என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஆதம்பாக்கம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மதன்குமார் (வயது 23). கடந்த சில தினங்களுக்கு முன்பு மதன்குமாரிடம் ரூ.48 ஆயிரம் பணத்தை அவரது பெற்றோர் கொடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பணத்துடன் என்.ஜி.ஓ காலனி பகுதியில் சென்ற போது, சிலர் வழிமறித்து பறித்து சென்றதாக மதன்குமார் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடமாக கூறப்படும் இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என தெரியவந்தது. பணத்தை தவறவிட்டதால் மதன்குமாரை பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் மது அருந்திய நிலையில், வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மாநகராட்சி பெண் ஊழியரான தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த சின்ன நீலாங்கரை மேட்டு காலனி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஹரி (வயது 36), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கோமதி (35). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கோமதி, சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். ஹரிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஹரி, தனது மனைவி கோமதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    கோமதி நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது ஹரி மீண்டும் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஹரி, வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    இதில் படுகாயம் அடைந்த கோமதி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அதே கத்தியுடன் ஹரி, நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கோமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு போலீசில் கணவர் சரண் அடைந்ததால் அவர்களது 2 பிள்ளைகளும் தாய்-தந்தை இன்றி பரிதவித்த காட்சி அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத்தின்பேரில் சென்னையை சேர்ந்த முகமது ஜலாலுல்லா (வயது 46), திருச்சியை சேர்ந்த அப்துல் சலீம் (61), ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த காதர் மீரான் (45) ஆகிய 3 பேரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, அட்டை பெட்டியில் ரகசிய அறைகள் அமைத்து பிளாஸ்டிக் சீட்டில் தங்க தகடுகள், கைப்பையில் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    மேலும் இவர்களது உடைமைகளில் சிகரெட்டுகள், டிரோன் ஆகியவற்றை கடத்தி வந்ததும் தெரிந்தது. 3 பேரிடம் இருந்தும் ரூ.34 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள 667 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள், டிரோன் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
    நடிகை சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் ஊர் அறிய திருமணம் நடைபெற இருந்த நிலையில் அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சித்ரா மீது சந்தேகம் அடைந்த ஹேம்நாத் அவரை துன்புறுத்தி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகே ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் இருக்கும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.

    அதில், பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதன்படி இன்று காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை சிறைத்துறை காவலர்கள் அழைத்து வந்தனர்.

    சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் முறையாக பதில் அளித்துள்ளார். பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின்போது ஹேம்நாத் அளித்த தகவல்களை வாக்குமூலமாக ஆர்.டி.ஓ. பதிவு செய்துள்ளார். மதியம் 12 மணிக்கு பிறகும் விசாரணை நீடித்தது.

    முழு விசாரணை முடிந்த பிறகு தான் ஆர்.டி.ஓ. விசாரணையில் ஹேம்நாத் என்ன சொல்லி இருக்கிறார்? என்பது தெரியவரும்.

    சித்ராவிடம் நெருங்கி பழகிய நடிகைகளிடமும் அவருடன் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள நடிகர்களிடமும் நாளை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.

    சித்ரா மற்றும் ஹேம்நாத் பெற்றோரிடம் ஏற்கனவே ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது வர்கீஸ் (வயது 25), முகமது யாசிர் கான் (23), திருச்சியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (34), பிலால் (33), புதுக்கோட்டையை சேர்ந்த மதன்குமார் (24), மதுரையை சேர்ந்த சையத் முகமது (30), ராமநாதபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (32), பசில் ரகுமான் (27), முகமது ரபீக் (21) ஆகிய 9 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் கைக்கடிகாரம், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து, கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் இவர்கள் ஐபோன், செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், உடற்பயிற்சிக்கான சத்து உணவு பொருட்களையும் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 9 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கம், ரூ.19 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், சிகரெட்டுகள், உடற்பயிற்சிக்கான சத்து உணவு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற சிறப்பு விமானத்தில் செல்ல வந்த சிவகங்கையை சேர்ந்த ரசூலுதீன் (29) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் கைப்பையில் உள்ள ரகசிய அறைக்குள் இங்கிலாந்து பவுண்டு, சிங்கப்பூர் டாலர்களை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் 10 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், உடற்பயிற்சிக்கான சத்துணவு பொருட்கள், சிகரெட்டுகள் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 10 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது 24). இவருடைய மனைவி கற்பகம் (22). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கணவன்-மனைவி இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை சண்முகா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அலெக்ஸ் பாண்டியன் படப்பையில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கற்பகம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது இறந்த கற்பகத்திற்கும் கணவர் அலெக்ஸ் பண்டியனுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. 

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.
    காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சாந்தகுமார் இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28), இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மனமுடைந்த புவனேஸ்வரி விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கு இருந்தவர்கள் உடனடியாக மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உயிரிழந்த புவனேஸ்வரியின் தந்தை பன்னீர்செல்வம் பாலுசெட்டிசத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேம்நாத்தே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜனவரி மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் சித்ராவும், நானும் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் கூறியிருந்தார்.

    இதையடுத்து சித்ராவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகி இருப்பதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.

    சித்ராவின் தாய்-தந்தையிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாகவே ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது. ஹேம்நாத்தின் தாய்-தந்தை இருவரிடமும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், சித்ராவிடம் நாங்கள் வரதட்சணை எதையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விசாரணைக்காக ஹேம்நாத்தை நேரில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிக்கு பொன்னேரி ஆர்.டி.ஓ. கடிதம் அனுப்பியுள்ளார். இதனை ஏற்று சிறைத்துறை அதிகாரிகள் நாளை ஹேம்நாத்தை, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்த உள்ளனர்.

    இந்த விசாரணையின் போது சித்ரா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டது தெரிய வந்தால் அது தொடர்பான வழக்கிலும் ஹேம்நாத் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

    இதற்கிடையே சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.

    ஹேம்நாத்திடம் நாளை காலை விசாரணை நடத்தப்பட்ட பிறகு சித்ராவின் நெருங்கிய தோழிகளாக இருந்த நடிகைகளிடமும் அவருடன் நடித்த சக நடிகர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது.

    இந்த விசாரணை முடிவடைந்த பிறகு இது தொடர்பான அறிக்கையை ஆர்.டி.ஓ. தாக்கல் செய்ய உள்ளார். அப்போது சித்ரா தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது தெரிய வரும்.
    கிண்டி நகை பட்டறையில் இருந்து 106 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 78 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தங்க சங்கிலி தயாரிக்கும் நகை பட்டறை உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். தீபாவளிக்கு ஆர்டர்கள் அதிகமாக இருந்ததால் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து நகை தயாரிக்கும் ஊழியர்களை விமானத்தில் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கடந்த மாதம் 10-ந்தேதி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 4 ஊழியர்கள், நகை பட்டறையில் இருந்து 106 பவுன் தங்க சங்கிலிகளை திருடிக்கொண்டு நகை பட்டறையின் சிமெண்டு ஓட்டை உடைத்து தப்பிச்சென்று விட்டனர்.

    இதுபற்றி தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் பாபு உத்தரவின்பேரில் அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் சுப்பராயன் ஆகியோர் மேற்பார்வையில் கிண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஏட்டுகள் அச்சுதராஜ், தாமோதரன், ஐசக், சதீஷ், ஜானி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் நகைகளை திருடியவர்கள் ரெயிலில் கேரள மாநிலம் திருச்சூருக்கு தப்பிச்சென்றதும், கேரளாவில் ஒரு பவுன் நகையை அடமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தில் அங்கிருந்து மேற்கு வங்காளத்துக்கு விமானத்தில் தப்பி சென்றதும் தெரியவந்தது.

    பின்னர் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் மேற்கு வங்காளத்துக்கு சென்று வர்தமான் மாவட்ட போலீசார் உதவியுடன் சராபிந்து (வயது 24) என்பவரை கைது செய்தனர். மேலும் நகைகளுடன் தப்பிச்சென்ற பசிருல் ஷேக் (24) என்பவரை மேற்கு வங்காள மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் மடக்கி பிடித்தனர். வீட்டின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த 46 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் பதுங்கி இருந்த பர்சான் மது மண்டல் (26) என்பவரையும் கைது செய்தனர். இவரிடம் இருந்து 32 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரிடம் இருந்து 78 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் இந்த கொள்ளையில் தொடர்பு கொண்ட ரிடியோ கர்மகர் (26) என்பவரை தேடி வருகின்றனர்.

    நகைகளை திருடிவிட்டு 3 மாநிலங்களில் இருந்த கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன் ஆகியோர் பாராட்டினார்கள்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்கர் அலி (வயது 44), சரீம் பவுலத் (20), ஷேக் அப்துல்லா (43), நதீம் கான் (30), காதர் உசேன் (47), முகமது இப்ரகீம் (44), மணிகண்டன் சுப்பிரமணி (26), சமீருல் கான் (29), அஸ்ரத் பர்வேஸ் (21), திருச்சியை சேர்ந்த யாகூப் (67), அலி (28), புதுக்கோட்டையை சேர்ந்த உசேன் (26), இளையான்குடியை சேர்ந்த முகமது அனிபா (27), தமீம் அன்சாரி (23), ஆம்பூரை சேர்ந்த முகமது பாரூக் (22) ஆகிய 15 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அட்டை பெட்டி, செல்போன், கைப்பைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 15 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சவுகத் அலி (28) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவரது கைப்பையில் ரகசிய அறைகள் வைத்து அதில் சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் 16 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 16 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 470 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த கலில் ரகுமான் (வயது 49) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 160 கிராம் எடைகொண்ட தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    பின்னர் பயணிகள் இறங்கி சென்றதும் அந்த விமானத்தில் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது ஒரு இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 310 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதை துபாயில் இருந்து கடத்தி வந்த நபர், சுங்க இலாகா அதிகாரிகளின் கெடுபிடிக்கு பயந்து மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 470 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர். 224 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 730 பேர் உயிரிழந்துள்ளனர். 504 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 72 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 445 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 664 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
    ×