search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவுளிக்கடையில் தேக்கமடைந்து உள்ள போர்வைகள்
    X
    ஜவுளிக்கடையில் தேக்கமடைந்து உள்ள போர்வைகள்

    ஈரோட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போர்வைகள் தேக்கம்

    ஈரோட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போர்வைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
    ஈரோடு:

    மஞ்சள் மாநகரமாக திகழும் ஈரோடு, ஜவுளித்தொழிலுக்கும் பெயர் பெற்றது. ஈரோடு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் குறிப்பிட்ட ரக துணிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் சிறந்த வரவேற்பு உள்ளது. இதில் போர்வைகளும் முக்கியத்துவம் பெறுகிறது. ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் போர்வைகளை மற்ற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், வெளிமாநில வியாபாரிகளும் வந்து மொத்தமாக வாங்கி செல்கிறார்கள்.

    இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஜவுளிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் விற்பனை செய்ய முடியாமல் குடோன்களிலேயே அடுக்கி வைத்து உள்ளனர். ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால், பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் உள்ள ஜவுளிக்கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் வாடிக்கையாளர்கள் வராததால் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.

    இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஈரோட்டிற்கு வந்து ஜவுளிகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கே அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. நாங்கள் போர்வைகளை மொத்த வியாபாரம் செய்கிறோம். இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களின் வியாபாரிகளை நம்பியே உள்ளோம்.

    ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஈரோட்டிற்குள் வர அனுமதிக்க எத்தனை மாதங்கள் ஆகும் என்றே கூற முடியாது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் கொரோனாவால் வீழ்ச்சி அடைந்த தொழிலை எப்படி மீட்டெடுக்க போகிறோம் என்றே புரியாமல் தவிக்கிறோம். கடந்த 2 மாதங்களாக போர்வைகளின் உற்பத்தி இல்லாமல் இருந்தாலும், போக்குவரத்து வசதி இல்லாததால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட போர்வைகளையும் அனுப்பி வைக்க முடியாமல் தவிக்கிறோம். இதனால் ஈரோட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போர்வைகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே சரக்குகளை அனுப்பி வைக்கும் வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×