என் மலர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளசுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், பூந்தமல்லி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடுதிகளில் தங்கி ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 15-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள விடுதிகளில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்களுக்கு உணவை சாப்பிட்டதால் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுமார் 200 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்கை பெற்ற 8 பேர் உயிரிழந்ததாக தொழிலாளர்கள் மத்தியில் வதந்தி பரவியது. அவர்களை பற்றிய விபரத்தை தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவிக்க வில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்தொழிலாளர்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் சுங்குவார்சத்திரத்தில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை முன்பு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் தொழிலளார்களுக்கு ஆதரவாக ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதியில் தங்கி இருந்தவர்களும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கணேசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது காணவில்லை என்று கூறப்பட்ட பெண் தொழிலார்கள் சிலரிடம் கலெக்டர் ஆர்த்தி வீடியோ காலில் பேசினார். அனைவரும் நலமுடன் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி, மற்றும் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், கணேசன் ஆகியோர் உறுதிஅளித்தனர். இதையடுத்து தொழிலாளர்களின் 16 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.
சுங்குவார் சத்திரம் பாக்ஸ்கான் தொழிற்சாலை அருகே நடைபெற்ற போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்ட நிலையிலும், ஒரகடம் பகுதியில் செயல்பட்ட விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டயில் 68 பெண் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காஞ்சீபுரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பகுதியில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகிறார்கள. இவர்களுக்கு காஞ்சீபுரம் அடுத்த குருவி மலைப்பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அங்கு வசிக்காமல் தனித்தனியாக ஆங்காங்கே தங்கி உள்ளனர்.
அவர்கள் தனம் , சங்கீதா ஆகியோரது தலைமையில் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரிக்கை பகுதியில் தனம் பிரிவைச் சேர்ந்த திருநங்கைகள் மீது நேற்று நள்ளிரவு சங்கீதா தலைமையிலான திருநங்கைகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒருதரப்பு திருநங்கைகள் ஓரிக்கை பகுதியில் காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்திய திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகம்மது பேட்டை அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 250 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேசன் அரிசி, 150 மூட்டை பாலிஷ் செய்யப்பட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
இதே குடோனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே நபர் மீண்டும் ரேசன் அரிசி பதுக்கலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சமீப காலமாகவே பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக போலீஸ் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொள்ள முடியாமல் அவ்வப்போது மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மாங்காட்டை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அந்த மாணவி பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அவர் எழுதி உள்ள கண்ணீர் கடிதமும் உறுதி செய்து இருக்கிறது.
மாணவி எழுதிய உருக்கமான முழு கடிதமும் கிடைத்துள்ளது. அதில் அவர் வாழ்வதற்கு பிடிக்கவில்லை. பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது போன்ற வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் அவர் கண்ணீர் மல்க கூறி இருப்பதாவது:-
எனக்கு வாழ பிடிக்கல. கொடூரமான சமூகத்தில் தப்பான எண்ணங்களை ஏன் இப்படி கடவுள் படைத்து இருக்கிறார். என்னை இந்த உலகத்துல கஷ்டப்படணும்னு படைச்சிருக்கார். என்னை பார்த்தாலே வெறுப்பு வருகிறது. என்னை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டனர்.
அது எனக்கு பிடிக்கலை. அந்த யோசனையே மனசுல ஓடிட்டு இருக்கு. எனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை.
வெளியில சொன்னா என்னை தான் தப்பா பேசுவாங்க. இனிமே தப்பான எண்ணத்தோடு யாரும் பெண்களிடம் பேச விடக்கூடாது. யாரையும் நம்ப முடியலை. முக்கியமாக உறவினர்களை. யாரு இப்படி பண்ணாங்கன்னு எனக்கு தெரியும் (எதையோ அடித்துள்ளார்) பொண்ணுன்னு என்னை கூட பார்க்கல. நீ எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லக் கூடாது. நீ எல்லாம் இருக்கவே கூடாது. கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார்.

இதற்கு மேல் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும். இதுக்கு மேல முடியாது. மனசு ரொம்ப வலிக்குது. எனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. கனவு வந்து டார்ச்சர் பண்ணுது. படிக்க முடியலை. இந்த சமூகத்துல பாதுகாப்பே இல்லை. என்னோட கனவு எல்லாம் போயிடுச்சு. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் தங்கள் மகன்களுக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு நியாயம் கிடைக்கும்னு நினைக்கிறேன். உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்பாதீர்கள். அனைத்து மனிதர்களும் வேட்டையாடுபவர்கள் தான்.
அம்மா போய்ட்டு வர்றேன் இன்னொரு உலகத்துக்கு பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பான இடம் இல்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு மாணவி எழுதிய 2 பக்க கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இது தவிர 3-வதாகவும் மாணவி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தின் கடைசியில் உடலை மட்டும் பார்த்து பழகுபவர்கள் ஆண்மைக்கு தகுதி இல்லாதவர்கள். மோசமான உலகத்தில் பிறந்து விட்டேன். மறுபடியும் வேறு உலகத்துக்கு செல்கிறேன். ‘‘ஸ்டாப் செக்சுவல் அராஸ் மெண்ட். ஜஸ்டிஸ் பார் மீ’’ என குறிப்பிட்டுள்ளார். தூக்கு கயிறு படம் ஒன்றையும் கடிதத்தில் அவர் வரைந்துள்ளார்.
இந்த கடிதத்தை கிழிந்த நிலையில்தான் போலீசார் கைப்பற்றி ஒட்ட வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, ‘‘தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மாணவியே 3 கடிதங்களையும் எழுதி இருக்கிறார். அதில் ஒரு கடிதத்தை அவரே கிழித்து போட்டுள்ளார்’’ என்று தெரிவித்தனர்.
கடிதத்தில் சில இடங்களில் எதையோ எழுதிவிட்டு முழுமையாக அழித்துள்ளார்.
இந்த வழக்கில் அதில் இடம்பெற்றுள்ள விவரங்களே முக்கிய ஆதாரங்களாக இருக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள். தன்னை தற்கொலைக்கு தூண்டியவர்களின் பெயர்களை எழுதிவிட்டு பின்னர் அவற்றை மாணவி அழித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...தமிழ் சினிமாவில் சாதி இருக்கிறது - கமல் பேச்சுக்கு பா.ரஞ்சித் பதில்

அவர் கூறுகையில், “தொழிலாளர்கள் மாயமானது தொடர்பாக வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர். எனவே யாரும் அதை நம்ப வேண்டாம். யாரும் மாயமாகவில்லை” என்றார்.
ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்கள் கலெக்டர் ஆர்த்தி கூறியதை முதலில் நம்ப மறுத்தனர். இதைத்தொடர்ந்து மாயமானதாக கூறப்பட்ட ஒரு பெண்ணிடம் வீடியோ காலில் கலெக்டர் ஆர்த்தி தொடர்பு கொண்டார். அவரிடம் நலம் விசாரித்தார்.
மாயமானதாக கூறப்பட்ட பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை. நன்றாக இருக்கிறார் என்பதை சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் கலெக்டர் ஆர்த்தி தெளிவுப்படுத்தினார். வீடியோ காலில் பேசிய காட்சிகளையும் காண்பித்து விளக்கம் அளித்தார்.
பின்னர் அவர் அங்கிருந்தவர்கள் மத்தியில் பேசியதாவது:-
உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். எனவே தொழிலாளிகள் மாயமாகி விட்டதாக சொல்வதை யாரும் நம்ப வேண்டாம்.
விடுதி காப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் நிறுவன விடுதிகளில் தங்கி இருப்பவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
எனவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்.
இவ்வாறு கலெக்டர் ஆர்த்தி கேட்டுக்கொண்டார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஷிப்டு முறையில் வேலை செய்து வருகின்றனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகம் ஆங்காங்கே விடுதிகள் எடுத்து தங்க வைத்து உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பூந்தமல்லி அருகே விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட பெண்கள் 200 பேருக்கு திடீரென்று வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த பெண் ஊழியர்கள் கெட்டுபோன உணவு சாப்பிட்டு இறந்து இருக்கலாம் என்ற தகவல் தொழிலாளர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவியது.
இதனால் ஆத்திரம் அடைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்-ஆண் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வட்டம்பாக்கம், ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இந்த போராட்டம் காரணமாக சுங்குவார்சத்திரத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது.
இதே போல் தாம்பரம்-வாலாஜாபாத் சாலை மறியல் போராட்டத்தால் சாலைகள் ஸ்தம்பித்து வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
சுங்குவார்சத்திரம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெண்-ஆண் தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு நின்றதால் அங்கு சென்னை-வேலூர் இடையேயும், வேலூர்-சென்னை இடையேயும் போக்குவரத்து தடைபட்டது.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முதலில் வாகன ஓட்டிகள் இறங்கி வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விடிய விடிய நடந்த இந்த போராட்டம் காலையிலும் தொடர்ந்தது.
போராட்டம் பற்றி தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டம் நடத்திய தொழிலாளர்களை விட போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் சாலை மறியல் செய்த தொழிலாளர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து இன்று காலையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் சமரசம் அடையவில்லை.
இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
சாலையில் நின்ற பொதுமக்களை போலீசார் இருபுறமும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் சாலையில் இருந்து வெளியேற மறுத்த சில ஆண் தொழிலாளர்களை தாக்கி, சட்டையை பிடித்து இழுத்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள்.
இதை கண்ட பெண் தொழிலாளர்கள் போலீஸ் வாகனத்தை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இதனால் போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் யாரும் இறக்கவில்லை. இறந்ததாக வதந்தி பரப்பி விட்டுள்ளனர். அவர்கள் வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று கூறினார்கள்.
மேலும் காணாமல் போனதாக கூறப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரை செல்போனில் வீடியோ காலில் பேச வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் சமரசம் அடைந்தனர்.
காலை 9 மணிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல தொடங்கினார்கள். முதலில் சுமார் 10 ஆயிரம் பேர் அங்கிருந்து சென்றனர். மீதமுள்ள 10 ஆயிரம் பேர் சாலை ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தனர். சுமார் 11 மணி அளவில் அவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு பிறகு போக்குவரத்து சீரானது.
இதே போல் இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் செந்தில்குமார், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 48). இவரது மனைவி காமாட்சி (45). இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும், பிளஸ்-1 படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில், ஜெயகுமார் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று முன்தினம் காலை மனமுடைந்த காமாட்சி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, உடனடியாக அவரை மீட்டு, உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தந்தை சண்முகம் உத்திரமேரூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
காஞ்சிபுரம்:
குட்கா, பான்மசாலா விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனினும் தடையை மீறி கடைகளில் குட்கா விற்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் குட்கா விற்பனை நடந்து வருகிறது. இதையடுத்து குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தலைமறைவு ரவுடிகள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். இதில் கடந்த ஒரு வாரத்தில் குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு ரவுடிகளான பெரிய காஞ்சிபுரம் முகமது இலாகி, ரமேஷ், சிறுபாக்கம் ஆனந்தன், கிளார் ராஜா, தாமல் இளவரசு உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நரசிங்கபுரம் தண்டபாணி, வடமங்கலம் விஜய், அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த ருகல் அகமது உள்ளிட்டோரும் சிக்கினர்.
மாவட்டத்தில் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் போலீசாரின் அதிரடி சோதனையில் 4 ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்த 10 பேர் மற்றும் குட்கா விற்ற 60 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.






