என் மலர்
ஈரோடு
ஈரோட்டில் மஞ்சள் ஏலம் 4 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. உரிய விலை கிடைக்காததால் மஞ்சளை விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். இந்தநிலையில் மஞ்சளின் ஏற்றுமதி கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 40 சதவீதம் உயர்ந்து உள்ளது. இதனால் தரமான மஞ்சளுக்கு வரவேற்பு கிடைத்து உள்ளது. விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.8 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.
மஞ்சள் விலை உயர்ந்து இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் தங்களது மஞ்சளை சற்று அதிகமாக கொண்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு புது மஞ்சள் வரத்தும் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.சத்தியமூர்த்தி கூறியதாவது:-
ஈரோடு மஞ்சள் வளாகத்தில் உள்ள ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து புது மஞ்சள் 500 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. இதேபோல் பழைய மஞ்சள் 1,500 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டன. இதில் பழைய விரலி மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 414 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 569 வரையும், புதிய விரலி மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 209 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 699 வரையும் விற்பனை ஆனது.
பருவமழை பெய்ததன் காரணமாக அறுவடை பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டதால், இந்த ஆண்டு புதிய மஞ்சள் வரத்து குறைவாக உள்ளது. அதேசமயம் ஏற்றுமதி அதிகமாக இருப்பதால் மஞ்சளின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தை காட்டிலும், ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளில் ரூ.200 முதல் ரூ.300 வரை விலை உயர்ந்து உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி உள்ளதால் ஈரோடு சந்தைக்கு தினமும் சுமார் 200 மூட்டைகள் மஞ்சள் வரத்து ஏற்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் அறுவடை பணிகள் முடிவு பெற வாய்ப்புள்ளதால், மஞ்சளின் வரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து நேரடியாக வங்காளதேசத்துக்கு கிசான் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சரக்கு ரெயிலில் விவசாய விளை பொருட்கள் குறைந்த கட்டணத்தில் கொண்டு செல்ல முடிகிறது. அதில் மஞ்சளும் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே மஞ்சளின் நுகர்வு அதிகரிக்க தொடங்கி இருப்பதால், மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபி அடுத்த கொரவம் பாளையத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. மாதத்தில் முதல் சனிக்கிழமை மற்றும் 3-ம் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது.
உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் டி.ஆர்.பி. தேர்வு எழுதுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் வனச்சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் திண்டுக்கலில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆசனூர் அடுத்த செம்மண் திட்டு அருகே ஒற்றை காட்டு யானை சாலையை வழிமறைத்து நின்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஒட்டிகள் வாகனத்தை தூரமாக நிறுத்தி கொண்டனர். இருபுறமும் வாகங்கள் அணிவகுத்து நின்றன. சாலையில் உலா வந்த காட்டு யானை பின்னர் தானாக வனப்பகுதிக்குள் சென்றது.
அதன் பின்னர் வாகனங்கள் சென்றன. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தார்கள். அதன்பின்னர் சில மாதம் முன்பு போலீசார் சிறுமியை மீட்டனர்.
இந்தநிலையில் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதுபற்றி மகளிடம் பெற்றோர் விசாரித்தபோது, வெள்ளி திருப்பூர் மாக்களூரை சேர்ந்த சண்முகம் (வயது 49) என்பவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார்கள். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சண்முகம் கொளப்பலூரில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 14 ஆயிரத்து 590 ஆக உயர்ந்தது.
அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 283 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 157 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பூம்புகார் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளா (20). செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவி மற்றும் மாமியாரை வெளியே அனுப்பி விட்டு உள்புறமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரம் ஆகியும் அவர் கதவை திறக்காததால் அவருடைய மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது செந்தில்குமார் மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்தில் யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கும் நிலையில், சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சாலைகளின் ஓரங்களில் அவ்வப்போது தென்படும் சிறுத்தை, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனத்தை ஒட்டிய ஊருக்குள் நுழைந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள நல்லா கவுண்டன் கொட்டாய் பகுதியில் இரவு 9 மணி அளவில், வழக்கத்தைவிட நாய்கள் அதிக அளவில் குரைத்துள்ளது.
நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திவாகர் ( 21) என்பவர், வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, நாய்கள் துரத்தியதில், திவாகரின் கண்ணெதிரில் சுமார் 3 மீட்டர் இடைவெளியில், மின்னல் வேகத்தில், சிறுத்தை ஒன்று ரோட்டை நான்கு கால் பாய்ச்சலில் கடந்தது. இதைப் பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்த திவாகர், இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார். மேலும் சிறுத்தையை 3 மீட்டர் இடைவெளியில் பார்த்த திவாகர், ஒருமணி நேரம் அச்சத்தில் இருந்து மீளவில்லை என கூறினார்.
இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் கால்நடை மருத்துவர் அர்ஜூனன் என்பவரது வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் சிறுத்தை ரோட்டைக் கடக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
இதுவரை காட்டிலிருந்த சிறுத்தை முதன்முறையாக ஊருக்குள் நுழைந்து இருப்பது ஊர் பொது மக்களிடையேயும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடையையேயும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அசம்பாவிதம் ஏற்படும் முன், கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவை சேர்ந்த 50 வயது நபர் கூலித்தொழில் செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி கடந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த 2½ மாதத்தில், தந்தையே குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து குழந்தையின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தையின் தந்தையை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பிறந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக குழந்தையின் தந்தைக்கு 20 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் சிறுமியை கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது வெள்ளித்திருப்பூர் மாக்களூரை சேர்ந்த சண்முகம் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது.
சண்முகம் கொளப்பலூரில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். அதே மில்லில் அந்த சிறுமியும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சிறுமியிடம் சண்முகம் ஆசை வார்த்தை கூறி கடத்தி உள்ளார். இதனையடுத்து சண்முகம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு, அசோகபுரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை, சூரம்பட்டி, சித்தோடு, லக்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் விசைத் தறிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
உற்பத்தி செய்யப்படும் ரயான் ரகம் குஜராத், மகாராஸ்டிரா போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்நிலையில் சமீபகாலமாக ரயான் நூல் விலை உயர்ந்த அளவுக்கு ரயான் துணி ரகம் உயரவில்லை.
தீபாவளி அன்று ஒரு கிலோ ரயான நூலின் விலை ரூ.150 க்கு விற்பனையானது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி கிலோ ரூ.168-க்கு விற்பனையானது. டிசம்பர் 25-ந் தேதி கிலோ ரூ.230 ஆக அதிகரித்து விற்பனையானது.
இதனால் ரயான் ரகம் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இதையடுத்து ரயான் ரக உற்பத்தியை 11 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு விசைத் தறியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று முதல் வரும் 21-ந் தேதி வரை 11 நாட்களுக்கு ரயான் ரகம் மட்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன்படி ஈரோடு பகுதியில் உள்ள 30 ஆயிரம் விசைத்தறியில் நாள் ஒன்றுக்கு சுமார் 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிக்கப்படும்.
இதன் மூலம் தினமும் ரூ.7.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும் என்று விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட ரூ. 82 கோடி மதிப்பிலான வர்த்தக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மற்ற ரகங்கள் தயாரிப்பு பணிகள் வழக்கம் போல நடைபெற்று வருவதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர். மூலப் பொருளான பஞ்சு விலை உயரும்போது மட்டுமே நூல் விலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். அல்லது மாதம் ஒருமுறை நூல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என விசைத் தறியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






