித்தார்கள்.

     

    ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

    மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத மாபெரும் சக்தியாக இருவரும் இருந்தார்கள். ஆனால் இன்று ரஜினியும், கமலும் திரையில் நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். அரசியல் வானில் இவர்கள் ஜொலிக்காத நட்சத்திரங்கள்.

    கமல் கட்சி தொடங்கி அவருடைய சக்தி என்ன என்பதை தெரிந்து கொண்டார். அதே நிலைதான் ரஜினிக்கும் ஏற்படும்.

    ஆடிட்டர் குருமூர்த்தி சில நேரங்களில் அ.தி.மு.க.வை தொட்டு வாங்கி கட்டி கொண்டது அனைவருக்கும் தெரியும். நேற்று திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆணவத்தின் உச்சியில் பேசி இருக்கிறார்.

    பொதுக்குழுவில் அமைச்சர் தங்கமணி 2021 பொதுத் தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காலடியில் வைப்போம் என்று கூறியிருக்கிறாரே? அப்படியானால் அவர் தான் முதல்-அமைச்சர் வேட்பாளரா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பொதுக் குழுவில் பேசியது கட்சிக்குள் நடந்த வி‌ஷயம். வீணான குழப்பத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

    காஞ்சிபுரம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் கடந்த மாதம் பட்டப்பகலில் காஞ்சிபுரம் வணிகள் வீதியில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக மேல்சிறுணை கிராமத்தை சேர்ந்த டேவிட், தாமல் கிராமத்தைச் சேர்ந்த துளசிராமன், சங்கரா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஜய், வெங்கட்ராயன் பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான துளசி ராமன் உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

    இதனையடுத்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து துளசி ராமன் உள்பட 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
    கல்பாக்கம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அருகே காரைத்திட்டு பகுதியில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சதுரங்கபட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது பாக்கியராஜ் சாராயம் விற்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்போரூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த மடையத்தூர் கிராமத்தைச்சேர்ந்தவர் ஏழுமலை.

    இவர் கண்ணகப்பட்டு பகுதியில் உள்ள அரசு மதுக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு 10 மணிக்கு ஏழுமலை கடையை பூட்டி விட்டு வசூலான பணம் ரூ. 2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    மடையத்தூர் ஏரி அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் தடுத்து நிறுத்தினர். இதில் நிலை தடுமாறி ஏழுமலை கீழே விழுந்தார். மர்ம நபர்கள் 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி ஏழுமலை வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.

    பொன்னேரியை அடுத்த கொக்குமேடு பகுதியை சேர்ந்தவர் கமலா. இவர் அருகில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    இது போல் அருகில் உள்ள குரும்பத்தூரில் புஷ்பா என்பவருடைய வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்த 2 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

    பொன்னேரியை அடுத்த தசரத நகரை சேர்ந்தவர் காளமேகம் வக்கீல். நள்ளிரவு இவருடைய வீட்டின் பூட்டை யாரோ உடைக்கும் சத்தம் கேட்டது. உடனே அவர் வெளியே வந்தார். அதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபோல், பரமேஸ்வரன் என்ற வக்கீல் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்தது. சத்தம் கேட்டு அங்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.

    படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    படப்பை:

    படப்பை அடுத்த நடுவீரப்பட்டு குறிஞ்சி தெரு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (26).

    இவர் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    வரதராஜபுரம் ராயப்பன் நகர் அருகே 400அடி பைபாஸ் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது தாம்பரம் நோக்கி சென்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ் நிலை தடுமாறி விழுந்தார். லாரியின் சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    ஆலந்தூர்:

    ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் சக்தி முருகன். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஹிருத்திக் என்ற 6 மாத குழந்தை இருந்தது. இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகே உள்ள வேங்கைவாசல் ஆகும்.

    இந்த நிலையில் சக்தி முருகன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு விமானத்தில் வந்தார். அப்போது சக்திமுருகனின் தாயும் உடன் வந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோது குழந்தை ஹிருத்திக் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு தீபா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அங்குள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    டாக்டர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை ஹிருத்திக் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. குழந்தை இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    விமானத்தில் ஏறிய போது குழந்தை ஹிருத்திக் நலமாக இருந்ததாக தீபா தெரிவித்துள்ளார். இது குறித்து விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×