என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சீபுரத்தில் திருநங்கைகள் மோதல் - தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பகுதியில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகிறார்கள. இவர்களுக்கு காஞ்சீபுரம் அடுத்த குருவி மலைப்பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அங்கு வசிக்காமல் தனித்தனியாக ஆங்காங்கே தங்கி உள்ளனர்.
அவர்கள் தனம் , சங்கீதா ஆகியோரது தலைமையில் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரிக்கை பகுதியில் தனம் பிரிவைச் சேர்ந்த திருநங்கைகள் மீது நேற்று நள்ளிரவு சங்கீதா தலைமையிலான திருநங்கைகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒருதரப்பு திருநங்கைகள் ஓரிக்கை பகுதியில் காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்திய திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






