என் மலர்tooltip icon

    ஈரோடு

    தெற்மேற்கு பருவமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டமும் 2 அடி உயர்ந்தது.
    ஈரோடு:

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தெற்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்திருப்பதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கிடு...கிடுவென உயர்ந்துள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 81.50 அடியாக இருந்தது.

    இன்று அதிகாலை நிலவரப்படி நேற்றை விட 2 மடங்காக அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரத்து 865 கனஅடி வீதம் புதுவெள்ளம் பாய்ந்து வருவதுபோல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டமும் 2 அடி உயர்ந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.36 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு இதே வேகத்தில் நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் முழு கொள்ளளவை வேகமாக எட்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    பவானிசாகர் அணை நீர்தேக்கப்பகுதியில் அணையின் இருபுறமும் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தது. பவானிசாகர் அணையையொட்டி உள்ள சித்தன்குட்டை பகுதியில் விவசாயிகள் கதலி, நேந்திரம் வாழைகளை பயிரிட்டிருந்தனர்.

    தண்ணீர் பாய்ந்து வருவதையொட்டி இந்த வாழை தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து ஏராளமான வாழைகள் மூழ்கியது. இதனால் அவை அழுகும் நிலையில் உள்ளது.

    இதனால் வாழை பயிரிட்டிருந்த விவசாயிகள் சேதமான வாழைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பவானிசாகரில் 4.2 மி.மீ மழையும், பெரும்பள்ளம் அணை பகுதியில் 4 மி.மீ மழையும் பெய்தது.
    தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக இன்று காலையில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டனர்.
    கோபி:

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் கோபி மற்றும் சத்தியமங்கலம், டி. என்.பாளையம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்று தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 12-ந் தேதி (இன்று) தண்ணீர் திறக்கப்படும் என கடந்த 9-ந் தேதி அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலையில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டனர்.

    பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று கொடிவேரி தடுப்பணையில் இருந்து மதகுகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மதகை திறந்ததும் தண்ணீர் சீறிப் பாய்ந்தது.

    அப்போது தண்ணீர் மீது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பூக்களை தூவினர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

    தடப்பள்ளி வாய்க்காலுக்கு 450 கன அடி வீதமும், அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 250 கன அடி வீதமும் தண்ணீர் இன்று திறக்கப்பட்டு உள்ளது. படிப்படியாக நீர் திறப்பு உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை நீர் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து வருவதால் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு வெறும் 500 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    கடந்த 7-ந் தேதி இரவு முதல் நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்வதால் அணைக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.

    8-ந் தேதி முதல் பருவமழை மேலும் தீவிரம் அடைந்ததாலும், பில்லூர் அணை நிரம்பியதாலும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர்ந்தது.

    படிப்படியாக நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 80 அடியாக இருந்தது. இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி நீர்மட்டம் 81.50 அடியாக உள்ளது. அதாவது ஒரே நாளில் 1½ அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி தண்ணீரும், கீழ் பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை கால்வாய்களின் கீழ்பாசனம் பெறும் நிலங்களுக்கு நாளை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    இதற்கான நிகழ்ச்சி கொடிவேரி அணை பகுதியில் நாளை காலை 7.30 மணிக்கு நடக்கிறது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தண்ணீர் திறந்து வைக்கிறார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
    ஈரோடு அருகே டாஸ்மாக் கடையில் வாலிபர் வாங்கிய மது பாட்டிலில் உடைந்த கண்ணாடி துண்டு இருந்தது குறித்து பிராந்தி நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
    சென்னிமலை:

    சென்னிமலை மேற்கு ராஜ வீதியை சார்ந்தவர் தமிழ்செல்வன். இவர் சென்னிமலை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள அம்மாபாளையம் டாஸ்மாக் கடைக்கு இரவு சென்றார்.

    100 ரூபாய் மதிப்புள்ள ஒரு குவார்ட்டர் வாங்கி அங்குள்ள பாரில் குடித்தார். பாதி குடித்த நிலையில் அந்த பாட்டிலுக்குள் பெரிய கண்ணாடி துண்டு கிடப்பதை அவர் பார்த்தார்.

    இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பாட்டிலின் வாய்பகுதியை விட கண்ணாடி துண்டு பெரியதாக இருந்ததால் பாட்டிலுக்குள் இருந்த கண்ணாடி துண்டு வெளியே வரவில்லை.

    சிறிய கண்ணாடி துண்டாக இருந்திருந்தால் அது பாட்டிலுக்குள் இருந்து வெளியே வந்து தமிழ்செல்வனின் வயிற்றுக்குள் சென்று குடலை கிழித்திருக்கும்.

    பாட்டில் தயாரிக்கும் போதே உள்ளே அந்த கண்ணாடி துண்டு பாட்டிலுக்குள் இருந்திருக்கலாம் என தெரிகிறது.

    ஒருவேளை கண்ணாடி துகள்கள் பாட்டிலுக்குள் இருந்திருக்குமோ? என்றும் அந்த துகள்கள் தனது வயிற்றுக்குள் சென்றிருக்குமோ? என்ற அச்சத்தில் தமிழ்செல்வன் வாந்தி எடுத்தார்.

    இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பாரில் மது அருந்த வந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தமிழ்செல்வன் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் சரியான அக்கறை இல்லாமல் பொறுப்பற்ற நிலையில் பிராந்தி தயாரிப்பு நிறுவனம் இருந்திருக்கிறது.எனவே இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்’’ என்றார். #tamilnews
    சென்னிமலை வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வாய்ப்பாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்குள் மர்ம நபர்கள் சுற்றி கொண்டிருப்பதாக ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜி விஸ்வநாத்துக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் ஈரோடு வனச்சரக அதிகாரி ரவீந்திரநாத் தலைமையில் வனவர் சரவணன், வன காப்பாளர்கள் தேவராஜ் மற்றும் கோபால் ஆகியோர் சென்னிமலை அருகே வாய்ப்பாடி வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதிக்குள் மர்ம நபர்கள் 6 பேர் சுற்றி கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது அவர்கள் அனைவரும் திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளர்கள் தங்கையா (வயது 33), பாலசுப்பிரமணி (27), கோபாலகிருஷ்ணன் (30), ரங்கராஜன் (33) மற்றும் ராஜா (30) என்றும், இவர்கள் அனைவரும் நேற்று விடுமுறை தினம் ஆதலால் முயல்கள் பிடிக்க வந்ததாகவும் வனத்துறையினரிடம் தெரிவித்தனர்.

    பின்னர் அவர்கள் 6 பேருக்கும் தலா ரூ.4 ஆயிரம் என மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் அபராதத்தை வனத்துறை அதிகாரிகள் விதித்தனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணியிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திலும், ரெயிலில் வரும் பயணிகளிடமும் தொடர்ச்சியாக செல்போன் திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு பயணியிடம் பணம், செல்போன் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தல் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 37). சமையல் மாஸ்டர்.

    சம்பவத்தன்று இரவு இவர் கோவையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரெயிலில் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

    ஆனால் அந்த ரெயிலை அவர் தவறவிட்டார். எனவே மறுநாள் அதிகாலையில் வரும் ரெயிலில் செல்லலாம் என்று நினைத்து ரெயில் நிலையத்தில் தங்கினார்.

    அங்கு டிக்கெட் வழங்கப்படும் இடத்தின் அருகே படுத்து தூங்கினார். திடீரென எழுந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த ரூ. 3700 பணம் மற்றும் செல்போனை காணவில்லை.

    கவியரசன் தூங்கியதை சாதகமாக வைத்து அவரிடம் இருந்து யாரோ மர்ம நபர் பணம், செல்போனை திருடியது தெரியவந்தது.

    இது குறித்து ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் நிலையத்தில் இது போன்று தொடர்ச்சியாக நடைபெறும் திருட்டு சம்பவங்கள் ரெயில் பயணிகளையும், மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க 90 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு இன்று வந்தார்.

    அவரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாத்துரை மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வரவேற்றனர்.

    ரெயில்வே போலீஸ் நிலையத்தில் உள்ள ரெக்கார்டுகளை ஆய்வு செய்த ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாரிடம் குறைகள் கேட்டார்.

    ரெயில் பயணிகளிடம் நல்லுறவுடன் நடந்து கொள்வது எப்படி? அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முறை குறித்து ஆலோசனை வழங்கினார்.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனும் அங்கு வந்து ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக ரெயில்வே போலீசார் ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க 90 பெண் போலீசார், 120 ஆண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் ரெயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    மற்ற ரெயில் நிலையங்களிலும் சி.சி.டிவி. கேமிரா பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் அந்த கேமிராக்களும் நடைமுறைக்கு வரும்.

    ரெயில்களில் கொள்ளை குற்றங்கள் குறைந்துள்ளது. ஆனால் செல்போன் திருட்டுகள் அதிகரித்து உள்ளன. அதையும் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    செல்போன் திருட்டுகளை தடுக்க ரெயில் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். சார்ஜர் போட்டுவிட்டு கழிவறைக்கு செல்வது, தூங்கி விடுவது, சட்டை பையில் செல்போனை வைத்து விட்டு ஜன்னல் ஓரத்தில் அஜாக்கிரதையாக இருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மகனுடன் சென்ற தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பவானி ரோடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த சின்னச்சாமி (வயது 50). விவசாயியான இவருக்கு திருமணமாகி, சித்ரா என்ற மனைவியும், சிவப்பிரகாஷ்(23)என்ற மகன் மற்றும் தர்ஷினி(21) என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.

    சின்னச்சாமி பெருந்துறைக்கு பைக்கில் வந்துள்ளார். பின்னர் தனது மகன் சிவப்பிரகாஷை பெருந்துறையில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்கள்.

    இவர்கள் பெருந்துறை, அண்ணாசிலை பகுதியில் வந்த போது, இவர்களுக்கு பின்னால் வந்த வேன் ஒன்று பைக்கின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னச்சாமி தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னச்சாமி மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். சிவப்பிரகாஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சத்தியமங்கலம் அருகே சாயப்பட்டரை உரிமையாளர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 31). சாயப்பட்டறை உரிமையாளர். இவரிடம் வேலை பார்த்தவர் முருகேசன் (31). இவர்கள் 2 பேரும் மேலும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (40), விஜயகுமார் (31), நிஷாந்த் (23) என 5 பேரும் ஒரு காரில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவிலில் நடந்த ஒருதிருமண விழாவில் பங்கேற்க சென்றனர்.

    திருமண விழா முடிந்த பிறகு அதே காரில் அவர்கள் நேற்று இரவு 10.30 மணியளவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    இவர்கள் வந்த கார் சத்தியமங்கலம் அருகே முருகன்மேடு என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்தவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி கூக்குரலிட்டனர். இந்த விபத்தில் சாயப்பட்டரை உரிமையாளர் சரவணகுமார் மற்றும் முருகேசன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மற்ற 4 பேரும் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் பலியான 2 பேருக்கும் திருமணமாகி ஒரு மகன் உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி அருகே வீட்டு கதவை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி அடுத்த மொடச்சூரை சேர்ந்தவர் சதா சிவம்(வயது50). பலகாரம் விற்கும் வியாபாரி. சதாசிவம் தனது குடும்பத்துடன் காஞ்சி புரத்தில் உள்ள கோவில் விழாவுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் வீட்டை நோமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    உள்ளே இருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த துணிமணிகளை தாறுமாறாக வீசினர்.

    பிறகு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் மோதிரம் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்தநிலையில் ஊர் திரும்பிய சதாசிவம் வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு அருகே மளிகைக்கடையில் ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் கம்யூட்டர்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பூந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல், ஈஸ்வரமூர்த்தி. இவர்கள் 2 பேரும் கூட்டாக பூந்துறை ரோட்டில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர்.

    அவர்கள் கடையில் இருந்த ரூ.80 ஆயிரம் ரொக்க பணம், 3 கம்ப்யூட்டர்கள், அவற்றின் சி.பி.யூ., மானிட்டர்கள், ஒரு லேப்-டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை கடை திறக்கப்பட்டது. அப்போது கடையில் பணம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடையின் பின்புறம் தகர ஷீட்டினால் ஆன மேற்கூரை உள்ளது. இதனை பொருத்தி இருந்த போல்ட்களை கழற்றியுள்ள கொள்ளையர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    நாமக்கலில் கடன் தொல்லை காரணமாக பனியன் கம்பெனி அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    நாமக்கல் மாவட்டம் கிழக்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் தீபன் (வயது 30).

    திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்துள்ளார். மனைவி அனிதா, மகன் பிரசித் ஆகியோருடன் திருப்பூரில் வசித்து வந்தார்.

    தொழில் காரணமாக பல இடங்களில் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்தார்.

    இந்த நிலையில் கிழக்கு பாலப்பட்டியில் தீபனின் உறவினர் ஒருவர் இறந்து போனார். இதற்காக மனைவி, மகனுடன் தீபன் சென்றார்.

    அங்கு மனைவி, மகனை விட்டுவிட்டு அவர் மட்டும் திருப்பூருக்கு காரில் திரும்பி வந்தார். பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள பெட்ரோல் பங்கின் பின்புறம் காரை நிறுத்தினார்.

    அங்கிருந்து மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து விட்டதாகவும், சாகப் போகிறேன் என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

    காரில் தீபன் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். #tamilnews
    ×