என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.18½ லட்சம் மதிப்புள்ள 370 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது ரபி (வயது 23) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் உடைமைகளை வைத்து தள்ளியபடி வந்த டிராலியில் கைப்பைக்கு அடியில் மர்ம பொட்டலத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டனர்.

    அதை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையைச்சேர்ந்த அப்துல் கரீம் (35) என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 170 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 370 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் மேலும் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் 4 கால்களும் மூழ்கிய நிலையில் முழுமையாக நிரம்பியது.
    108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் மற்றும் பொற்றாமரைக் குளம் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தில் பெருமாள் நின்ற மற்றும் சயன கோலத்தில் காட்சியளித்தார். உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்த 48 நாட்கள் நடைபெற்ற வைபவம் முடிவடைந்து, மீண்டும் பத்திரமாக அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில், தற்போது காஞ்சீபுரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் 4 கால்களும் மூழ்கிய நிலையில் முழுமையாக நிரம்பியது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழைக்கு பின் தற்போது தான் இந்த குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    தொடர் மழையால் இந்த குளம் நிரம்பி வெளியேறும் நீர் கிழக்கு ராஜகோபுரம் அருகில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு செல்லும். இதன் காரணமாக தற்போது இந்த குளமும் நிரம்பி உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதை கண்டு மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
    துபாயில் இருந்த சென்னை வந்த சிறப்பு விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.59 லட்சம் ம திப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    பயணிகள் அனைவரும் இறங்கி சென்றபிறகு அந்த விமானத்துக்குள் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு இருக்கையின் அடியில் 2 பொட்டலங்கள் கேட்பாரற்று கிடந்தது. அதை பிரித்து பார்த்தபோது தங்கத்தூள்கள் இருந்தன.

    ரூ.59 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னைக்கு அந்த தங்கத்தை கடத்தி வந்தவர்கள், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து அதை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.

    அந்த தங்கத்தை கடத்தி வந்தது யார்?. இருக்கைக்கு அடியில் அதை வைத்துவிட்டு பின்னர் ஊழியர்கள் உதவியுடன் அதை வெளியே கொண்டுவர திட்டமிடப்பட்டதா? என்ற கோணத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    காஞ்சிபுரம்:

    நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் பல்வேறு அமைச்சர்களை நியமனம் செய்து உத்தரவிட்டார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். வடமங்கலம், உள்ளிட்ட இடங்களில், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மற்றும் வாழை மரத்தோப்புகளை அவர் பார்வையிட்டார். மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அவர், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகளை அரசு திறக்கும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் வந்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஜோதி சின்னராஜ் (வயது 38) என்ற பெண், ஒருவித பதற்றத்துடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார். சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர் அணிந்து இருந்த மேல் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    பெருங்களத்தூரில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி மறியல் போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தாம்பரம்:

    வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி கடந்த 1-ந்தேதி சென்னை தீவுத்திடல் மன்றோ சிலை அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் சென்னை வந்தனர். அவர்களுடைய வாகனங்களை பல்வேறு இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    இதை கண்டித்து பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், பெருங்களத்தூரில் பா.ம.க.வினர் திடீர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் தடுப்பு தகடுகளையும், கம்பிகளையும் போட்டனர்.

    சிலர் ரெயில் மீது கற்களை வீசினார்கள். இதையடுத்து அந்த வழியாக வந்த ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 300 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவிலை சேர்ந்த முத்துசாமி (45), முனுசாமி (30), பழனிசாமி (36), சித்தோட்டை சேர்ந்த தமிழ்செல்வன், நந்தகுமார் (20) ஆகிய 5 பா.ம.க.வினரை போலீசார் ஈரோட்டில் கைது செய்தனர். இவர்கள் மீது அனுமதி இல்லாமல் கூடுதல், ரெயில்வே தண்டவாளத்தை கடப்பது, ரெயில் மறியலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் இருந்து சந்தேகப்படும்படியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அனஸ் (வயது 27), சென்னையை சேர்ந்த ஜும்மாகான் (47), முகமது ரபி (46) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அதில் 2 பேரின் முதுகிலும் சற்று வீங்கி இருந்தது. அது என்ன? என்று கேட்டதற்கு முதுகில் சுளுக்கு பிடித்து இருப்பதாகவும், அதற்காக பேண்டேஜ் வைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், பேண்டேஜை பிரித்து பார்த்தனர்.

    அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மற்றொருவர் பேண்ட்டில் மறைத்து கடத்தியதும் தெரிந்தது. 3 பேரிடம் இருந்தும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    பெரும்பாக்கத்தில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் பாரதி (வயது 24). இவர், காதல் தோல்வியால் 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    பாரதியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவருக்கு செல்போன் செயலி ஒன்றில் பாடல் பாடுவதில் விருதுநகரைச் சேர்ந்த முத்துகுமரேசன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

    நாக்பூரில் ராணுவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வரும் முத்துகுமரேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

    இதையறிந்த பாரதி அதிர்ச்சி அடைந்தார். கடந்த 2-ந் தேதி பாரதியுடன் முத்துகுமரேசன் வீடியோ கால் மூலம் பேசியபோது இது தொடர்பாக 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாரதி, தான் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.

    உடனே முத்துகுமரேசன், அதற்கு பதிலாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள் என கூறியதாக தெரிகிறது. இதனால் வீடியோ காலில் முத்துகுமரேசன் முன்னிலையிலேயே பாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ வீரர் முத்துகுமரேசனை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இர்பான் (வயது 36), லியாகத் அலி (36), சையத் அபுதாகிர் (21), திருச்சியை சேர்ந்த முகமது இர்திஷ் (25), சென்னையை சேர்ந்த அபூபக்கர் சித்தீக் (21) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அனைவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.82 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த சென்னையை சேர்ந்த ஜாகீர் உசேன் (40) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் யூரோ கரன்சிகள் மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள யூரோ கரன்சிகளை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் யூரோ கரன்சிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 6 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்றபோது மாயமான 3 சிறுமிகள் பிணமாக மீட்கப்பட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் தும்பவனம், வெள்ளை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவரது அக்காள் மகள் பூரணி (17). இவரது தோழிகள் அதே பகுதியை சேர்ந்த சகோதரிகளான ஜெயஸ்ரீ (15), சுபஸ்ரீ (14) மற்றும் மீனாட்சி (9). இவர்கள் 5 பேரும் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில் குளிக்க சென்றனர்.

    குளித்து முடித்தபிறகு தாமோதரன் மீனாட்சியை அழைத்து கொண்டு பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். பூரணி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ 3 பேரும் தண்ணீர் வழியாகவே பாலாற்றை நடந்து கடக்க முயன்றனர். தாமோதரன் திரும்பி பார்த்தபோது பூரணி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்கள்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர் குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று மாயமான 3 சிறுமிகளை தேடினர்.

    இந்த நிலையில் மாயமான பூரணி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ ஆகியோரின் உடல்கள் நேற்று அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த சிறுமிகளின் உடலை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த சென்னையை சேர்ந்த சையத் அபுதாகீர் (வயது 37), ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் காதர் (54) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

    பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 706 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன், அவருக்கு உதவிய தயாளன் இருவரையும் மின்சாரம் தாக்கியது.

    மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர், அவருக்கு உதவியவர் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×