search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    106 பவுன் தங்க சங்கிலிகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது

    கிண்டி நகை பட்டறையில் இருந்து 106 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 78 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தங்க சங்கிலி தயாரிக்கும் நகை பட்டறை உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். தீபாவளிக்கு ஆர்டர்கள் அதிகமாக இருந்ததால் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து நகை தயாரிக்கும் ஊழியர்களை விமானத்தில் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கடந்த மாதம் 10-ந்தேதி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 4 ஊழியர்கள், நகை பட்டறையில் இருந்து 106 பவுன் தங்க சங்கிலிகளை திருடிக்கொண்டு நகை பட்டறையின் சிமெண்டு ஓட்டை உடைத்து தப்பிச்சென்று விட்டனர்.

    இதுபற்றி தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் பாபு உத்தரவின்பேரில் அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் சுப்பராயன் ஆகியோர் மேற்பார்வையில் கிண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஏட்டுகள் அச்சுதராஜ், தாமோதரன், ஐசக், சதீஷ், ஜானி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் நகைகளை திருடியவர்கள் ரெயிலில் கேரள மாநிலம் திருச்சூருக்கு தப்பிச்சென்றதும், கேரளாவில் ஒரு பவுன் நகையை அடமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தில் அங்கிருந்து மேற்கு வங்காளத்துக்கு விமானத்தில் தப்பி சென்றதும் தெரியவந்தது.

    பின்னர் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் மேற்கு வங்காளத்துக்கு சென்று வர்தமான் மாவட்ட போலீசார் உதவியுடன் சராபிந்து (வயது 24) என்பவரை கைது செய்தனர். மேலும் நகைகளுடன் தப்பிச்சென்ற பசிருல் ஷேக் (24) என்பவரை மேற்கு வங்காள மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் மடக்கி பிடித்தனர். வீட்டின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த 46 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் பதுங்கி இருந்த பர்சான் மது மண்டல் (26) என்பவரையும் கைது செய்தனர். இவரிடம் இருந்து 32 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரிடம் இருந்து 78 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் இந்த கொள்ளையில் தொடர்பு கொண்ட ரிடியோ கர்மகர் (26) என்பவரை தேடி வருகின்றனர்.

    நகைகளை திருடிவிட்டு 3 மாநிலங்களில் இருந்த கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன் ஆகியோர் பாராட்டினார்கள்.
    Next Story
    ×