என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் நேரம் ரேஷன் கடைகள் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன்கடைகளை திறந்து, ரேஷன்கடைதாரர்களுக்கு பொது வினியோக திட்ட மற்றும் சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களை வினியோகம் செய்திடுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அரசின் அறிவுரைகளின்படி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளை திறந்து, ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ஏற்பாடு, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு வழங்கப்படும். தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காதவர்களுக்கு, 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை ரேஷன் கடைகளின் விடுமுறை தினங்கள் முடிந்த பின்னர் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் பொருட்களை பெற்றுகொள்ளலாம்.

    பொருட்களை பெற வரும் ரேஷன்கார்டுதாரர்கள் முக கவசம் அணிந்து வரவும், ஒரு மீட்டர் சமூக இடைவெளியில் தனிமைப்படுத்தி கொண்டு பொருட்களை பெற்று செல்ல வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வாலாஜாபாத் அருகே போலீசாரின் சோதனையில் 50 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட வல்லப்பாக்கம், இந்திராநகர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடும்ப அட்டைக்கு நியாயவிலை கடைகளில் இலவசமாக வாங்கி வைத்துள்ள ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி, கடத்துவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் அடிப்படையில் வாலாஜாபாத் போலீசார் காஞ்சீபுரம் ஓரகடம் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

    போலீசாரின் சோதனையில் 50 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினி லாரியில் வந்த காஞ்சீபுரம் தாலுகா, கீழம்பி, பச்சையம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த லியோ சந்துரு (வயது 24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் (17) ஆகிய 2 வாலிபர்களையும் வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி மற்றும் அதை ஏற்றி வந்த மினி லாரியையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    குன்றத்தூர் அருகே பழுதான வாகனத்தை சரி செய்தபோது பஸ் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    மதுரவாயல் ஜானகி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). வேன் டிரைவர். நேற்று முன்தினம் நள்ளிரவு தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் நோக்கி வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வேனை ஓட்டிச்சென்றார். குன்றத்தூர் அடுத்த வடக்கு மலையம்பாக்கம் அருகே சென்றபோது வேன் திடீரென பழுதடைந்தது.

    இதையடுத்து அந்த வேனை சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் நின்று கொண்டிருந்த வேன் மீது மோதியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். வேனின் பின் பகுதி பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் பிலவேந்திரன் (40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பை அருகே வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி ஊராட்சியில் உள்ள நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 19). நேற்று இவர் அதே பகுதியில் நண்பர்களுடன் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது தகராறு ஏற்பட்டது. தகராறில் 2 பேர் அரிவாளால் அஜித்தின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி்ச் சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அஜித் அலறி கூச்சலிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்தகாயத்துடன் கிடந்த அஜித்தை மீட்டு சிகி்ச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் அஜித்தை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது 73). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது இளைய மகன் சேகர் வீட்டில் தங்கி இருந்தார். அதே பகுதியில் தங்கி இருந்த தனது மூத்த மகன் வீட்டுக்கு நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அலமேலு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் மோட்டர்சைக்கிளில் அலமேலு அருகில் வந்து ஏன் மாஸ்க் அணியவில்லை?. போலீசார் பார்த்தால் வழக்கு போடுவார்கள் என்று கூறி ஒரு மாஸ்க்கை கொடுத்தனர்.

    மேலும் தங்க நகை அணிந்து கொண்டு அலட்சியமாக சென்றால் யாராவது பறித்துச்சென்று விடுவார்கள். ஆகவே கழற்றி பேப்பரில் வைத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

    மர்மநபர்கள் அலமேலு அணிந்திருந்த 9 பவுன் நகையை பேப்பரில் மடித்து தருவதை போல் நடித்து கல்லை பேப்பரில் மடித்து கொடுத்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். அலமேலு தன்னுடைய மகன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது பேப்பரில் வெறும் கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரது மகன் சேகர் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    குன்றத்தூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் மின்கசிவு காரணமாக ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததா? அல்லது நாச வேலை காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் சாந்தி நகரை சேர்ந்தவர் அமலநாதன் (வயது 49), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் இவரது ஆட்டோ எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அமலநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கேட்டு அமலநாதன் வருவதற்குள் ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து சேதமாகி விட்டது.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் மின்கசிவு காரணமாக ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததா? அல்லது நாச வேலை காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று 22-ந் தேதி நடைபெற்றது. இதில் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 2 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், 2 மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

    இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு 1 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி கிடைத்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் தேர்தல் பதவிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த நித்யா போட்டியின்றி வெற்றி பெற்றார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த டி.செம்பருத்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.காயத்ரி போட்டியின்றி வெற்றி பெற்றார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மலர்கொடி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த திவ்ய பிரியா வெற்றி பெற்றார்.

    உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஹேமலதா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வசந்தி வெற்றி பெற்றார்.

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மாலதி வெற்றி பெற்றார்.

    குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சரஸ்வதி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த உமாமகேஸ்வரி வெற்றி பெற்றார்.

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கே.கண்ணன் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கே.விஜயலட்சுமி வெற்றி பெற்றார்.

    சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வி.ஏழுமலை வெற்றி பெற்றார்.

    காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த உதயா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வி.எஸ்.ஆராமுதன் வெற்றி பெற்றார்.

    மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கே.கீதா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ.குமரவேல் வெற்றி பெற்றார்.

    பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.சங்கீதா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பி.பிரசாத் வெற்றி பெற்றார்.

    திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க. வை சேர்ந்த ஆர்.டி.அரசு வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஏ.பச்சையப்பன் வெற்றி பெற்றார்.

    திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எல்.இதயவர்மன் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.சத்யா வெற்றி பெற்றார்.

    வரதராஜபுரம், எழிச்சூர் ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குன்றத்தூர் ஒன்றியம் போன்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று சிக்கராயபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 12-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வரதராஜபுரம் ஊராட்சியில் இருந்து பதிவான வாக்கு சீட்டு பெட்டிகள் வாக்குச்சாவடியில் இருந்து வேனில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வரதராஜபுரம்- தாம்பரம் சாலையில் வாகனம் நிறுத்தப்பட்டு முறைகேடு நடந்ததாக கூறி வரதராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கோதண்டராமன் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி நேற்று வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வரதராஜபுரம் பகுதியில் அ.தி.மு.க. வினர் மற்றும் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கோதண்டராமன், அ.தி.மு.க‌. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுந்தர்ராஜன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மறியலில் ஈடுபட்டவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதே போல் வாக்குச்சாவடியில் இருந்து வாக்குப்பெட்டிகளை ஏற்றிச்செல்லும் வாகனத்தை சாலைஓரம் நிறுத்தி வேனின் கதவு திறக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாகவும். வரதராஜபுரம் ஊராட்சிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோஷமிட்டு தமிழக அரசை கண்டித்தும் தேர்தல் அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து 200- க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நடந்தது. அதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடத்தப்பட்டதாகவும் இதற்கு தீர்வுகாண மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் எனவும் தேர்தல் அலுவலர் நேரில் வரவேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தேர்தல் அலுவலர் சீனிவாசன் மறியல் நடைபெற்ற பகுதிக்கு வந்தார். அப்போது மறியலில ஈடுபட்டவர்கள் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் தெரிவித்து புகார் மனுவை தேர்தல் அலுவலரிடம் கொடுத்தனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தெரிவிப்பதாக கூறினார்.

    எழிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட செல்வி தேவேந்திரன் தேர்தல் அதிகாரிகளிடம் அளித்த புகாரில், தான் 67 வாக்குகள் அதிகமாக பெற்ற போதிலும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்த பிறகும் அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை என்று கூறி நேற்று வண்டலூர்- வாலாஜாபாத் சாலை பகுதியில் கண்டிகை அருகே செல்வி தேவேந்திரன் மற்றும் அ.தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு தேர்தல் அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்கவில்லை. எனவே எழிச்சூர் ஊராட்சிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தேர்தல் அலுவலர் சீனிவாசனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மறியல் நடைபெற்ற பகுதிக்கு வந்த தேர்தல் அலுவலரிடம், வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்கவில்லை. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு புகார் மனு அளித்தனர். அதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வாலாஜாபாத் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்யும் போது உள்ள குறைகள் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.
    வாலாஜாபாத்:

    காஞ்சீபுரம் மாவட்ட தனியார் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் தமிழ்நாடு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு துறை செயலாளர் நசிமுதீன் ஆலோசனை நடத்தினார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார்.

    அப்போது, அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்யும் போது உள்ள குறைகள் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தரமான அரிசியை உற்பத்தி செய்துதர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் வாலாஜாபாத் அருகே உள்ள நெய்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கலெக்டர் மா.ஆர்த்தி, கூட்டுறவுத்துறை அரசு துறை செயலாளர் நசிமுதீன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிர்வாக இயக்குனர் ராஜாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ஆதம்பாக்கத்தில் காதலி வீட்டில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 32) பிரபல ரவுடி. காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி தென் சென்னை மாவட்ட துணைத்தலைவராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் 3-வது தெருவில் உள்ள காதலி ஒருவரது வீட்டுக்கு நாகூர் மீரான் வந்தார். பின்னர் அவர் காதலியுடன் தனியாக அறையில் இருந்தார்.

    இதனை அறிந்த எதிர் தரப்பை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பல் 10-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து காதலியுடன் இருந்த நாகூர் மீரானை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர்.

    இதில் கழுத்து, தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த நாகூர் மீரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட காதலி அலறியடித்து வெளியே ஓடினார்.

    இதைத் தொடர்ந்து கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பலியான நாகூர் மீரானின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராபின், பிரபாகரன், விமல்ராஜ், இருளா காத்திக், காணிக்கை ராஜ் ஆகிய 5 பேர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

    அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2013-ம் ஆண்டு சுங்க அதிகாரியை கொலை செய்த வழக்கு நாகூர் மீரான் மீது உள்ளது. இதன் பின்னர் அவர் ரவுடியாக வலம் வந்துள்ளார். ஆதம்பாகக்கத்தில் 2 கொலை வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இதேபோல் பரங்கிமலை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கிடையே ஏரியாவில் யார் பெரிய ரவுடி? என்ற போட்டியால் அவருக்கும் எதிர் தரப்பை சேர்ந்த ரவுடி ராபினுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

    எதிர் தரப்பினர் கொலை செய்ய திட்டமிடுவதை அறிந்த நாகூர் மீரான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலம்பாக்கம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் குடியேறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் காதலி வீட்டுக்கு நாகூர் மீரான் வந்திருப்பதை அறிந்த எதிர் தரப்பினர் தீர்த்துக்கட்டி விட்டனர். இந்த கொலை தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் படுகொலை சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி விட்டது. இதில் டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு ஊழியருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம்

    இந்த நிலையில், காஞ்சீபுரத்தில் கொள்ளையர்கள் தாக்குதலால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் துளசிதாஸ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதேபோன்று அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்து உள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 14 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், சித்தாமூர், லத்தூர், திருக்கழுக்குன்றம், பரங்கிமலை, திருப்போரூர், அச்சரப்பாக்கம் ஆகிய 8 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 269 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1,793 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,171 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர்கள், 154 ஒன்றிய கவுன்சிலர்கள், 348 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 2,495 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,013 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 இடங்களிலும் நேற்று காலை முதல் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 14 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 9 இடங்களை கைப்பற்றியுள்ளது. ம.தி.மு.க. ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 23 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 98 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 78 இடங்களை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 14 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் 15 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 9 இடங்களை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

    அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 12 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ஜனதா 1 இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.

    சித்தாமூர் ஒன்றியத்தில் 16 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 இடங்களை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.

    திருப்போரூர் ஒன்றியத்தில் 22 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதுவரை 10 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தி.மு.க. 4 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. பா.ம.க. ஒரு இடத்தையும், சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 24 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 18 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும், வெற்றிபெற்றுள்ளன. ஒரு இடத்தை பா.ம.க. கைப்பற்றியுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 16 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 8 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அ.தி.மு.க. 5 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேட்சை 2 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.

    குன்றத்தூர் ஒன்றியத்தில் 21 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 18 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது.

    காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 14 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதி.மு.க. 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.

    உத்திரமேரூர் ஒன்றியத்தில் 22 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 3 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.

    வாலாஜாபாத் ஒன்றியத்தில் 21 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் தி.மு.க. 15 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், காங்கிரஸ், பா.ஜனதா தலா ஒரு இடத்திலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    ×