search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெருங்களத்தூரில் மறியல்: ரெயில் மீது கல்வீசிய பா.ம.க.வினர் 5 பேர் கைது

    பெருங்களத்தூரில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி மறியல் போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தாம்பரம்:

    வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி கடந்த 1-ந்தேதி சென்னை தீவுத்திடல் மன்றோ சிலை அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் சென்னை வந்தனர். அவர்களுடைய வாகனங்களை பல்வேறு இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    இதை கண்டித்து பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், பெருங்களத்தூரில் பா.ம.க.வினர் திடீர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் தடுப்பு தகடுகளையும், கம்பிகளையும் போட்டனர்.

    சிலர் ரெயில் மீது கற்களை வீசினார்கள். இதையடுத்து அந்த வழியாக வந்த ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 300 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவிலை சேர்ந்த முத்துசாமி (45), முனுசாமி (30), பழனிசாமி (36), சித்தோட்டை சேர்ந்த தமிழ்செல்வன், நந்தகுமார் (20) ஆகிய 5 பா.ம.க.வினரை போலீசார் ஈரோட்டில் கைது செய்தனர். இவர்கள் மீது அனுமதி இல்லாமல் கூடுதல், ரெயில்வே தண்டவாளத்தை கடப்பது, ரெயில் மறியலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×