என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்கட்சி தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அ.தி.மு.க. உறுப்பினர் தேர்தல் விறு விறுப்பாக தொடங்கியது. கிளைக் கழக செயலாளர், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியத்தில் அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள், பேரூராட்சி வார்டு செயலாளர், அவைத் தலைவர், நகர வார்டு செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி.விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட 17 இடங்களில் உள்கட்சி தேர்தல் நடைபெற்றது.

மாங்காடு பேரூராட்சியில் நடந்த உள்கட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியினரிடம் விண்ணப்ப படிவத்தை வழங்கினர்.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோம சுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் கே.பழனி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
உள்கட்சி தேர்தலுக்காக தனியார் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. காலை முதல் ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்து விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட கிளை செயலாளர் பதவிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.250, பேரூராட்சி வார்டு செயலாளர்-ரூ.300, அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகளுக்கு ரூ.200, நகர வார்டு செயலாளர்-ரூ.500 விண்ணப்ப கட்டணமாக பெறப்பட்டது. நாளையும் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.
ஆவடி வடக்கு பகுதி செயலாளர் தீனதயாளன் மரணம் அடைந்ததையடுத்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட தேர்தல் இன்று நடைபெறவில்லை. நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்கள் வழங்கும் இடத்தில் ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகள் வாரியாக மேஜைகள் அமைக்கப்பட்டு படிவங்கள் வழங்கப்பட்டன. நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தனித்தனியாக மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்துடன் உறுப்பினர் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
செங்கல்பட்டுகிழக்கு மற்றும் மேற்கு அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் இன்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அமைப்பு செயலாளர் ஆர்.டி.ராஜாராம் நியமிக்கப்பட்டு இருந்தார். ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போட்டி போட்டு விண்ணப்ப படிவத்தை வாங்கி சென்றனர்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, மறைமலைநகர், பம்மல், அனாகபுத்தூர், செம்பாக்கம் ஆகிய 7 நகரங்களிலும் சில்லப்பாக்கம், திருநீர்மலை, நந்திவரம் கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய 6 பேரூராட்சிகளிலும் பரங்கிமலை மேற்கு, காட்டாங்கொளத்தூர் மேற்கு, காட்டாங்கொளத்தூர் கிழக்கு, காட்டாங்கொளத்தூர் வடக்கு ஆகிய 4 ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெற்றது.
முக்கிய பதவிகளை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவியது. அவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 10 ஆண்டுகள் பயன்படுத்திய சாலைகளில் சுங்க கட்டணம் விதிக்க தடைவிதிக்க வேண்டும்- அன்புமணி அறிக்கை
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சேலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது38).
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சந்திரசேகர். இவரது வீட்டுக்கு நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனை சுரேஷ் கண்டித்து தடுத்தார். இதனால் சுரேசுக்கும், தட்சிணாமூர்த்தி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் சுரேசை அடித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. கீழே விழுந்ததில் சுரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தி உள்பட 3 பேரை தேடி வருகிறார்.
தட்சிணாமூர்த்திக்கும், சந்திரசேகருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்த மோதல் தட்சிணாமூர்த்தி தனது உறவினர்களிடம் தெரிவித்ததால் அவர்கள் சந்திரசேகர் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற சுரேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்த்து வைத்து வழக்காடிகள் பயன்பெற தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 7 நீதிமன்றங்களில் பல வருடங்களாக தீர்த்து வைக்கப்படாமல் உள்ள சொத்து பிரச்சினை வழக்குகள், விபத்து காப்பீடு பிரச்சினைகள், குடும்ப உறவுகள் பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை தீர்த்து வைக்கும் வகையில் மக்கள் நீதிமன்றம் செயல்பட்டது.
இன்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் வழக்காடிகளுக்கு உள்ளேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வுகள் நீதிபதிகளால் வழங்கப்பட்டது.
அதன்படி 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பிரச்சினைகளும், விபத்து காப்பீடு பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டதாக மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தெரிவித்தார். மேலும் நீதிமன்றங்களில் தீர்வு ஏற்படாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள வழக்காடிகளும் வழக்கறிஞர்களும் முன்வர வேண்டும் என நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியில் நீதிபதிகள் இளங்கோவன், திருஞான சம்பந்தம், ராஜேஸ்வரி, சரண்யா செல்வம், செந்தில் குமார், சரவணகுமார், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் கார்த்திகேயன், ஜான், பார்த்தசாரதி, மற்றும் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும், காப்பீட்டு நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வளர்த்து வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
குன்னவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வெண்டிவாக்கம் மற்றும் மலையாங்குளம் கிராமங்களில் தேக்கு, நெல்லி, நாவல், குமிழ், மகாகனி, வேங்கை, நீர்மத்து, பூவரசன், வேப்பம், இலுப்பை உள்ளிட்ட 20 வகையான மரக்கன்றுகள் சுமார் 3 லட்சத்து 65 ஆயிரம் எண்ணிக்கையில் பராமரித்து வளர்க்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் வளர்க்கப்பட்டு வரும் இந்த மரக்கன்றுகள் செப்டம்பர் மாதத்தில் வேளாண்மைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த மரக்கன்றுகளை பெற விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து பட்டா சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே அளிக்கப்படும் என்று வேளாண்மை துறை மூலமாக கூறப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் இதுவரை இந்த மரக்கன்றுகளை வேளாண்மைத்துறையினர் வனத்துறையில் இருந்து பெறவில்லை.
குறிப்பிட்ட காலத்துக்குள் மரக்கன்றுகளை வாங்காததால் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் அழுகி சேதம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் மரக்கன்றுகள் கிடைக்காததால் விவசாயிகளும் பொது மக்களும் வேதனை அடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, பசுமை காடு வளர்ப்பு திட்டத்திற்காக வளர்க்கப்பட்ட இந்த மரக் கன்றுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சுமார் 4 அடி உயரத்துக்கு வளர்ந்து விட்டன. இனி இதை நட்டும் பலன் இல்லை. மரக்கன்றுகளை வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர் என்றனர்.
இதற்கிடையே மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படாததற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தில் பசுமை காடு வளர்ப்பு திட்டத்திற்காக வனத்துறை வளர்த்து வைத்துள்ள சுமார் 3½ லட்சம் மரக்கன்றுகள் இன்று வரை பொதுமக்களுக்கு வழங்கப்படவிடவில்லை. வேளாண்துறையினரின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த மரக்கன்றுகளை வேளாண்துறை பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும். வேளாண்துறை முன்வராத நிலையில், வனத்துறை கேட்டுக் கொண்டால் அம்மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்க காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க.வும், பசுமைத்தாயகம் அமைப்பும் தயாராக உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வாலாஜா பாத் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் ஆய்வு செய்தார். ஏகனாம் பேட்டை கிராமத்தில் நடைபெற்ற மழைநீர் சேமிப்பு பணியை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உள்ளாவூர் கிராமத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அயிமிச்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் அப்பகுதியில் நடைபெறும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் மற்றும் அப்பகுதியில் உள்ள நூலகத்தை கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சீபுரம்:
வாலாஜாபாத் அருகே உள்ள நாயக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்.ஆர்.பழனி. பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் பழைய வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் புதியதாக வீடு கட்டி உள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இதையடுத்து பழனி பழைய வீட்டின் அறையை பூட்டிவிட்டு புதிய வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் புதிய வீட்டின் பின்புறம் உள்ள பழைய வீட்டின் கதவை உடைத்து புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகைகள்,1 கிலோ வெள்ளிப்பொருட்கள் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம்,மற்றும் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த பரிசுப் பொருட்களும், மொய்ப்பணத்தையும் அள்ளி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து உடனடியாக வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டை அடுத்த அஞ்சூர் பிராமண தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பினிதா. கணவன், மனைவி இருவரும் தினந்தோறும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்று மாலை திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 7 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்தித்தில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது.
இங்கு காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று இரவு பணி முடிந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனி பஸ் புறப்பட்டு சென்றது. சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையின் வழியாக காஞ்சிபுரத்தை அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே பஸ் சென்று கொண்டு இருந்தது.
அப்போது முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த கம்பெனி பஸ் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருந்த ஊழியர்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பாலுசெட்டி போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவ நேரி மீனவர் பகுதியை சேர்ந்தர் பரதன் (வயது32). இவர் மோட்டர் சைக்கிளில் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதியது.
இதில் நிலைதடுமாறிய பரதன் மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
இங்குள்ள அனந்த சரஸ் குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே கொண்டு வரப்பட்டு தரிசன விழா விமரிசையாக நடைபெறும்.
கடந்த 2019-ம் ஆண்டு அனந்த சரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் 48 நாட்களுக்கு பிறகு அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராவி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள நீராவி மண்டபம் முழுவதுமாக நிரம்பி உள்ளது.
இந்த குளத்தில் 24 படிக்கட்டுகள் உள்ளன. தற்போது 21 படிக்கட்டுகள் முழுமையாக நீர் நிரம்பி இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு பெய்த தொடர்மழை காரணமாக அத்திவரதர் கோவில் குளம் நீராவி மண்டபம் என அனைத்தும் நிரம்பி 3 படிக்கட்டுகள் மட்டுமே வெளியே தெரிகிறது.
இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அத்திவரதர் குளம் தண்ணீரால் நிரம்பி இருப்பதால் பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீ தாத தேசிக சாற்று முறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அணிவிக்கப்பட்டு ஸ்ரீ தேவி, பூதேவி உடன் சிறப்பு அலங்காரம் அத்திகிரி மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் பெருந்தேவித் தாயார் உடன் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள் மேள தாளங்கள் முழங்க கோவில் வளாக பிரகாரத்தில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
இதையும் படியுங்கள்... எல்லைகளை பாதுகாக்க உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம்: அமித் ஷா






