என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காரப்பேட்டை அருகே லாரி மோதி 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நாகலுத்து மேடு பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி சங்கீதா (வயது 26). இவர் தனது தோழி நீலவேணி(33) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    காஞ்சிபுரம் காரப்பேட்டை அருகே சங்கீதாவும், நீலவேணியும் கடக்க முற்பட்ட போது காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற காய்கறி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரியை கைபற்றி தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து பிரதமர் மோடி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற போவதாக அறிவித்தார் ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     

    பிரதமர் மோடி

    இந்த நிலையில் நாளை மறுநாள் (29-ந் தேதி) பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதன் முதல் நாளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... ஜெயலலிதா வீட்டு சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்- கலெக்டரிடம் தீபா, தீபக் மனு

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மாநிலத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் முதல் தவணை தடுப்பூசியில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு அதாவது 45 சதவீத இலக்கையே எட்டியுள்ளது.

    இதுவரை 1,32,928 பேர் 2-வது தவணை கெரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். எனவே இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சென்று முதல் மற்றும் நிலுவையில் உள்ள 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி ஒத்துழைப்பு நல்குங்கள். காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று 370 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தட்சிணாமூர்த்திக்கும், ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த தினகரன் மகள் அபிதா (வயது 23) என்பவருக்கும் கடந்த 26.10.2020 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தட்சிணாமூர்த்தியும், அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு அபிதாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து அபிதாவின் தாயார் சம்பூர்ணம்(55) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தட்சிணாமூர்த்தி, இவரது தந்தை ஆறுமுகம், தாய் மல்லிகா, தம்பி முருகன், அக்காள்கள் முத்துலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அபிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ஆனால் நேற்று காலை வரையில் அபிதாவின் தற்கொலை காரணமாக யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் செஞ்சி கூட்டுச்சாலையில் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் ஆகியோர் அபிதாவின் கணவர் வீட்டுக்கு சென்று தட்சிணாமூர்த்தி(27), இவரது தந்தை ஆறுமுகம்(60), தாய் மல்லிகா(52), தம்பி முருகன்(25) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாடினார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், காணொலி காட்சி வகுப்பறைகள், கணினி வகுப்பறை உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் மாணவர்களோடு தரையில் அமர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் படிப்பதை ரசித்து பார்த்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவரிடம் பள்ளியை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதையடுத்து உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலை பள்ளியில் குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.

    அப்போது மாணவ-மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

    இந்த நிகழ்ச்சிகளில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைத்தலைவர் வசந்தி குமார், மாவட்ட குழு உறுப்பினர் பத்மா பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர் ருத்ர கோட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்க முதல் மந்திரியும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.  திங்கள் கிழமை  முதல் டெல்லியில் தங்கியுள்ள மம்தா பானர்ஜி  பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்தார். 

    பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு  எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

    அதேபோல், திரிபுராவில் மேற்கு வங்க மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி ஆலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது. டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மம்தா பானர்ஜி நாளை மேற்கு வங்காளம் திரும்புகிறார். 
    வயதானோர் மற்றும் மதுபோதையில் இருப்பர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி ஆபத்தான முறையில் வந்து மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள கனகம்மாசத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வெளிவரும் மழைநீர் மற்றும் ஏரிகளின் உபரிநீர் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக செல்லும் ஓடை வழியாக புதூர் கிராமம் அருகே கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    தற்போது பெய்து வரும் கனமழையால் கனகம்மாசத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வரும் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து அப்பகுதியில் ஓடுகிறது. இந்த நிலையில் கனகம்மாசத்திரம் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் ஏராளமானோர் உபரிநீர் வரும் ஓடையில் மழை வெள்ளத்தை கடந்து ஆபத்தாக வருகிறார்கள்.

    வயதானோர் மற்றும் மதுபோதையில் இருப்பர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி ஆபத்தான முறையில் வந்து மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். ஏராளமானார் மீண்டும் தண்ணீர் வரவேண்டாம் என்று நினைத்து அதிகமான மது பாட்டில் கைளை வாங்கி அதனை கட்டி அணைத்து தள்ளாடியபடி கரையை கடக்கின்றனர்.

    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 4
    கொத்தமல்லி - 1/2 கப்
    உருளைக் கிழங்கு - 250 கிராம்
    சீஸ் - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    மாவு பிசைய :


    மைதா - 2 கப்
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    உருளைக் கிழங்கு வெந்ததும், தோலை உரித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதில் ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    மாவு பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.

    அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.

    திரட்டிய மாவை கையில் எடுத்து சமோசாவிற்கு முக்கோண வடிவில் பிடிப்பதுபோல் கையில் சுருடிக் கொள்ளுங்கள்.

    அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு பூரணத்தை தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.

    இப்படி அனைத்தையும் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசாவை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சீஸ் சமோசா தயார்.

    இதையும் படிக்கலாம்...சத்துக்கள் நிறைந்த சோள தோசை
    காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை, சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள கீழ்கதிர்பூரில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் பணியில் இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மணிகண்டனை மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற மணிகண்டனை மர்ம கும்பல் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரை வெட்டியது செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த சதீஷ், கரையாஞ்சாவடியை சேர்ந்த இமானுவேல், பாலாஜி ராஜா, பிரவீன், ஜெகன்ராஜ், மதியழகன் ஆகியோர் என்பது தெரிந்தது.

    அவர்கள் 6 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.

    மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லி மீது டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டை கூறினார். இதனால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்தது.

    புதுடெல்லி:

    முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத். 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார்.

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கீர்த்தி ஆசாத் அரசியலுக்குள் நுழைந்து பா.ஜனதாவில் சேர்ந்தார். 1999, 2009, 2014 ஆகிய 3 முறை அவர் எம்.பி.யாக இருந்தார்.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கீர்த்தி ஆசாத் பா.ஜனதாவில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லி மீது டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டை கூறினார். இதனால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்தது.

    மம்தா பானர்ஜி

    இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு கீர்த்தி ஆசாத் காங்கிரசில் இணைந்தார்.

    இந்த நிலையில் கீர்த்தி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் மம்தா முன்னிலையில் அந்த கட்சியில் சேருகிறார்.

    இதையும் படியுங்கள்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கிரசில் நாளை முதல் விருப்ப மனு- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

    வடகிழக்கு பருவமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து செவிலிமேடு பாலாற்றில் செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்துக்கு பெய்து வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 340 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. பெரும்பாலான குளங்ளும் நிரம்பியுள்ளது.

    பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

    1903-ம் ஆண்டுக்கு பிறகு காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பார்க்க 3-வது நாளாக நேற்றும் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகைதந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தை பார்த்து மிகிழ்ந்தனர்.

    பெருக்கெடுத்து ஓடும் பாலாற்று தண்ணீர் கடலில் வீணாக கலப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
    நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது.
    கூடலூர்:

    கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழை கைகொடுத்ததால் குறிப்பிட்ட நேரத்தில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் கேரள அரசு 142 அடி தண்ணீர் தேக்க தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அவ்வப்போது கேரள பகுதிக்கு வீணாக தண்ணீர் திறந்து விடுவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்துள்ளது. இதனால் நேற்று 3104 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1992 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம் வழியாக 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 200 கன அடியும் என மொத்தம் 2000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 168 கன அடி நீர் கேரளாவுக்கு உபரியாக திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. 2387 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2355 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை 55 அடியாக உள்ளது. 46 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.47 அடியாக உள்ளது. 106 கன அடி நீர் வருகிறது. இதில் 30 கன அடி பாசனத்திற்கும், 76 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
    ×