என் மலர்tooltip icon

    ஈரோடு

    மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்பு கொடி காட்டிய நாமக்கல் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு பெரியார் நகரில் காந்திஜி ரோட்டில் தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமை தாங்கினார்.

    சாலை மறியலில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், தலைமை செயற் குழு உறுப்பினர்கள் குமார சாமி, மணிராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் குண சேகரன், கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சாலை மறியல் காரணமாக அங்கு பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜ்குமார், முருகையன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    திண்டலில் வீட்டில் இருந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டல்:

    ஈரோடு மேல் திண்டல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பெயர் வள்ளி (வயது 25). கிருஷ்ணன் தனியார் பள்ளி ஒன்றில் சமையல் காரராக பணிபுரிந்து வருகிறார். 3 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை வள்ளி வீட்டில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் வீட்டு முன் அப்பகுதி மக்கள் கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இத்துக்கு சென்றனர். பிணமாக தொங்கிய வள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இளம்பெண் வள்ளி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இது குறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதா தேவியும் விசாரித்து வருகிறார்.

    எந்தெந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதோ அந்த மாவட்டங்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் மாறுதல் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    ஈரோடு:

    ஈரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி காமராஜர் மேல்நிலைப்பள்ளி, திருநகர் காலனியில்உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திடீரென வந்து ஆய்வு செய்தார்.

    மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர் மாணவ-மாணவிகளிடம் குறைகளையும் கேட்டார். தொடர்ந்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் அரசின் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கல்வி அறிவோடு படிக்கும் பருவத்திலேயே மாணவர்களுக்கு ஒழுக்கத்தை நமது ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிறந்த கல்வியாளர்களை வரவழைத்து அவர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இதனால் அங்கு மேலும் ஆசிரியர்களை நியமிக்க இயலாது. அதே சமயம் வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

    இதை உணர்ந்து எந்தெந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதோ அந்த மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அதே சமயம் இனி வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் பணி மாறுதல் கிடையாது.

    அனைத்து மாணவர்களும் உலக செய்திகளை உட னுக்குடன் தெரிந்து கொள்ள திறன் வழிக்கற்றல் பயிற்சி வகுப்பறை விரைவில் 3 ஆயிரம் பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் கே. வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர். #MinisterSengottaiyan


    எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமையாமல் போனது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், மதுரையில் எய்ம்ஸ் அமைவதால் பொறாமை இல்லை வருத்தம் தான் என தெரிவித்துள்ளார்.
    பெருந்துறை:

    மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அறிவிக்கப்பட்டதோடு மருத்துவமனையை எங்கு அமைப்பது? என இடம் தேர்வு செய்யும் பணியும் தொடங்கியது. மத்திய அரசு குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் பல இடங்களை ஆய்வு செய்தனர்.

    அதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், தஞ்சை ஆகிய இடங்கள் முன்னணி இடத்தில் இருந்தது.

    பெருந்துறையில் மருத்துவக்கல்லூரியின் பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அந்த இடம்தான் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    மத்திய குழுவினரும் போதுமான இடவசதி உள்ளது என்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறி விட்டு சென்றனர்.

    இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் கிட்டத்தட்ட அமைந்துவிடும் என ஈரோடு மாவட்ட அரசியல் தலைவர்கள் உறுதியாக நம்பி இருந்தனர்.

    தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தார். சட்டசபையிலும் இது பற்றி பேசினார்.

    கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரனும் எய்ம்ஸ் மருத்துவமனை கொங்கு மண்டலத்தில் அமைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதே போல பல கட்சியினரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

    ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் என நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும் அது மதுரைக்கு சென்றது கொங்கு மண்டல மக்களுக்கு ஏமாற்றம்தான்.


    எப்படியோ எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வந்தால் போதும் என தங்களுக்குள்ளே ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததற்கு காரணம் என்ன? என அலசி பார்த்தபோது சில தகவல்கள் கிடைத்தது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் அதன் அருகேயோ, நடுவிலோ ரோடு இருக்கக்கூடாது. ஆனால் பெருந்துறையில் இடம் தேர்வு செய்த இடத்தின் மத்தியில் ரோடு இருந்தது.

    இதனால் காற்று மாசு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டது. அப்படி காசு மாசு ஏற்பட்டால் அது மருத்துவமனைக்கு உகந்ததாக இருக்காது. எனவே தான் கடைசி நேரத்தில் பெருந்துறை நிராகரிக்கப்பட்டு மதுரைக்கு சென்றதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாதது கொங்கு மண்டல மக்களுக்கு வருத்தம் கலந்த ஏமாற்றமே என்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.

    இது பற்றி தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது:-

    பெருந்துறை தோப்பு பகுதியில் அமைய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூர் பக்கம் அமைய உள்ளதால் எங்களுக்கு பொறாமை இல்லை. சிறிய வருத்தம் கலந்த ஏமாற்றம் தான்.

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதன் மூலம் அந்த பகுதி மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள்.

    அந்த வகையில் எனது தொகுதியில் மருத்துவமனை அமைந்திருந்தால் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய கொங்கு மண்டல மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

    ஆனால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை பக்கம் சென்றுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பயன் பெறுவார்கள். எப்படி பார்த்தாலும் மகிழ்ச்சி அடைவது தமிழக மக்கள் தானே!

    இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார். #AIIMS #AIIMSinMadurai
    கட்சி பொறுப்பில் பலர் இருந்தும் அங்கன்வாடி கட்டிடம் கட்ட, இடத்தை தேர்வு செய்யாமல் அமைச்சர் சென்று ஊரின் மையப்பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. #TNMinister #Karuppannan
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட க.புதூர் இங்கு 700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் சார்பில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

    கட்டிடம் கட்ட பூமி பூஜை போடுவதற்கு சுற்று சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வந்தார். அந்த பகுதியை சேர்ந்த கட்சிக்காரர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தை தேர்வு செய்து வைத்து, கட்சிக்காரர்கள் புடைசூழ அமைச்சரை அழைத்து சென்றார்கள். சிறிது தூரம் நடந்ததும் அமைச்சர் இப்படி ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் அங்கன்வாடி பள்ளி அமைந்தால் குழந்தைகளுக்கு பதுகாப்பாக இருக்காது? மேலும் ஊரை விட்டு ஒதுக்கு புறமாக உள்ளது. வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று கூறியதும்,

    மீண்டும் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி ஸ்ரீ நகர் என்ற இடத்திற்கு அழைத்து சென்ற கட்சியினர் அங்கும் சரியான இடம் அமையாததால் அமைச்சர் தான் வந்த காரை விட்டு இறங்கி, கொளுத்தும் வெயிலில் கட்சிக்காரர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி ஊரின் மைய பகுதியில் உள்ள, ஏவிஎம் நகர் பழைய தண்ணீர் தொட்டி இருந்த இடத்திற்கு சென்று பார்த்து இடத்தை தேர்வு செய்தார்.

    பிறகு அங்கு பூமி பூஜை செய்து வேலையை துவக்கிவைத்தார். கட்சி பொறுப்பில் பலர் இருந்தும் அங்கன்வாடி கட்டிடம் கட்ட, இடத்தை தேர்வு செய்யாமல் அமைச்சர் சென்று ஊரின் மையப்பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் வியப்பாக பேசப்பட்டதோடு அமைச்சரையும் மக்கள் பாராட்டினர். #TNMinister #Karuppannan
    பெருந்துறை சிப்காட் வளாகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறினார். #KCKaruppannan #SIPCOT
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் வளாகம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் பெரும்பாலான நிறுவனங்கள் சாய தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள்தான். இந்த நிறுவனங்களில் இருந்து கழிவு நீர் பெரும்பாலும் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுவதால் இந்த சிப்காட்டை சுற்றியுள்ள சுமார் 10 கிமீ தொலைவிற்குள் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டநிலையில் சாயக்கழிவின் நிறத்துடனேயே உள்ளது.

    இது தொடர்பான கோர்ட்டின் உத்தரவிற்கு பின்னர் ஜீரோ டிஸ்ஜார்ஜ் முறை அமுலுக்கு வந்தது. பெரும்பாலான நிறுவனங்கள் அதற்கு பின்னர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சுத்திகரிப்பின் போது வெளியாகும் திடக்கழிவுகள் சிமெண்ட் பேக்டரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து சிப்காட்டால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் வருகின்ற 26ம் தேதி பெருந்துறை, சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்ட கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் முன்னிலையில் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் அனைத்து நிறுவனங்களிலும் இருந்து ஜீரோ டிஸ்சார்ஜ் முறையினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.



    அதன்படி பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், எஸ்பி சக்தி கணேசன், ஆர்டிஓ நர்மதா தேவி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது கூறியதாவது:-

    பெரும்பாலான நிறுவனங்கள் சாயக்கழிவு நீரை சூடேற்றி நீராவியாக மாற்றி கீழே தேங்கும் திடக்கழிவுகளை மட்டும் அப்புறப்படுத்தி விடுகின்றன. இந்த முறையில் அந்த நிறுவனங்கள் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றுகின்றன.

    ஆனால் இந்த வளாகத்தில் உள்ள 13 நிறுவனங்கள் சோலார் பேனல் முறையை பயன்படுத்தி சாயக்கழிவு நீரை ஆவியாக்குகின்றனர். இதில் குறைந்த அளவே நீர் ஆவியாகிறது. அதிகப்படியான சாயக்கழிவு வரும் பட்சத்தில் இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமலேயே வெளியேறி விடுகிறது. மேலும் மழை காலங்களில் இந்த முறை பயனற்றதாகி விடுகிறது. அந்த சமயங்களில் சாயக்கழிவு நீர் வெளியேறி அருகில் உள்ள குளம் குட்டைகளில் தேங்கி விடுகிறது. ஆகவே இந்த நிறுவனங்களும் இந்த முறையை கைவிட்டு மற்ற நிறுவனங்களை போல நீரை கொதிக்க வைத்து ஆவியாக்க வேண்டும்.

    30 நாட்களில் இருந்து 60 நாட்களுக்குள் இந்த நிறுவனங்கள் ஜீரோ டிஸ்சார்ஜ் முறைக்கு மாறி விடுவதாக உறுதியளித்துள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பிரச்சினை பெரும்பாலும் இன்னும் 2 மாதத்திற்கும் சரிசெய்யப்படும்.

    சிப்காட் வளாகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதியளிக்கும் எண்ணம் தற்போது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KCKaruppannan #SIPCOT


    பவானி அருகே மாநில கபடி வீரர் உள்பட 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கோனேரிபட்டி பிரிவு குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ரமேஷ். டிப்ளமோ முடித்துள்ளார்.

    கபடி வீரரான இவர் மாநில அளவில் நடந்த பல்வேறு போட்டியில் விளையாடி உள்ளார். சிறந்த கபடி வீரர். இவரது நண்பர் பவானி அடுத்த ஊஞ்சப்பாளயத்தை சேர்ந்த அழகேசன். இன்று காலை 7.45 மணியளவில் அழகேசன் மோட்டார் சைக்கிளில் இருவரும் ஒரு வேலை வி‌ஷயமாக சென்று கொண்டிருந்தனர்.

    பவானி அடுத்த கேசரி மங்கலம் பிரிவில் சென்ற போது முன்னாள் சென்ற ஒருவாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரேவந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பவானி அரசுஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த 3 யானைகள் பொக்லைன் எந்திரம் மூலம் வனத்துறையினர் மீட்டனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி கடம்பூர் அருகே உள்ள கானக்குந்தூரில் அந்த பகுதியை சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் 3 யானைகள் காட்டை விட்டு வெளியேறி வழி தவறி தோட்டத்துக்குள் புகுந்தது.

    அந்த தோட்டத்தில் 70 அடி ஆழம் கொண்ட ஒரு கிணறு இருந்தது. அந்த வழியாக வந்த 3 யானைகளும் தவறி ஒன்றன் பின் ஒன்றாக அந்த கிணற்றில் விழுந்தது.

    கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் அந்த 3 யானைகளும் தண்ணீரில் நீந்தியப்படி தத்தளித்து பலமாக பிளிறியது.

    யானைகளின் பிளிறல் சத்தத்தை கேட்டு ஊர் பொது மக்கள் அங்கு ஓடி வந்தனர். கிணற்றுக்குள் 3 யானைகள் விழுந்ததை கண்டு திடுக்கிட்ட மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    சத்தியமங்கலம் ரேஞ்சர் பெர்னார்டு தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரத்தால் யானைகள் அந்த வழியாக வரும் படி குழி தோண்டப்பட்டது.

    இதன் வழியாக 3 யானைகளும் கிணற்றில் இருந்து வெளியேறியது. பிறகு அந்த 3 யானைகளையும் சத்தம் போட்டப்படி காட்டுக்குள் விட்டனர்.

    கிணற்றில் இருந்து மீண்டு வந்த 3 யானைகளும் மகிழ்ச்சியுடன் பிளிறியபடி காட்டுக்குள் சென்றது. #Tamilnews
    சென்னிமலை அருகே கழிவுகளை கொட்டி மூடியதாக வந்த புகாரை அடுத்து மற்றொறு கிணற்றிலும் கொட்டப்பட்ட ஆலைக்கழிவுகள் அதிகாரிகள் மேற்பார்வையில் அப்புறப்படுத்தப்பட்டது.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சி, செந்தாம் பாளையம் பகுதியில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயன்படுத்தாத கிணறு ஒன்று இருந்தது.

    இதில் கடந்த மே மாதம் சிப்காட் பகுதியில் இருந்து சாயக்கழிவுகளை கொண்டு வந்து கிணற்றில் கொட்டி மூடி விட்டனர், இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குடிநீர் கெட்டுப்போகும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.

    அந்த கிணறுமுழுவதும் தோண்டி எடுக்கப்பட்டு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முன்னிலையில் 16 ம் தேதி பெருந்துறையில் நடந்த பேச்சு வார்த்தையில் மற்றொறு கிணறு செந்தாம் பாளையம் பகுதி தண்ணீர் பந்தல் தோட்டத்தில் பழனிசாமி என்பவருக்கு பாத்தியப்பட்ட கிணற்றில் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

    அதை தொடர்ந்து சம்பவ இடத்தினை ஆய்வு செய்த பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி, டி.எஸ்.பி., ராஜகுமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் மோகனஜெயலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியப் பிரியா ஆகியோர் நேரில் சென்று கிணறு மூடப்பட்ட பகுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர்களை வைத்தே கிணற்றில் கொட்டிய இரும்பு உருக்காலையில் வறுத்த மண் கழிவுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதில் வேறு ஏதேனும் சாயக்கழிவு மூட்டைகள் உள்ளதா எனவும் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். கழிவு கொட்டிய இரண்டு கிணறுகளையும் தோண்டியதால் செந்தாம்பாளையம் பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    இது சம்பந்தமாக கழிவுகளை அனுப்பிய ரங்கராஜ் ஸ்டீஸ் கம்பெனி, செந்தம்பாளையத்தினை சேர்ந்த மணி, கிழக்கு தோட்டம் புதூர் லோகநாதன், ஒரு லாரி உரிமையாளர் ஆகியோர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி மனைவி மறைவுக்கு சபாநாயகர் தனபால் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
    ஈரோடு:

    முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருப்பவர் முத்துசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி சமீபத்தில் மரணமடைந்தார்.

    இதையொட்டி முத்துசாமிக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேரில் வந்து அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று ஈரோடு வந்த தமிழக சபாநாயகர் தனபால் நேராக ஈரோடு பெரியார் நகரில் உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர் முத்துசாமி வீட்டுக்கு சென்றார்.

    அங்கு அவரை வீட்டிலிருந்த முத்துசாமி வரவேற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் மனைவி இறந்ததையொட்டி ஆறுதல் கூறினார். மேலும் இருவரும் 30 நிமிடம் தனியாக அமர்ந்து பேசி கொண்டனர். அதன் பிறகு வெளியே வந்த தனபாலிடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர். அதற்கு சபாநாயகர், “ நான் இங்கு நண்பர் முத்துசாமி மனைவி மறைவு குறித்து ஆறுதல் கூற வந்தேன். அவரை சந்தித்து ஆறுதலும் கூறினேன். வேறொன்றும் சொல்வதிற்கில்லை” என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    இந்த சந்திப்பின்போது எதிரும் புதிருமாக உள்ள அ.தி.மு.க-தி.மு.க பிரமுகர்களும் சந்தித்து பரஸ்பரம் நட்பை பரிமாறிக் கொண்டனர்.

    இதை பார்த்தவர்கள் மத்தியில் வியப்பாக இருந்தது. #Tamilnews
    பெருந்துறையில் இருந்து கவுந்தப்பாடிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் பெயர் பலகை இந்தி எழுத்தில் இருந்தது தெரியவந்ததால் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து கவுந்தப்பாடிக்கு (எண்17) டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருக்கிறது.

    இந்த பஸ்சில் திடீரென இந்தி எழுத்தால் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

    அதாவது ஊர் போர்டுக்கு மேலே பெருந்துறை மார்க்கெட் என்று ஆங்கிலத்திலும் அதன் கீழே இந்தி எழுத்திலும் பெயர் இருந்தது.

    இதை கண்ட பொது மக்கள் குறிப்பாக சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்தி எழுத்தில் ஊர் பெயரா? என ஆச்சரியப்பட்டனர். தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. அதே போல் பஸ்களிலும் இந்தியை கொண்டு வந்து விட்டார்களா? என்று ஒருவருக்கொருவர் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.

    அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு பயணி இந்தி எழுத்தால் எழுதப்பட்ட ஊர் பெயர் போர்டை படம் எடுத்து சமூக வலைதளத்திலும் வாட்ஸ்- அப்பிலும் பரவ விட்டார்.

    இது மேலும் பலருக்கு பரவ அவர்களும் அதிர்ச்சி அடைந்து இது குறித்து தங்கள் எதிர்ப்பு கருத்தை வாட்ஸ்-அப்பில் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் மேலும் பரவ இது தொடர்பாக அந்த பகுதி வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கேட்டபோது, “பெருந்துறை சிப்காட் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் பெருந்துறை சந்தைக்கு வருவார்கள். பஸ்சில் ஊர் பெயர் தெரியாமல் வேறு பஸ்சில் சென்று ஏமாற்றம் அடைகிறார்கள். இதற்காகத் தான் அவர்கள் தெரிந்து கொள்ள இந்தியில் பெருந்துறை மார்க்கெட் என போர்டில் பொறிக்கப்பட்டது. வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல. இந்தியை திணிக்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல” என்று கூறினார்.

    இந்தியில் எழுதப்பட்ட விவகாரம் மேலும் பரபரப்பாக பேச சம்பந்தப்பட்ட அரசு டவுன் பஸ்சில் இருந்த இந்தி எழுத்து உடனடியாக அழிக்கப்பட்டு விட்டது.

    மேலும் அந்த பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்த சீனிவாசன் என்பவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் சஸ்பெண்டு செய்து ஈரோடு கோட்ட பொது மேலாளர் உத்தரவிட்டார். #Tamilnews

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் 2 நாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறினார். #sterlite #Sulfuricacid
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கோனார்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

    இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் கல்வித்துறை சார்பில் புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் சீருடைகள் மாற்றப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையான வண்ண வண்ண சீருடை அணிந்து மாணவர்கள் செல்கிறார்கள்.

    ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கந்தக அமிலம் வாயு கசிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து கந்தக அமிலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    இன்னும் 2 நாட்களில் அவை முற்றிலும் அகற்றப்பட்டுவிடும். தூத்துக்குடி மக்கள் கவலைப்பட வேண்டாம். அச்சப்படவும் வேண்டாம்.

    சேலம்-சென்னை, சேலம்-கோவை இடையே அமைக்கப்படும் 8 வழி பசுமை சாலை மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும். இந்த பசுமை சாலை அமைந்தால் சேலத்தில் இருந்து 4 மணி நேரத்தில் சென்னைக்கு சென்றுவிடலாம்.

    ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கங்கணத்துடன் எதிர்க்கட்சியினர் மக்களை தூண்டி விடுகிறார்கள்.

    இந்த திட்டத்தால் ஏற்படும் இழப்புகளை அரசு ஏற்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நிதி வழங்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறினார். #sterlite #Sulfuricacid

    ×