என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மாங்காட்டில் பிளஸ்-1 மாணவி தற்கொலையில் என்ஜினீயரிங் மாணவர் கைது

    கல்லூரி மாணவரின் ஆபாச தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    மாங்காடு:

    பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாங்காட்டை சேர்ந்த 17 வயதான மாணவி பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாங்காடுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி உருக்கமாக எழுதி வைத்திருந்த 3 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அதில், “எனக்கு வாழ பிடிக்கவில்லை. என்னை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டனர். வெளியில் சொன்னா என்னைதான் தப்பா பேசுவாங்க. என்னை நீ பொண்ணுனு கூட பார்க்கவில்லை. நீ எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லக்கூடாது. நீ எல்லாம் இருக்கவே கூடாது.

    கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார். இதற்கு மேல் முடியாது. பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும். மனசு ரொம்ப வலிக்குது. எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லை. என்னால் நிம்மதியாக தூங்க முடியல. கனவு வந்து டார்ச்சர் பண்ணுது. படிக்க முடியவில்லை. பள்ளி பாதுகாப்பானது இல்லை. கல்லறையும், தாயின் கருவறையும்தான் பாதுகாப்பானது. ஆசிரியர், உறவினர்கள் யாரையும் நம்ப வேண்டாம்” என்று உருக்கமாக எழுதி இருந்தார்.

    மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து 3 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரது செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் யார் யார்? அவரது நெருங்கிய நண்பர்கள், தோழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த விசாரணை நடந்தது.

    இதில் மாங்காட்டை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவரான விக்னேஷ் என்பவர் மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. மேலும் அவரது வாட்ஸ்அப்பில் இருந்து மாணவிக்கு ஆபாசமாக பதிவிட்டிருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து கல்லூரி மாணவரான விக்னேசை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவர் சோமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அவர் மீது போக்சோ, பெண் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மாணவி மாலை நேரத்தில் தட்டச்சு வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். அப்போது மாணவிக்கும், கல்லூரி மாணவர் விக்னேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அவர் மாணவி படித்த அதே பள்ளியில் படித்திருக்கிறார்.

    இதன் பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி உள்ளனர். மாணவி நெருங்கி பழகியதை சாதகமாக பயன்படுத்திய விக்னேஷ் ஆபாசமாக பேச ஆரம்பித்து உள்ளார். வாட்ஸ்அப்பிலும் ஆபாசமாக சாட் செய்து இருக்கிறார். மாணவியுடன் விக்னேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள், சாட் செய்த விவரங்களை போலீசார் ஆதாரங்களாக திரட்டி உள்ளனர்.

    விக்னேசின் ஆபாச தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாணவி தற்கொலை தொடர்பாக முதல் கட்டமாக கல்லூரி மாணவர் விக்னேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    மாணவியிடம் அடிக்கடி பேசிய நபர்களின் செல்போன் நம்பர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனை வைத்து மாணவிக்கு தொல்லை கொடுத்தவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். தனிப்படையினர் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தக் கட்டமாக இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் பள்ளி பாதுகாப்பானது இல்லை. ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு இருப்பதால் அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    மாணவியின் உறவினர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அழைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மேலும் சிலரும் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

    இதனால் மாணவியிடம் செல்போனில் பேசியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


    Next Story
    ×