search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணிகள் காத்திருக்க ஏற்பாடு செய்திருக்கிற இடத்தையும், பரிசோதிக்க தனி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்
    X
    பயணிகள் காத்திருக்க ஏற்பாடு செய்திருக்கிற இடத்தையும், பரிசோதிக்க தனி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்

    சென்னை விமான நிலையத்தில் 450 பயணிகள் அமரும் வகையில் தனி இடம்-நடைபாதை

    தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க டி4 முனையத்தில் ஒரு பிரத்யேக நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.
    ஆலந்தூர்:

    தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து நேரடி விமானங்களிலும், விமானங்கள் மாறி மாற்று விமானங்களிலும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமானநிலையங்களுக்கு வருபவர்களை அந்தந்த விமானநிலையங்களிலேயே நிறுத்தி, ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பரிசோதனை முடிவு வரும் வரை பயணிகளை காத்திருக்கவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வழிகாட்டு நடைமுறை இன்று (1-ந் தேதி) அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னை விமான நிலையத்தில் வழிகாட்டுதல்களை தடையின்றி செயல்படுத்துவதற்காக விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள், மாநில அதிகாரிகள் இன்று டி3, டி4 ஆகியமுனையங்களில் கூட்டு ஆய்வு செய்தனர்.

    தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க டி4 முனையத்தில் ஒரு பிரத்யேக நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆர்.டி-பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வெளியாக சுமார் 6 மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க வேண்டியது கட்டாயம் என்பதால், ஒரே நேரத்தில் 450 பயணிகள் அமரும் வகையில் தனி இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    கோப்புப்படம்


    மேலும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள், மாதிரி சேகரிப்பு மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவற்றிற்கான வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளன.

    பயணிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு ஒவ்வொரு வசதிக்கும் தனி, தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டி4 முனையத்தில் விற்பனை நிலையங்கள், தாய்மார்கள் பால் கொடுக்கும் இடம் மற்றும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி, பொழுதுபோக்கு திரைகள், இலவச வைபை, இலவச தொலைபேசி மற்றும் குளிர்பான விற்பனை எந்திரங்கள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

    மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களுடன் கூடிய தகவல் காட்சிகள் வெளியிடப்படுகின்றன.

    Next Story
    ×