என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    வாலாஜாபாத் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜாபாத்:

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள நாயக்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் என்.ஆர்.பழனி (வயது 49). அ.தி.மு.க. விவசாய அணி பிரிவு காஞ்சீபுரம் மாவட்ட செயலாளராகவும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவர் வசித்து வந்த பழைய வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளார்.

    புதிய வீட்டின் பின்புறம் உள்ள இடிக்காமல் இருந்த பழைய வீட்டின் அறையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கான கிரகபிரவேசம் நடைபெற்றது. கிரகபிரவேசம் முடிந்த நிலையில் பழைய வீட்டின் அறையை பூட்டிவிட்டு புதிய வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.

    நேற்று அதிகாலையில் பழனி பின்புறம் உள்ள பழைய வீட்டுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 55 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3½ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டு கிரகபிரவேசத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள், அளித்த பரிசு பொருட்கள், மொய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து உடனடியாக வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரிதது வருகின்றனர்.

    வாலாஜாபாத் அருகே பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.3½ லட்சம் மற்றும் 55 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள நாயக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்.ஆர்.பழனி. பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் பழைய வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் புதியதாக வீடு கட்டி உள்ளார்.

    நேற்று முன்தினம் வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இதையடுத்து பழனி பழைய வீட்டின் அறையை பூட்டிவிட்டு புதிய வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் புதிய வீட்டின் பின்புறம் உள்ள பழைய வீட்டின் கதவை உடைத்து புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகைகள்,1 கிலோ வெள்ளிப்பொருட்கள் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம்,மற்றும் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த பரிசுப் பொருட்களும், மொய்ப்பணத்தையும் அள்ளி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து உடனடியாக வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டை அடுத்த அஞ்சூர் பிராமண தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பினிதா. கணவன், மனைவி இருவரும் தினந்தோறும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

    நேற்று மாலை திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 7 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் அருகே தனியார் பஸ்-லாரி மோதிய விபத்தில் ஊழியர்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்தித்தில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

    இங்கு காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று இரவு பணி முடிந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனி பஸ் புறப்பட்டு சென்றது. சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையின் வழியாக காஞ்சிபுரத்தை அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே பஸ் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த கம்பெனி பஸ் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் இருந்த ஊழியர்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பாலுசெட்டி போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவ நேரி மீனவர் பகுதியை சேர்ந்தர் பரதன் (வயது32). இவர் மோட்டர் சைக்கிளில் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதியது.

    இதில் நிலைதடுமாறிய பரதன் மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள நீராவி மண்டபம் முழுவதுமாக நிரம்பி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.

    இங்குள்ள அனந்த சரஸ் குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே கொண்டு வரப்பட்டு தரிசன விழா விமரிசையாக நடைபெறும்.

    கடந்த 2019-ம் ஆண்டு அனந்த சரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் 48 நாட்களுக்கு பிறகு அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராவி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

    அத்திவரதர்

    இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள நீராவி மண்டபம் முழுவதுமாக நிரம்பி உள்ளது.

    இந்த குளத்தில் 24 படிக்கட்டுகள் உள்ளன. தற்போது 21 படிக்கட்டுகள் முழுமையாக நீர் நிரம்பி இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு பெய்த தொடர்மழை காரணமாக அத்திவரதர் கோவில் குளம் நீராவி மண்டபம் என அனைத்தும் நிரம்பி 3 படிக்கட்டுகள் மட்டுமே வெளியே தெரிகிறது.

    இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அத்திவரதர் குளம் தண்ணீரால் நிரம்பி இருப்பதால் பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை மாதம் அனு‌ஷம் நட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீ தாத தேசிக சாற்று முறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அணிவிக்கப்பட்டு ஸ்ரீ தேவி, பூதேவி உடன் சிறப்பு அலங்காரம் அத்திகிரி மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் பெருந்தேவித் தாயார் உடன் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள் மேள தாளங்கள் முழங்க கோவில் வளாக பிரகாரத்தில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

    இதையும் படியுங்கள்... எல்லைகளை பாதுகாக்க உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம்: அமித் ஷா

    ஒரகடம் அருகே வாகன சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    சென்னை அடுத்த பழந்தண்டலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (வயது 30). இவர் வாலாஜாபாத் பகுதியில் தங்கியிருந்து டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    ஓரகடம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்ததில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனத்தின் சக்கரத்தில் ஜோசப்ராஜ் சிக்கினார்.

    இதில் ஜோசப் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் அவரது உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் பெண்ணிடம் இருந்து நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே உள்ள தாமல்வார் தெருவில் மாவு கடை நடத்தி வருபவர் பூங்கொடி (வயது36). இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த மர்ம நபர்கள் 2 பேர் பூங்கொடி அணிந்திருந்த 3 பவுன் நகையை  பறித்து கொண்டு தப்பிச்சென்றனர்.

    பூங்கொடி கூச்சலிட்டதையடுத்து அந்த பகுதி மக்கள் இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் அந்த பகுதிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூரில் போலி வைர நகையை விற்று கட்டிட ஒப்பந்ததாரரிடம் மோசடி செய்து தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருமங்கை ஆழ்வார் தெருவில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 47). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் நேற்று ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது செல்போன் `சுவிட்ச்-ஆப்' ஆகி விட்டது எனக்கூறி கண்ணனுடைய செல்போனை வாங்கி பேசியுள்ளார்.

    பின்பு, தான் காஞ்சீபுரத்தில் நகைக்கடை வைத்திருப்பதாகவும், வியாபாரியிடம் நகை வாங்குவதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    மேலும் இப்பகுதிகளில் குறைவான விலைக்கு கடைகளுக்கு தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் விற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகை உள்ளதாகவும், அதை ரூ.3 லட்சத்துக்கு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி ஜொலி ஜொலிக்கும் கற்கள் அடங்கிய போலி நகையை எடுத்து காண்பித்துள்ளார்.

    இதைப் பார்த்த கண்ணனுக்கு பேராசை ஏற்படவே தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் 4 மோதிரங்கள் என 9 பவுன் நகையை கழட்டி நகை வியாபாரியிடம் கொடுத்துள்ளார்.

    உடனே பேப்பரில் மடித்து வைத்திருந்த போலி நகையை மோசடியாக கண்ணன் கையில் கொடுத்து விட்டு, நகையை இங்கே பிரித்துப் பார்க்க வேண்டாம் என்றும், போலீசுக்குத் தெரிந்தால் பிரச்சினை என்று கூறிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டார்.

    கண்ணன் சிறிது தூரம் சென்ற பிறகு பிரித்து பார்த்த போது, அது போலி நகை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து கண்ணன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 43 பவுன் நகையை மீட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சுதர்சன் நகரில் வசித்து வருபவர் கவிதா. இவர் கடந்த 3-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்து 43 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக சேலத்தை சேர்ந்த மனோஜ், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜாராம், கார்த்திக் ராஜா, திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த திலிப் திவாகர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 பவுன் நகை மீட்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க டி4 முனையத்தில் ஒரு பிரத்யேக நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.
    ஆலந்தூர்:

    தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து நேரடி விமானங்களிலும், விமானங்கள் மாறி மாற்று விமானங்களிலும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமானநிலையங்களுக்கு வருபவர்களை அந்தந்த விமானநிலையங்களிலேயே நிறுத்தி, ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பரிசோதனை முடிவு வரும் வரை பயணிகளை காத்திருக்கவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வழிகாட்டு நடைமுறை இன்று (1-ந் தேதி) அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னை விமான நிலையத்தில் வழிகாட்டுதல்களை தடையின்றி செயல்படுத்துவதற்காக விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள், மாநில அதிகாரிகள் இன்று டி3, டி4 ஆகியமுனையங்களில் கூட்டு ஆய்வு செய்தனர்.

    தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க டி4 முனையத்தில் ஒரு பிரத்யேக நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆர்.டி-பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வெளியாக சுமார் 6 மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க வேண்டியது கட்டாயம் என்பதால், ஒரே நேரத்தில் 450 பயணிகள் அமரும் வகையில் தனி இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    கோப்புப்படம்


    மேலும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள், மாதிரி சேகரிப்பு மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவற்றிற்கான வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளன.

    பயணிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு ஒவ்வொரு வசதிக்கும் தனி, தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டி4 முனையத்தில் விற்பனை நிலையங்கள், தாய்மார்கள் பால் கொடுக்கும் இடம் மற்றும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி, பொழுதுபோக்கு திரைகள், இலவச வைபை, இலவச தொலைபேசி மற்றும் குளிர்பான விற்பனை எந்திரங்கள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

    மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களுடன் கூடிய தகவல் காட்சிகள் வெளியிடப்படுகின்றன.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூர் மாவட்டம் மாப்பேடு பகுதியில் வாசிப்பவர் பிரேம். இவர் கடந்த 20-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் சென்ற போது மண்ணுர் கூட்டு சாலை அருகே மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பிரேமிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்துகொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பிரேம் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.

    விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் தெரு வீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன்(வயது 28), அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல்(20), திருவள்ளூவர் தெருவை சேர்ந்த பிரவீன்(24), ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணுர் பகுதியில் நேற்று கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
    ஒரத்தூர் ஏரிக்கரை உடைந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேறுகிறது. உடைப்பு பகுதியில் மணல்மூட்டைகளை அடுக்கும் பணி நடந்து வருகிறது.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் ஒரத்தூர் ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி முழுமையாக முடிவடையாமல் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள ஏரியின் கரை 2 நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்து அதிக அளவு நீர் வீணாக வெளியேறுகிறது.

    ஏரியின் கரை உடைந்து நீர் வெளியேறி வரும் பகுதியில் படகு மூலம் மணல் மூட்டைகள் எடுத்து சென்று கரை உடைந்த பகுதியில் சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தி மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணி முழுமையாக முடியாமல் உள்ளது. இதனால் ஏரியில் இருந்து நீர் தொடர்ந்து 3-வது நாளாக வெளியேறி வருகிறது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில்:-

    ஏரியின் கரை உடைந்த பகுதியில் அதிக அளவில் நீர் செல்வதால் படகு மூலம் மணல் மூட்டைகள் எடுத்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அடுக்கும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளைக்குள் உடைந்த கரை பகுதியில் விரைந்து மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
    ×