என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில்
பிறந்து 2½ மாதமான பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஈரோடு:
அந்தியூர் தாலுகாவை சேர்ந்த 50 வயது நபர் கூலித்தொழில் செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி கடந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த 2½ மாதத்தில், தந்தையே குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து குழந்தையின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தையின் தந்தையை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் பிறந்த குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக குழந்தையின் தந்தைக்கு 20 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்.
Next Story






