என் மலர்tooltip icon

    ஈரோடு

    அம்மாபேட்டை பகுதியில் சூறாவளியுடன் மழைபெய்ததால் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள் மின்கம்பங்களின் மீது விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் நேற்று காலையில் இருந்து கடும் வெயில் அடித்தது. இந்தநிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளான கோனார்பாளையம், மூங்கில்பாளையம், மசகவுண்டனூர், கொமராயனூர், மாத்தூர், மறவபாளையம், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, ஜரத்தல், தொப்பபாளையம், புரவிபாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு மழை பெய்தது. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

    சனிச்சந்தை அண்ணா நகரில் 6 வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. தொப்பபாளையத்தில் மின்கம்பங்களின் மீது மரங்கள் விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. மேலும் வாழைகள், பப்பாளி மரங்கள் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்தன. சில இடங்களில் வீட்டிற்கு முன்பு போடப்பட்டு இருந்த பந்தல்கள் சரிந்தன. வீடுகளின் ஓடுகளும் சேதம் அடைந்தன. ஏராளமான வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொப்பாளையம் பகுதியில் மின்வினியோகம் சீராக மின்வாரிய ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    ஈரோடு சம்பத்நகர்-பெரியார் நகர் பகுதிகளில் உழவர் சந்தை மீண்டும் இயங்கத்தொடங்கியது. இங்கு விவசாயிகள் வந்து செல்ல பஸ்கள் இயக்கப்படுமா? என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு சம்பத்நகர் மற்றும் பெரியார்நகர் பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வந்தன. சம்பத்நகர் உழவர் சந்தைக்கு தினசரி சுமார் 150 விவசாயிகளும், பெரியார் நகர் உழவர் சந்தைக்கு தினசரி சுமார் 30 விவசாயிகளும் தங்கள் தோட்டத்து விளைபொருட்களை நேரில் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த உழவர் சந்தைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டன. தற்காலிகமாக ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உழவர் சந்தை செயல்பட்டது.

    இந்த நிலையில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டதால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறையத்தொடங்கியது. எனவே விவசாயிகளின் பொருட்கள் விற்பனையாகாத நிலை ஏற்பட்டது. இதனால் 50 முதல் 60 விவசாயிகள் மட்டுமே சந்தைக்கு வரத்தொடங்கினார்கள். எனவே மீண்டும் சம்பத்நகர், பெரியார் நகர் பகுதிகளில் சந்தை இயங்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று பழைய இடங்களிலேயே உழவர் சந்தைகள் செயல்பட தொடங்கின.

    பொதுமக்களும் ஆர்வமாக வந்து இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்சிக்சென்றனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “உழவர் சந்தைகளுக்கு பொருட்கள் கொண்டு வரும் விவசாயிகள் வசதிக்காக அதிகாலை நேரத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களில் பெரும்பாலும் விவசாயிகள் மட்டுமே வருவோம். இப்போது பஸ்கள் இல்லாததால் தினசரி சந்தைக்கு வர முடியவில்லை. 2 சக்கர வாகனங்களில் அதிகாலை நேரத்தில் பொருட்களை வைத்துக்கொண்டு வருவது பாதுகாப்பு இல்லாதது. எனவே உழவர் சந்தை விவசாயிகள் வந்து செல்வதற்கு வழக்கமான நேரத்தில் குறிப்பிட்ட பஸ்களை மட்டுமாவது இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.
    சென்னையில் இருந்து அகழ்வாராய்ச்சிக்கு சென்ற தொல்லியல் துறையினர் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் பல ஆண்டுகளாக தொல்லியல் துறையினரின் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே இதற்காக தொல்லியல் துறை ஆய்வாளர் ஒருவரும், பயிற்சியாளர்கள் 4 பேரும் என மொத்தம் 5 பேர் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்னிமலைக்கு வந்தனர்.

    அவர்கள் 5 பேருக்கும் சென்னிமலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதால், சென்னையில் இருந்து வந்த தொல்லியல் துறையினர் 5 பேரையும் ஒரு தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர். 
    ஈரோடு பெரியார்நகர் பகுதி அதிமுக சார்பில் மாநகர் பகுதியில் உள்ள கால்டாக்சி டிரைவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் விழா பெரியார்நகர் பகுதியில் நேற்று நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு பெரியார்நகர் பகுதி அ.தி.மு.க. சார்பில், மாநகர் பகுதியில் உள்ள கால்டாக்சி டிரைவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் விழா பெரியார்நகர் பகுதியில் நேற்று நடந்தது. விழாவுக்கு பெரியார்நகர் பகுதி செயலாளர் ரா.மனோகரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கால்டாக்சி டிரைவர்கள் 150 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார்கள்.

    இதில் தமிழ்நாடு அனைத்து கால்டாக்சி உரிமையாளர் நலச்சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் தங்கமணி, அ.தி.மு.க. வார்டு செயலாளர் வேல்முருகன், நிர்வாகிகள் மூர்த்தி, கொங்கு சீனு, சார்லி, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் செய்திருந்தார்.
    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அறிவிப்புக்கு முன்பு தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் அந்த பள்ளிக்கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தனியார் பள்ளிக்கூடங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பிளஸ்-2 பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வர மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பு தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகுந்த ஆதாரத்துடன் புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
    துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் வந்த தனியார் நிறுவன ஊழியர் கார் மோதி பலியானார்
    குண்டடம்:

    ஈரோடு அருகே முத்தூர் மெயின் ரோடு சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் விஜயகுமார்(வயது42), இவர் தனியார் விதை நிறுவனத்தில் விற்பனை பிரநிதியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாராபுரம் அருகே வரப்பாளையத்தில் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் கொடுவாய் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    தாராபுரம் திருப்பூர் ரோட்டில் காதப்புள்ளபட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக விஜயகுமாரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    கடந்த 37 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு விளங்கி வந்த நிலையில், நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் மூலம் பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 37 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவர் கவுந்தப்பாடியை சேர்ந்த 50 வயது ஆண் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கவுந்தப்பாடியில் இருந்து கோபிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி கால் உடைந்தது. அவர் காயத்துக்கு கட்டு போட்டுள்ளார். ஆனாலும் கால் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் கொரோனா சிறப்பு மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் சேலத்திலேயே இருந்ததால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கொரோனா பாதித்த நபரின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து வந்துள்ளார். அவர் மூலம் இவருக்கு கொரோனா பரவியதா அல்லது காலில் காயம் ஏற்பட்டதற்கு கட்டு போட சென்ற இடத்தில் பரவியதா என தெரியவில்லை. அவருக்கு எப்படி பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    கடந்த 37 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு விளங்கி வந்த நிலையில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் மூலம் பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒருவர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா வைரஸ் முதன்முதலில் அடியெடுத்து வைத்த மாவட்டம் காஞ்சிபுரம். அதன்பின் ஈரோடு மாவட்டம் சென்னையுடன் போட்டியிட்டது. ஆனால் கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக அமல்படுத்தியதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை 70-க்குள் நிறுத்தியது. இதில் ஒருவர் உயிரிழக்க 69 பேருக்கு சிகிச்சை அளித்து வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.

    கடந்த 37 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏதும் இல்லாமல் இருந்தது. இதனால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 71-ஆக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் இன்று 786 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணி செய்ய ரூ.62 லட்சத்தில் நவீன வாகனத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு இயக்கி வைத்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகரத்தை பொலிவுறச்செய்யும் இந்த திட்டத்தில் அடுத்த கட்டமாக சாலைகளை தூய்மை செய்யும் நவீன வாகனம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.62 லட்சம் செலவில் வாங்கப்பட்டு உள்ள இந்த வாகனம் பல நவீன தொழில் நுட்பங்கள் கொண்டது. சாலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் இது ஈடுபடும்.

    இதன் செயல்பாடுகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நவீன தூய்மை பணி வாகனத்தை பார்வையிட்டு இயக்கி வைத்தார். இதில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி போகும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத முழு பாதுகாப்பு வழங்கப்படும்.

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விவரமாக இன்று மாலை அறிக்கை வெளியிடப்படும்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி போகும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இந்த தேர்வு 15-ந் தேதி நடைபெறும். அதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். மே 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

    15-ந் தேதிக்குள் இயல்பு நிலை திரும்பி விடும். வருகிற 25-ந் தேதி விமான போக்குவரத்து தொடங்கப்படுகிறது. 1-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது.

    10-ம் வகுப்பு தேர்வு மையம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முன்பு 3,084 தேர்வு மையம் இருந்தது. தற்போது 12,672 மையங்கள் செயல்படும், மாணவர்கள் அந்தந்த பள்ளியில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும். மலை பகுதி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திங்களூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி. அவருடைய மகன் ரமேஷ் (வயது 26). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு விசைத்தறிக்கூடத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    ரமேஷ் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் சில நாட்களிலேயே உடல்நலக்குறைவால் அந்த பெண் இறந்துவிட்டார். ஊத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகள் சசிகலா (20). ரமேசும், சசிகலாவும் அருகருகே உள்ள ஊர் என்பதால் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சசிகலாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதில் விருப்பம் இல்லாத சசிகலா கடந்த 14-ந் தேதிக்கு ரமேசுக்கு போன் செய்து, எனக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். எனவே நாம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து ரமேசும், சசிகலாவும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி பவானிக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் சன்னதியில் ரமேசின் அண்ணன் சுரேஷ் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே ராஜ்குமார் மகளை காணாதது குறித்து திங்களூர் போலீசில் புகார் செய்தார்.

    இதுபற்றி அறிந்த சசிகலா கணவருடன் உடனே காரில் அங்கிருந்து புறப்பட்டு திங்களூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம், சசிகலா, என் விருப்பபடியே நான் காதல் திருமணம் செய்து கொண்டேன். இதை யாரும் தடுக்க உரிமை கிடையாது. நீங்கள் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம்’ எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றார்.

    அதைத்தொடர்ந்து 2 பேரும் காரில் ஏறி அங்கிருந்து புளியம்பட்டிக்கு புறப்பட்டனர். திங்களூர்-நல்லாம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சென்றபோது அவர்களது காரின் குறுக்கே மற்றொரு கார் வந்து நின்றது. இதனால் காரை நிறுத்தினர். அப்போது மற்றொரு காரில் இருந்து சசிகலாவின் உறவினர்கள் 6 பேர் உள்பட 10 பேர் திபுதிபு வென இறங்கினர்.

    திடீரென அவர்கள் காரில் இருந்த சசிகலாவின் கையைப்பிடித்து இழுத்து தாங்கள் வந்த காருக்குள் தள்ளினர். மேலும் ரமேசுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அதன்பின்னர் காரில் ஏறி சசிகலாவுடன் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.

    தனது கண் முன்பே காதல் மனைவி கடத்தப்பட்டதால் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திங்களூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சசிகலாவை கடத்திச்சென்றதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய மாணவர் மாரடைப்பு காரணமாக பலியானதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    கருங்கல் பாளையம்:

    ஈரோடு கருங்கல் பாளையம் கமலாநகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சதிஷ்குமார் (16).நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் சதிஷ் குமார் செல்போனில் பப்ஜி விளையாட்டை ஆன் லைனின் நண்பர்களுடன் குழுவாக விளையாடுவது வழக்கம்.

    சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள மாட்டுச்சந்தை திடலில் அமர்ந்து அவர் பப்ஜி விளையாட்டு விளையாடி கொண்டிருந்தார்.அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர் சதிஷ் குமாரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சதிஷ்குமார் மாரடைப்பு காரணமாக வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.


    ×