search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுமாட்டிற்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது எடுத்த படம்
    X
    பசுமாட்டிற்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது எடுத்த படம்

    சினை பசுமாட்டை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய டாக்டர்கள்

    உணவுக்குழாயில் கேரட், பீட்ரூட் அடைத்துக்கொண்ட சினை பசுமாட்டை அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் காப்பாற்றினார்கள்.
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்பையைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. விவசாயி. கால்நடைகளும் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசுமாடு 9 மாத சினையாக இருக்கிறது. ஏற்கனவே இந்த பசு மாடு 13 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது.

    இந்த நிலையில் சினை பசுமாட்டுக்கு நேற்று உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. உணவு எதையும் உட்கொள்ளாமல் மயக்க நிலையிலேயே படுத்திருந்தது. மேலும் அதன் கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு இருந்தது.

    முத்துசாமி உடனே ஒரு சரக்கு ஆட்டோவில் பசுமாட்டை ஏற்றி கோபியில் உள்ள பல்நோக்கு (மல்டி ஸ்பெஷாலிட்டி) கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் விஷ்ணுகாந்தன், திருநாவுக்கரசு, தீபன்சக்ரவர்த்தி, கதிர்வேல் ஆகியோர் உடனே பசுமாட்டின் கழுத்தை ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அப்போது உணவுக்குழாயில் முழு கேரட் 2, பீட்ரூட் 2 அடைத்திருந்தது தெரிந்தது. இதனால் பசுமாட்டிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்கள்.

    இதைத்தொடர்ந்து 4 டாக்டர்களும் சேர்ந்து சுமார் 3 மணி நேரம் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து உணவுக்குழாயில் அடைத்திருந்த காய்கறிகளை அகற்றினார்கள். சிகிச்சைக்கு பின்னர் பசுமாடு நல்ல நிலையில் உள்ளது.

    இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த கால்நடை டாக்டர்கள் கூறும்போது, ‘கால்நடைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் வைக்கும்போது தொட்டியில் கடினமான பொருட்கள் உள்ளனவா? என்பதை பார்க்க வேண்டும். தண்ணீர் தொட்டியில் இருந்த கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை தெரியாமல் விழுங்கியதால்தான் இந்த மாட்டுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது’ என்றார்கள்.


    Next Story
    ×