என் மலர்
ஈரோடு
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குள்பட்ட 23 ஊராட்சிகளில் சுதந்திரதினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் சாவடிபாளையம்புதூர் பகுதி பொதுமக்கள் குடிநீர், சாலைவசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதர வேண்டும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதிகாரிகள் மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விரிவாக பொதுமக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.
இதேபோல், அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற கூட்டத்தில் நியாயவிலைகடைகள் குறித்தும், சுகாதாரம், மின்சாரவசதி, இலவச வீடு கட்டும் திட்டம், குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டது.
ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்க தலைவர் கே.ஆர். சுதந்திரராசு தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டு, மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க அரசு அனுமதிக்க கூடாது என்று மனு அளித்தனர். அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதேபோல் பல்வேறு மற்ற ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டங்கள் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு சூளை, அருள் வேந்தன் நகரில் ஒரு வாடகை வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் அந்த வீட்டை கண்காணிக்க வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார்.
இதையடுத்து டவுன் போலீஸ் டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணன், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர்.
அப்போது இரவு நேரத்தில் அந்த வீட்டுக்கு சந்தேகப்படும்படியாக பலர் சென்று வருவதை போலீசார் அறிந்தனர். இதையடுத்து அந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.
அங்கு 4 பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. அந்த 4 பெண்களும் ஈரோட்டை சேர்ந்தவர்கள். அவர்களை போலீசார் மீட்டனர். அவர்கள் 4 பேரும் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை கணவன்- மனைவியான முருகன்- யசோதா ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை என்ன ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர். வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனரா? என்று விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இந்த விபசார கும்பலுக்கு பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஏதும் இருக்குமா? என்றும் விசாரணை நடக்கிறது.
தென்மேற்கு பருவ மழை மீண்டும் பலமாக கொட்டி வருவதால் கர்நாடகம், கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி மலை பகுதி மற்றும் கேரள மாநில வன எல்லையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. வரலாறு காணாத வகையில் தண்ணீர் வரத்தால் பவானிசாகர் அணை நிரம்பியது. இதை தொடர்ந்து அணைக்கு வரும் 40 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பவானி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 2 நாட்களாகவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி சத்தியமங்கலம் பவானி ஆற்றில் இருகரைகளையும் தாண்டி வெள்ளம் சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர், தொட்டாம்பாளையம் மற்றும் ஆலத்துக்கோம்பை, நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல ஊர்களில் உள்ள சுமார் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
தொட்டாம்பாளையத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் முக்கால் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் உள்ள பொருட்கள் துணி மணிகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன.
சத்தியமங்கலம் அருகே ஆலத்துக்கோம்பை பகுதியில் பவானி ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து ரோட்டிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேன் இன்று காலை 7 மணியளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வரச்சென்றது. ரோட்டில் தண்ணீர் ஓடியதால் டிரைவர் அதில் வேனை இயக்கினார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய வேன் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஒரு புறமாக கவிழ்ந்து மூழ்கியபடி சாய்ந்து நின்றது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் - பதட்டமும் ஏற்பட்டது. பொதுமக்கள் துணையுடன் அந்த வேன் மீட்கப்பட்டது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்திருந்தால் விபரீதம் ஆகி இருக்கும்.
இதேபோல் பவானி நகரில் பாலக்கரை, சின்னாற்று பாலம், பூ மார்க்கெட் பகுதியில் சுமார் 50-வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அந்த வீடுகளில் வசித்த மக்கள் பவானி அரசு மாணவிகள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் பள்ளி பாளையத்தில் காவிரி ஆற்று வெள்ளம் 500-க்கும் மேற்படட வீடுகளை சூழ்ந்து உள்ளது. 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அப்பகுதி மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காவிரி மற்றும் பவானி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மாவட்ட கலெக்டர் பிரபாகர் கரையோர பகுதி மக்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். அவர் பல்வேறு இடங்களுக்கு ரோந்து சென்று பொதுமக்களை சந்தித்து அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறி வருகிறார்.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி, ஈஞ்சம்பள்ளி பி.கே.பி. சாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா ரத்த தான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் மொடக்குறிச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கொடி அசைத்து மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அதிகாரி டார்த்தி தொடங்கி வைத்தார்.
பி.கே.பி.சாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அதிகாரி லட்சுமணன், முதல்வர் வைஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொடக்குறிச்சி நால்ரோட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஒன்றிய அலுவலகம், ஈஸ்வரன் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, போலீஸ் நிலையம் உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நால்ரோட்டில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவ- மாணவிகள் கையில் ஏந்தியபடி சென்றனர்.
இதில் வேளாளர் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் லலிதா, செல்வி, கவிதா, சுகன்யா, விவேகானந்தா ரத்த தான இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னிமலையை சேர்ந்தவர் கேசவராஜ். பெயிண்டர். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 25). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பவித்ரன் (3) என்ற மகனும், பிரணவர்ஷன் என்ற 3 மாத கைக்குழந்தையும் உள்ளனர். குழந்தை பெறுவதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டி.என்.பாளையம் அருகே அனுமன் நகரில் உள்ள தன்னுடைய தாய் மகேஸ்வரி வீட்டுக்கு தேன்மொழி வந்தார். குழந்தை பிறந்ததும் அங்கேயே தங்கி இருந்தார்.
கேசவராஜ் அவ்வப்போது அனுமன் நகர் சென்று தேன்மொழியையும், தனது குழந்தையையும் பார்த்து வந்தார். பவித்ரன் சென்னிமலையில் உள்ள கேசவராஜின் வீட்டில் தங்கி இருந்தான். தேன்மொழி சில ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.
மகேஸ்வரி நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தேன்மொழியும், 3 மாத கைக்குழந்தையும் தனியாக இருந்து உள்ளனர். 9.30 மணி அளவில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து திடீரென தேன்மொழி தன் மீதும், கைக்குழந்தை மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீப்பற்றியதும் உடல் கருகி வலி தாங்க முடியாமல் தேன்மொழி அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தேன்மொழியின் வீட்டுக்கு ஓடி வந்தனர். உடனே அவர்கள் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டுப்போட்டு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர்களால் வீட்டை திறக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் வீட்டின் மேல் பகுதிக்கு ஏறி சென்று சிமெண்டு மேற்கூரையை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது தேன்மொழி மற்றும் அவருடைய கைக்குழந்தை உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வம், பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேன்மொழி மற்றும் அவருடைய கைக்குழந்தை உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தேன்மொழிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ.அசோகனும் விசாரணை நடத்தி வருகிறார்.
சத்தியமங்கலம் திருநகர் காலனி மில் ரோட்டை சேர்ந்தவர் ஜான் சாமுவேல் (வயது 28). சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் மொபைல் கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி பெயர் ஷீலா (24). நேற்று இரவு வழக்கம்போல இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். காற்றுக்காக வீட்டு ஜன்னலை திறந்து வைத்திருந்தனர். ஐன்னல் ஓரத்தில் ஷீலா படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவன் வீட்டின் பின்புற சுவர் குதித்தான்.
பிறகு ஜன்னல் வழியாக கையை விட்ட அவன் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ஷீலாவின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகைளை பறித்தான்.
திடுக்கிட்ட ஷீலா எழுந்து சத்தமிட்டார். வெளியே வந்து பார்ப்பதற்குள் அந்த கொள்ளையன் பின்புற சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் நீலகிரி மற்றும் கேரள மாநில வனப்பகுதி எல்லையில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.
நீலகிரியில் பெய்து வரும் கன மழையால் கடந்த 2 நாட்களாகவே பவானிசாகர் அணைக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
இன்று (செவ்வாய்க்கி ழமை) காலை 10 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 928 கன அடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று 100 அடியை எட்டியது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 850 கன அடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 450 கன அடியும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் மொத்த கொள்ளளவு 120 அடி ஆகும். இதில் 15 அடி சேறும் சகதியும் நிறைந்தது. மீதி 115 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. #BhavanisagarDam
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணி தொடக்க விழா இன்று நடந்தது.
தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்ட பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிரூபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1 லட்சம் மாணவ- மாணவிகள் சேர்ந்து உள்ளனர். அடுத்த ஆண்டு 3 லட்சம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளியில் சேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகர பகுதிகளைப் போல் மலைப்பகுதி அரசு பள்ளிகளிலும் ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ ஆரம்பிக்கப்படும். மலைப் பகுதி பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
மாணவ- மாணவிகள் தங்களது குறைகளை- புகார்கள் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மாணவ- மாணவிகள் புகார் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். புகார் கூறுபவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். தொடர்ந்து இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தியாவிலேயே முதன் முதலாக இந்த திட்டம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #EducationDepartment
ஈரோடு:
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கில் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.
மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.ே.கஎஸ் இளங்கோவன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் மாவட்ட அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், பொருளாளர் பழனிச்சாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஈ. பிரகாஷ்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை ராமு, ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி,குணசேகரன் செங்கோட்டையன், சாமி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன். திமுக மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் கோட்டைப் பகுதி செயலாளர் ராமச்சந்திரன் கிங் பூபதி.
ம.தி.மு.க பொருளாளர் கணேசமூர்த்தி, தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் கோபால், பகுதி செயலாளர் நைனாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. சந்திரசேகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ்.
விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல அமைப்புச்செயலாளர் விநாயகமூர்த்தி ,மாநகராட்சி செயலாளர் அம்ஜத் கான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தொழிற்சங் தலைவர் ஜெகநாதன் மக்கள் நீதி மையம் கட்சியின் கிழக்குத் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தம் எம் ராஜேஷ்.
திராவிடர் கழகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
மல்லிகை அரங்கில் தொடங்கிய ஊர்வலம் சத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வீதி மணிக்கூண்டு கனி மார்க்கெட் பன்னீர் செல்வம் பார்க் வழியாக காளைமாடு சிலை அருகே போட்டு சிம்மில் நிறைவடைந்தது.
பின்னர் இரங்கல் கூட்டம் நடந்தது கூட்டத்தில் திரளாக கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கும், அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் நன்றி கூறினார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன்பாளையம் குரங்கன் ஓடை அருகே செல்லாத்தாபாளையம் பிரிவு பேரூந்து நிறுத்தம் பகுதியில் கடந்த 10நாள்களாக காவிரிக்குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக அருகில் சாக்கடையில் சென்று கலக்கிறது.
இக்குடிநீர் குழாய் மூலமாக அய்யகவுண்டன் பாளையம், செல்லாத்தாபாளையம், பாலிக்காடு, வேலம் பாளையம் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு காவிரியாற்று குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குழாய் உடைப்பு காரணமாக மேற்கண்ட ஊர்களில் சரிவர தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, காவிரி குடிநீர் இணைப்புகளை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்தான் சரி செய்யவேண்டும் என்றும், அவர்கள் தற்போது காவிரியாற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் தற்போது அங்கு பணியில் உள்ளனர். இதனால் தற்போது இதை சரிசெய்ய இயலாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
நீலகிரியை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் அமிர் தவல்லி (வயது 26). சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மாவேலி பாளையம் ரெயில் நிலையத்தில் ஸ்டேசன் போர்ட்டராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சொந்த வேலையாக அமிர்தவல்லி ஈரோடு வந்திருந்தார்.
பிறகு அவர் இரவில் ஈரோடு ரெயில்வே காலனி பார்சல் ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருட்டு பகுதியில் மறைந்திருந்த ஒரு மர்ம ஆசாமி திடீரென வந்து அமிர்தவல்லியை மறித்தான். பிறகு அவரை மிரட்டி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றான்.
ஆனால் நகையை பறிக்க விடாமல் அவர் கொள்ளையனுடன் போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கொள்ளையன் அமிர்த வல்லியை தாக்கினான். முகத்தில் கையால் குத்தினான்.
இதில் நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். எனினும் நகையை பறிக்க விடாமல் நகையை கையால் இருக்கி பிடித்து கொண்டார். மேலும் திருடன்... திருடன்.. என கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டதும் அங்கு சிலர் ஓடி வந்தனர். அவர்களிடம் சிக்கி கொள்ளாமல் அந்த கொள்ளையன் தப்பி ஓடி விட்டான்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துணிகர சம்பவம் பற்றி சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
கோபியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் திடீரென மாயமானார்கள். இவர்கள் பள்ளி கூடம் போவதாக சொல்லிவிட்டு ஈரோடு வந்தனர்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களான இவர்கள் ஈரோடு ரெயில் நிலையம் வந்தனர். பிறகு இருவரும் சென்னை செல்லும் ரெயிலில் ஏறினர். நேற்று அதிகாலை சென்னை ரெயில் நிலையத்தில் இறங்கி எங்கே செல்வது? என தவித்தப்படி இருந்தனர்.
இதற்கிடையே மாணவர்கள் மாயமானது பற்றி கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவர்களை பல இடங்களில் தேடி வந்தனர். மேலும் செல்போன், வாட்ஸ்அப் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
சென்னை ரெயில் நிலையத்தில் தவித்த 2 மாணவர்களை கண்டு போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் வந்த போட்டோகளை வைத்து பார்த்த போது மாயமான கோபியை சேர்ந்த மாணவர்கள் தான் இவர்கள் என தெரிய வந்தது.
உடனே சென்னை போலீசார் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோபி போலீசார் சென்னை சென்று மாணவர்களை மீட்டு வந்தனர். அவர்களிடம் போலீசார், ‘‘ஏன் சொல்லி கொள்ளாமல் சென்னை போனீர்கள்?’’ என்று கேட்டனர். அதற்கு மாணவர்கள் ‘‘பரீட்சையில் நாங்கள் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தோம். இதனால் வீட்டில் திட்டுவார்கள் என பயந்த போய் விட்டோம்’’ என்று கூறினர்.
பிறகு மாணவர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.






