என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறையில் நாளை மாலை 4 மணிக்கு ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று அவர்கள் மத்தியில் பேசி வருகிறார்.

    இதில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி வருகிறார்கள்.

    அதன்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெருந்துறை- விஜயமங்கலம் 4 வழி சாலை காடப்பமடை பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடுகிறார். இதில் மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய தொகுதி மக்களின் குறைகளை கேட்டு அவர்களிடம் மனுக்களை பெற்று கொள்கிறார். இந்த மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படுகிறது.

    இதை தொடர்ந்து நாளை மாலை 4 மணிக்கு பெருந்துறையில் ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.

    ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், சேலம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாய சங்கங்கள் சார்பில் தி.மு.க. வுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் கோரிக்கைகள் முன் வைத்தும் இந்த மாநாடு நடக்கிறது.

    மாநாட்டுக்கு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காசியண்ண கவுண்டர் தலைமை தாங்குகிறார். இதில் தமிழக விவசாயிகள் சங்கங்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம், உப்பாறு பாசன விவசாயிகள், கெயில் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சங்கம், ஐ.டி.பி.எல். திட்ட பாதுகாப்பு விவசாயிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஈரோடு வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட அந்தியூர் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்று பேசுகிறார்.

    இதில் கோபி, அந்தியூர், பவானிசாகர், பவானி தொகுதி பொதுமக்கள் மற்றும் மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
    பங்களாப்புதூர் அருகே பஸ், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வன ஊழியர் பலியானார்.
    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் அருகே உள்ள டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 54). இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுச்சூழல் வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் ஈரோட்டில் துறை சார்ந்த தேர்வு எழுதி விட்டு இரவு கோபியில் இருந்து டி.என்.பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து செல்வன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை அருகே சாவிலும் இணை பிரியாமல், கணவர் இறந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மனைவியும் இறந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் என்கிற பழனிச்சாமி (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி முத்தாயம்மாள் (71). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

    இதனால் ஓலப்பாளையத்தில் கணவன், மனைவி மட்டும் வசித்து வந்தார்கள். இந்தநிலையில், நேற்று காலை 10 மணி அளவில் மாணிக்கம் கண்ணவேலம் பாளையத்தில் உள்ள தன்னுடைய தோட்டத்திற்கு சென்றார். அப்போது அவர் மயங்கிக் கீழே விழுந்து அதே இடத்தில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு யாரும் இல்லாததால் மாணிக்கம் இறந்து கிடந்தது தெரியவில்லை. மாலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்ற சிலர் அவர் இறந்து கிடப்பதை பார்த்து, மாணிக்கத்தின் பக்கத்து வீட்டுக்காரரான சுப்பிரமணியம் என்பவரிடம் தகவல் கொடுத்தார்கள். உடனே சுப்பிரமணியம் மாணிக்கத்தின் மனைவி முத்தாயம்மாளிடம் இதுபற்றி கூறியுள்ளார். கணவர் இறந்த செய்தியை கேட்டதும் அப்போது அவரும் மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டார்.

    கணவர் இறந்த செய்தியை அறிந்ததும் மனைவியும் இணைபிரியாமல் இறந்த சம்பவம் ஓலப்பாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருமணம் ஆன 7 மாதத்திலேயே கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே திருமணமான 7 மாதத்தில் கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொன்ற கர்ப்பிணியை போலீசார் கைது செய்தனர். செக்ஸ் தொல்லை கொடுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காளியண்ணன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவருடைய மகன் நந்தகுமார் (வயது 35). விவசாயி.

    இவருக்கும், பவானி அருகே உள்ள பெரியமோளபாளையத்தை சேர்ந்த ஆனந்தன் என்பரின் மகள் மைதிலிக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி நந்தகுமார் தன்னுடைய தோட்டத்தில் பயிருக்கு மருந்து தெளித்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு உள்ளார். அப்போது உணவு கசந்ததால் அதை கீழே கொட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டார். அங்கு மதியம் தான் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு உள்ளார். அந்த உணவும் கசந்ததால், அதையும் கீழே கொட்டினார்.

    இதற்கிடையே அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த 31-ந் தேதி அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 15-ந் தேதி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நந்தகுமாருக்கு உணவில் விஷம் கலந்து கொன்றதாக அவருடைய மனைவி மைதிலி அந்தியூர் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தத்திடம் சரண் அடைந்தார். உடனே மைதிலியை கிராம நிர்வாக அதிகாரி அந்தியூர் போலீசில் ஒப்படைத்தார்.

    இதைத்தொடர்ந்து மைதிலியிடம் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், ‘நந்தகுமாருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. ஆனால் திருமணம் ஆன 4 மாதத்திலேயே நந்தகுமாரை விட்டு அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மேலும் கணவன், மனைவி விவாகரத்து பெற்றதாகவும் தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைதிலியை 2-வதாக நந்தகுமார் திருமணம் முடித்தார். தொடக்கத்தில் நந்தகுமாருக்கு குடும்பம் நடத்துவதில் ஆர்வம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அந்தியூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி மைதிலி கர்ப்பம் அடைந்தார்.

    ஆஸ்பத்திரியில் பெற்ற சிகிச்சைக்கு பின்னர், மைதிலிக்கு நந்தகுமார் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னால் இந்த செக்ஸ் தொல்லையை தாங்க முடியவில்லை என நந்தகுமாரிடம் மைதிலி தெரிவித்து உள்ளார். எனினும் நந்தகுமார் அதை காது கொடுத்து கேட்கவில்லை என தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் நந்தகுமாரின் செக்ஸ் தொல்லை அதிகமாகவே அவர் மீது மைதிலிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் சாப்பாட்டில் விஷம் கலந்து கணவரை கொன்றது,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மைதிலியை போலீசார் கைது செய்தனர். தற்போது மைதிலி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து ரூ.250 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பழனி பிரசாத பார்சல், அவரவர் வீடுகளைத்தேடி விரைவு தபால் மூலம் வழங்கப்படும்.
    ஈரோடு:

    ஈரோடு தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தபால் துறையுடன் பழனி தண்டாயுதபாணி (முருகன்) கோவில் நிர்வாகம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி தற்போதைய கொரோனா சூழலில் பக்தர்கள் கோவிலுக்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பழனி பஞ்சாமிர்தம், விபூதி, ராஜ அலங்கார திருஉருவப்படம் ஆகியவற்றை ரூ.250-க்கு வழங்குகிறது.

    இதற்கான படிவம் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து ரூ.250 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பழனி பிரசாத பார்சல், அவரவர் வீடுகளைத்தேடி விரைவு தபால் மூலம் வழங்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? என்பதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
    டி.என்.பாளையம்:

    கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டி.என்.பாளையம் வனப்பகுதி கிராமம் விளாங்கோம்பை பகுதியில் பள்ளிக்கூடங்களை திறப்பதில் சிரமம் உள்ளது. வனத்துறை ஒத்துழைப்போடு பள்ளிகள் தற்போது திறக்கப்பட உள்ளது. விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் மலைக்கிராம பகுதியில் நடமாடும் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேர்தலை பொறுத்தவரையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு பின்பு தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் நினைத்து கல்வி கற்று கொடுக்கின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.

    தமிழகத்தில் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைபாடு இல்லை. பிளஸ்-2 தேர்வில் எத்தனை பேர் தேர்வு எழுதுகின்றனர் என்பது பற்றி நாளை (அதாவது இன்று) அறிவிக்கப்படும். ஒரு அறைக்கு 25 பேர் இருக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

    எப்போதும் அரசு பள்ளிக்கூடங்களுக்கு 98 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வருகின்றனர். இடைநிற்றல் என்பதே தமிழகத்தில் இல்லை. மாணவர்கள் சேர்க்கை கூடுதலாக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்

    பிளஸ்-2 தேர்வில் ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலை பொருத்தவரை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு பிறகு தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் நினைத்து கல்வி கற்று தருகின்றனர்.

    பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.

    தமிழகத்தில் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைபாடு இல்லை. பிளஸ்-2 தேர்வை எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும். பிளஸ்-2 தேர்வில் ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தலுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளிக்கு வராத பிளஸ்-2 மாணவர்கள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு எழுதலாம். இப்போது அரசு பள்ளிகளில் 98 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இடைநிற்றல் என்பதே தமிழகத்தில் இல்லை. மாணவர்கள் சேர்க்கை கூடுதலாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே குளிர்பானத்தில் சாணிபவுடர் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தட்டாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். கூலிதொழிலாளி. இவரது மகள் கவுரி (19). இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மனம் உடைந்த கவுரி வீட்டில் குளிர்பானத்தில் சாணிபவுடரை கலந்து குடித்து மயங்கினார்.

    இதையடுத்து அக்கம், பக்கத்தினர் மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே கவுரி இறந்து விட்டார்.

    இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பிளஸ்-2 தேர்வு அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டது. இதில் எந்த குழப்பமும் இல்லை. ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு அட்டவணை அறிவிப்போம்.

    மூன்றாம் பாலினத்தவர்கள் விளையாட்டில் கலந்து கொள்ள எந்த நிபந்தனையும் இல்லை. மாவட்டம் தோறும் அனைத்து விளையாட்டையும் ஒருங்கிணைத்து விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ரூ.35 கோடி கேட்டு உள்ளோம். மத்திய அரசிடம் தற்போது போதிய நிதி இல்லாததால் இன்னும் வழங்கப்படவில்லை.

    நூலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்காலிக ஆட்கள் மூலம் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள எட்டிக்கொட்டை பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சுப்பாத்தாள். இவர்களுக்கு கோதைநாயகி (17), ஹரிணிஸ்ரீ (13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகள் கோதை நாயகி ஆப்பக்கூடல் புதுப்பாளையம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பும், 2-வது மகள் ஹரிணிஸ்ரீ 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    நேற்று பெற்றோர் வெளியில் சென்று விட்டனர். ஹரணிஸ்ரீ ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோதைநாயகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெளியில் சென்ற பெற்றோர் மாலை வீடு திரும்பினர். அப்போது மாணவி கோதைநாயகி தூக்கில் பிணமாக தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி கோதை நாயகி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழகம் முழுவதும் அரசு துறை சார்ந்த தேர்வுகளை 1 லட்சத்து 37 ஆயிரத்து 721 பேர் எழுதுகிறார்கள் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.
    ஈரோடு:

    அரசு துறையில் பணியாற்றி வருபவர்களில் பதவி உயர்வுக்காக துறை சார்ந்த தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது.

    இந்த தேர்வு ஈரோட்டில் நேற்று 2 மையங்களில் நடந்தது. இதனை பார்வையிடுவதற்காக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் ஈரோட்டுக்கு வந்தார். அவர் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தேர்வு உபகரணங்களை ஆய்வு செய்தார்.

    அதன்பிறகு ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த தேர்வை அவர் பார்வையிட்டார். பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 152 வகையான துறை சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    கடந்த 14-ந் தேதி தொடங்கிய தேர்வுகள் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 54 ஆயிரத்து 161 பேர் தேர்வை எழுதி வருகின்றனர். 152 துறை சார்ந்த தேர்வை மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 721 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    ஈரோட்டில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், வள்ளலார் மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆகிய மையங்களில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோட்டில் நேற்று காலை நடந்த தேர்வை 92 பேரும், மாலையில் நடந்த தேர்வை 49 பேரும் எழுதினார்கள்.

    இந்த ஆய்வின்போது ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    ஈரோட்டில் கட்சிக்கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே தேர்தலில் கூட்டணி வியூகம் அமைக்கும் பணிகள் அரசியல் கட்சியினரிடையே தொடங்கப்பட்டு உள்ளன. பிரபல கட்சிகளுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமையும் என்கிற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் கட்சிக்கொடிகள், தோரணங்கள் ஆங்காங்கே கட்டப்படுவது வழக்கம். குறிப்பாக தலைவர்கள் பிரசாரத்தில் பங்கேற்கும் இடங்களில் வழிநெடுகிலும் கட்சிக்கொடிகள் கட்டப்படுகின்றன. எனவே தேர்தல் பிரசாரத்தில் கட்சிக்கொடிகள் தேவை அதிகமாக இருப்பதால், அதை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஜவுளி மாநகரமாக திகழும் ஈரோட்டில் கட்சிக்கொடிகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் கடைகளில் கட்சிக்கொடிகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து கட்சிக்கொடிகளை தயாரிக்கும் ஒருவர் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு கட்சிக்கொடிகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் சமயத்தில் அதிகமாக கட்சிக்கொடிகள் விற்பனை செய்யப்படும் என்பதால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பே கட்சிக்கொடிகளை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம். தயாரிக்கப்பட்ட கட்சிக்கொடிகளை விற்பனைக்காக வைத்து உள்ளோம்.

    அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிக்கொடிகள் அதிகமாக தயார் செய்வோம். இந்த கொடிகள்தான் அதிக அளவில் விற்பனையாகிறது. மேலும், பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிக்கொடிகளையும் தயாரிக்கிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் தேர்தல் பிரசாரம் இன்னும் சூடுபிடிக்க தொடங்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து ஆர்டர் குறைவாக காணப்படுகிறது. அதேசமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கூட்டணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு பிரசாரம் தீவிரமாக இருக்கும். அப்போது கட்சிக்கொடிகள் அதிகமாக விற்பனையாகும். இதற்காக கட்சிக்கொடிகளை அதிகமாக தயாரித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×