என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஊரடங்கால் கொடிவேரி அணை மூடப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    கடத்தூர்:

    கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. இந்த அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்போது குளித்து மகிழ்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள், பண்டிகை, விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், நாமக்கல், பள்ளிபாளையம், மேட்டுப்பாளையம், அவினாசி மற்றும் பல ஊர்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பஸ், கார், வேன், இருசக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு வருவார்கள். அதேபோல கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கவும் சுற்றுலா பயணிகள் வந்து தண்ணீரில் குளித்துவிட்டு செல்வார்கள்.

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த 55 நாட்களாக கொடிவேரி அணை மூடப்பட்டே கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் யாரையும் குளிக்க அனுமதிக்காததால் அணை வெறிச்சோடி காணப்படுகிறது.

    கடந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறையின்போது அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. அப்போது மார்ச், ஏப்ரல், மே 3 மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.17 லட்சத்து 9 ஆயிரத்து 225 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அணை மூடப்பட்டதால் ரூ.17 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்து கொடிவேரி அணையில் எப்போது குளிக்க அனுமதிப்பார்கள்? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
    ஊரடங்கால் அந்தியூர் வெற்றிலைச் சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது. வெற்றிலை விலை குறைந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் உள்ள எண்ணமங்கலம், கோவிலூர், வட்டக்காடு, பிரம்மதேசம், வெள்ளையம்பாளையம், வேம்பத்தி, ஆப்பக்கூடல், அத்தாணி, கள்ளிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகளை விவசாயிகள் வாரம்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அந்தியூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    இதற்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெற்றிலையை வாங்கி செல்வது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களாக அந்தியூர் வாரச்சந்தை மூடப்பட்டு உள்ளது. இதனால் சந்தைக்கு வெளியே வெற்றிலை விற்பனை நடந்து வருகிறது.

    அதேபோல் நேற்று சந்தை கூடியது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் வியாபாரிகள் வருகை குறைந்திருந்தது. குறைவான வியாபாரிகளே வந்திருந்தனர். இதனால் வெற்றிலை விலை குறைந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    நேற்று நடந்த சந்தையில் ராசி ரக வெற்றிலை கட்டு ஒன்று ரூ.50 முதல் ரூ.70 வரையும், அதேபோல் பீடா ரக வெற்றிலை ரூ.15 முதல் ரூ.25 வரையும், செங்காம்பு ரூ.15-க்கும் என மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை ஆனது.

    ஈரோட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போர்வைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
    ஈரோடு:

    மஞ்சள் மாநகரமாக திகழும் ஈரோடு, ஜவுளித்தொழிலுக்கும் பெயர் பெற்றது. ஈரோடு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் குறிப்பிட்ட ரக துணிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் சிறந்த வரவேற்பு உள்ளது. இதில் போர்வைகளும் முக்கியத்துவம் பெறுகிறது. ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் போர்வைகளை மற்ற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், வெளிமாநில வியாபாரிகளும் வந்து மொத்தமாக வாங்கி செல்கிறார்கள்.

    இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஜவுளிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் விற்பனை செய்ய முடியாமல் குடோன்களிலேயே அடுக்கி வைத்து உள்ளனர். ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால், பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் உள்ள ஜவுளிக்கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் வாடிக்கையாளர்கள் வராததால் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.

    இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஈரோட்டிற்கு வந்து ஜவுளிகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கே அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. நாங்கள் போர்வைகளை மொத்த வியாபாரம் செய்கிறோம். இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களின் வியாபாரிகளை நம்பியே உள்ளோம்.

    ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஈரோட்டிற்குள் வர அனுமதிக்க எத்தனை மாதங்கள் ஆகும் என்றே கூற முடியாது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் கொரோனாவால் வீழ்ச்சி அடைந்த தொழிலை எப்படி மீட்டெடுக்க போகிறோம் என்றே புரியாமல் தவிக்கிறோம். கடந்த 2 மாதங்களாக போர்வைகளின் உற்பத்தி இல்லாமல் இருந்தாலும், போக்குவரத்து வசதி இல்லாததால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட போர்வைகளையும் அனுப்பி வைக்க முடியாமல் தவிக்கிறோம். இதனால் ஈரோட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போர்வைகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே சரக்குகளை அனுப்பி வைக்கும் வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா வருவதை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் வேப்பிலையை தனது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் கட்டி வைத்து பயணம் செய்து வருகிறார்.
    சென்னிமலை:

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் தமிழ்செல்வன். இவர் சென்னிமலை பகுதியில் 6 இடங்களில் உள்ள மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தினமும் அங்கு சென்று வருகிறார். அப்போது பலரையும் சந்திக்கும் நிலை ஏற்படுவதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என அவர் கருதினார். எனவே கொரோனா வருவதை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் முக கவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி வருகிறார். மேலும் வேப்பிலையை தனது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் கட்டி வைத்து பயணம் செய்து வருகிறார்.

    இதேபோல் சென்னிமலையில் பெரும்பாலான வீட்டு வாசல்கள் மட்டுமின்றி கடை வாசல்களிலும் கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் வேப்பிலைகளை வைத்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பெரிய சடையம்பாளையம் குளம் மீண்டும் நிரம்பியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியிலும் ஓரளவு மிதமான மழை பெய்தது. நீண்ட நாட்களாக கடும் வெப்பத்தில் வாடிய மக்களுக்கு இந்த மழை சற்று இதமாக இருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையில் சாலைகளில் தண்ணீர் ஓடியது. பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் நிரம்பிய பெரிய சடையம்பாளையம் குளம், பின்னர் வற்றத்தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் மீண்டும் நேற்று குளம் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சி அளித்தது.

    இதுபோல் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, கொல்லம்பாளையம் ஓடைகளிலும் வெள்ளம் அதிகமாக வந்தது. மிதமான இந்த மழையால் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ந்து உள்ளனர்.
    ஈரோட்டில் வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலமாக மாறி உள்ளது. இந்த சூழலில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளிலும் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை வட மாநில தொழிலாளர்கள் யாரும், ரெயில் அல்லது பஸ் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

    சுமார் 9 ஆயிரம் பேரிடம் இருந்து ஊர் திரும்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று கருங்கல்பாளையம், வைராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாய-சலவை பட்டறைகளில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் வைராபாளையம் நீரேற்று நிலைய ரோட்டில் கூடினார்கள். அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக விண்ணப்பம் செய்ய கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர்.

    வடமாநில தொழிலாளர்கள் ஊர்வலம் போன்று புறப்பட்டு நீரேற்று நிலையம் ரோட்டில் நடந்து வந்து கொண்டு இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கும்பலாக புறப்பட்ட வடமாநில தொழிலாளர்களை தடுத்து விவரம் கேட்டனர். அதற்கு, கடந்த 2 மாதங்களாக இங்கு வேலை வாய்ப்பு இல்லை. உடனடியாக வேலை கிடைக்கும் வாய்ப்பு இல்லை. எனவே நாங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்கிறோம் என்றார்கள்.

    போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது தொழிலாளர்கள் பெரும்பாலும் பீகார் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து உங்களின் கோரிக்கையை கலெக்டரிடம் தெரிவித்து உரிய தீர்வு காணப்படும். தற்போது யாரும் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டாம், கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால், வடமாநில தொழிலாளர்கள் அதை கேட்கவில்லை. அவர்கள் திடீர் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் தடுத்தும் கேட்காததால், தொழிலாளர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். போலீசாரின் திடீர் தாக்குதலை கண்டு வடமாநில தொழிலாளர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் தொழிலாளர்களை மீண்டும் அழைத்து அவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் ஆலை உரிமையாளர்களுடன் பேசி உரிய தீர்வு காணப்படும். சொந்த மாநிலம் செல்ல விரும்புபவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    ஈரோடு அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்த பாலிடெக்னிக் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான்.

    கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு கலெக்டர் அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டு வீசுவேன் என மிரட்டல் விடுத்த குடிமகனை போலீசார் கைது செய்யதனர்.
    ஈரோடு :

    ஈரோடு மாவட்டம் பவானி வெள்ளித் திருப்பூர் வெங்ககல்லூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி டாஸ்மாக் கடையில் மேலாளராக உள்ளார். துடுப்பதி பள்ளப்பாளையம் காலனியை சேர்ந்த தொழிலாளி கவுரிசங்கர் (36) மது வாங்க வந்தார். 

    டாஸ்மாக் மேலாளர் தியாகராஜன் வரிசையில் வந்தால் தான் மது தர முடியும் என கூறினார். கவுரிசங்கர் வரிசையில் வர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் பெருந்துறை போலீஸ் நிலையம், ஈரோடு கலெக்டர் அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டு வீசுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் கவுரிசங்கரை கைது செய்தனர்.
    வெள்ளோடு அருகே ரேஷன் கடை ஊழியரை தகாத வார்த்தையால் திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). ரேஷன் கடை ஊழியர். இவர் ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகர் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன்நகர் பகுதியை சேர்ந்த கவுதம்ராஜ் (25) என்பவர் சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

    இதனால் சரவணன் இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கவுதம்ராஜை கைது செய்தனர்.

    ஈரோட்டில் கொரோனா தொற்று பரவ காரணமான தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ஈரோடு:

    தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்ததாக ஈரோட்டில் கொரோனா அதிகமாக பரவியது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியம் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகளில் தங்கினார்கள். இதில் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் 6 பேர் மீது கொரோனா நோய் பரவ காரணமாக இருந்ததாக ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதற்கிடையே தாய்லாந்து நாட்டினருடன் உதவியாக இருந்த சிலருக்கும் கொரோனா வைரஸ் பரவியது. அவர்களும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

    இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக மேலும் 4 பேரை சூரம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். ஈரோடு கந்தசாமி வீதியை சேர்ந்த முகமது இஷ்பஹானி (வயது 68), கோபிசெட்டிபாளையம் வாய்க்கால்ரோடு ராமநாதன் வீதியை சேர்ந்த சாதிக்பாஷா (47), ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதியை சேர்ந்த சாகுல்அமீது (40), விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மகாராஜாபுரம் முஸ்லிம்தெருவை சேர்ந்த மைதீன் அப்துல்காதர் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முகமது இஷ்பஹானி மஞ்சள் வியாபாரியாகவும், சாகுல்அமீது கொடுமுடியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராகவும் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் தற்போது சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் 4 பெண்கள் உள்பட 6 பேர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களை அங்குள்ள கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் தற்போது சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாளிடம் கேட்ட போது, ஈரோடு மாவட்டத்தில் தற்போது சளி, இருமல் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். அவர்களை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவர்களுக்கு ரத்த பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதுபோல் தற்போது 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
    உணவுக்குழாயில் கேரட், பீட்ரூட் அடைத்துக்கொண்ட சினை பசுமாட்டை அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் காப்பாற்றினார்கள்.
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்பையைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. விவசாயி. கால்நடைகளும் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசுமாடு 9 மாத சினையாக இருக்கிறது. ஏற்கனவே இந்த பசு மாடு 13 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது.

    இந்த நிலையில் சினை பசுமாட்டுக்கு நேற்று உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. உணவு எதையும் உட்கொள்ளாமல் மயக்க நிலையிலேயே படுத்திருந்தது. மேலும் அதன் கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு இருந்தது.

    முத்துசாமி உடனே ஒரு சரக்கு ஆட்டோவில் பசுமாட்டை ஏற்றி கோபியில் உள்ள பல்நோக்கு (மல்டி ஸ்பெஷாலிட்டி) கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் விஷ்ணுகாந்தன், திருநாவுக்கரசு, தீபன்சக்ரவர்த்தி, கதிர்வேல் ஆகியோர் உடனே பசுமாட்டின் கழுத்தை ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அப்போது உணவுக்குழாயில் முழு கேரட் 2, பீட்ரூட் 2 அடைத்திருந்தது தெரிந்தது. இதனால் பசுமாட்டிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்கள்.

    இதைத்தொடர்ந்து 4 டாக்டர்களும் சேர்ந்து சுமார் 3 மணி நேரம் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து உணவுக்குழாயில் அடைத்திருந்த காய்கறிகளை அகற்றினார்கள். சிகிச்சைக்கு பின்னர் பசுமாடு நல்ல நிலையில் உள்ளது.

    இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த கால்நடை டாக்டர்கள் கூறும்போது, ‘கால்நடைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் வைக்கும்போது தொட்டியில் கடினமான பொருட்கள் உள்ளனவா? என்பதை பார்க்க வேண்டும். தண்ணீர் தொட்டியில் இருந்த கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை தெரியாமல் விழுங்கியதால்தான் இந்த மாட்டுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது’ என்றார்கள்.


    ×